Sunday, December 28, 2014

காயிதே மில்லத்தின் அரசியலும், இன்றைய முஸ்லிம் அரசியலும்!

காயிதேமில்லத் மரணித்தபோது புதுக்கல்லூரி வளாகத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கே இறுதி மரியாதை செலுத்த வந்த தந்தைப் பெரியார், 'தம்பி போயிட்டீங்களா..' என குலுங்கினார். 'நான் போயி இந்தத் தம்பி வாழ்ந்திருக்கக்கூடாதா' என விசும்பினார். 'இனி இந்தச் சமுதாயத்தை யார் காப்பாற்றுவார்' என குமுறினார். 'இனி முஸ்லிம் சமுதாயத்திற்கு இவர் போல ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்' என கருத்துரைத்தார்.

பெரியாரின் வலி மிகுந்த அந்த வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதை, இன்றைய முஸ்லிம்களின் அவல நிலையிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.
காயிதேமில்லத்திற்கு மொழி உணர்வு இருந்தது; அதனால்தான் 1948 இல் அவர் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்தபோது இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தமிழை ஆக்க வேண்டும் என வாதம் புரிந்தார்.

காயிதேமில்லத்திற்கு இன உணர்வு இருந்தது; அதனால்தான் திராவிட இயக்கத் தலைவர்களுடன் அவர் தோழமை கொண்டு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற அச்சாணியாகச் செயல்பட்டார்.

காயிதேமில்லத்திற்கு சமுதாய உணர்வு இருந்தது; அதனால்தான் முஸ்லிம் இட ஒதுக்கீடு, தனித்தொகுதி முறை ஆகிய உரிமைகளுக்காக சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் தொடர்ந்து முழங்கினார்.

காயிதேமில்லத்திற்கு தொலைநோக்கு இருந்தது; அதனால்தான் 1950 களிலேயே தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் கல்வி நிறுவனங்களை முஸ்லிம்கள் உருவாக்க அவர் காரணமாக இருந்தார்.

காயிதேமில்லத்திற்கு ஊடகங்களைப் பற்றிய பார்வை இருந்தது; அதனால்தான் வடமாநிலங்களில் இருப்பது போன்று சென்னையிலும் திரைப்பட பயிற்சிக் கல்லூரியை நிறுவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பொது ஊடகங்களுடன் நல்லுறவைக் கடைபிடித்தார். தம் சொந்த முயற்சியினால் 'முஸ்லிம்' என்ற நாளிதழையும், 'உரிமைக்குரல்' என்ற வார இதழையும் நடத்தினார்.

காயிதேமில்லத்திற்கு மனித உரிமையில் ஆர்வம் இருந்தது; அதனால்தான் ஏழைகள், அனாதைகள், உழைப்பாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் அவர் நின்றார்.

காயிதேமில்லத்திற்கு சமூகத் தீமைகள் மீது கோபம் இருந்தது; அதனால்தான் குதிரைப் பந்தயத்தை ஒழிக்க வேண்டும் என அவர் சட்டப்பேரவையில் பேசினார். அவ்வாறு ஒழித்தால் அதில் பணியாற்றும் முஸ்லிம்கள்தான் அதிகம் வேலையிழப்பார்கள் என ஒரு உறுப்பினர் குறிப்பிட்டபோது, மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து அதன்மூலம் வாழக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கெட்டுப்போகட்டும் என கொந்தளித்தார்.

காயிதேமில்லத்திற்கு நாட்டுப்பற்று இருந்தது; அதனால்தான் இந்தியாவுக்கு எதிரான சீன ஆக்கிரமிப்பின்போது, இந்திய ராணுவத்தில் பணியாற்ற தமது ஒரே மகனைத் தியாகம் செய்தார்.

காயிதேமில்லத்திற்கு கலை, இலக்கியத்தின் மீது காதல் இருந்தது; அதனால்தான் அவர் பராசக்தி பட விழாவிலேயே பங்கேற்றார். நாகூர் ஹனீபாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்டார்.

காயிதேமில்லத்திற்குப் பிற தத்துவங்களைப் பற்றிய பரந்த பார்வை இருந்தது; அதனால்தான் அவர் படிக்கின்ற காலத்திலேயே பைபிள் போட்டியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.

காயிதேமில்லத் தமது வாழ்நாளில் ஒருபோதும் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம் அரசியலையும் போட்டுக் குழப்பிக் கொண்டதில்லை. அவர், இஸ்லாமியக் கொள்கைகளை பிசகாமல் பின்பற்றிய நல்ல முஸ்லிமாகவும் வாழ்ந்தார். அதேசமயம் பன்முகத்தன்மை கொண்ட இந்தியச் சூழலில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட நல்ல அரசியல் தலைவராகவும் இருந்தார். அவருக்குப் பிறகு முஸ்லிம்களுக்கான தலைமைப் பொறுப்பை பெற்றவர்கள் மார்க்கத்தையும் அரசியலையும் போட்டுக் குழப்பிக் கொண்டதே முஸ்லிம்களின் அரசியல் பின்னடைவுக்கான காரணம்.

இப்போது தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் மூன்று தமிழர் தூக்கு விஷயத்தில் முஸ்லிம் தலைவர்கள் காக்கும் மெளனம், பொது அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. முஸ்லிம்கள் தமக்கு ஏதேனும் பாதிப்பு என்றால், தமக்காக எல்லோரும் போராட வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால், மற்றவர்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் பேரமைதி காப்பார்கள் என்கிற விமர்சனம் ஏற்பட்டுள்ளது.

மூன்று தமிழர் தூக்கு விஷயத்தில் முஸ்லிம் தலைவர்கள் அமைதி காப்பதற்கு 'இஸ்லாம் மரண தண்டனையை வலியுறுத்துவதுதான்' காரணமாக இருக்க முடியும். மூன்று தமிழரை தூக்கில் போடக்கூடாது என்று சொன்னால் அது மரண தண்டனைக்கு எதிரான குரலாக ஆகிவிடும். மரண தண்டனைக்கு எதிரான குரலாக அது மாறுவது இஸ்லாமிய கருத்தியலுக்கு எதிரான விஷயமாக முடிந்துவிடும் என அவர்கள் கருதுகின்றனர். ஒரு அரசியல் பிரச்சனையை அரசியல் பிரச்சனையாகப் பார்க்காமல் அதை மார்க்கத்தோடு முடிச்சுப் போட்டு அனுகுவதால்தான் அரசியல் அரங்கில் இன்றைய முஸ்லிம் தலைமையினால் அடுத்தக் கட்டத்திற்கு நகர முடியவில்லை.

கேரளாவில் கம்யூனிஸ்டுகளுடனும், தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தினுடனும் கூட்டணி வைத்து முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு மிகப்பெரும் அரசியல் அடையாளத்தைப் பெற்றுத்தந்தவர் காயிதேமில்லத். கம்யூனிஸ்ட்களும், திராவிட இயக்கத்தவர்களும் கடவுள் மறுப்பாளர்கள் என்பதனால் அவர்களோடு எப்படி இறைநம்பிக்கையுள்ள நாம் கூட்டணி சேர்வது என அவர் மத அடிப்படையில் யோசித்திருந்தால் முஸ்லிம்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. பொது அரங்கில் இன்று முஸ்லிம்கள் என்றாலே அருவருக்கத்தக்க ஒரு பார்வையும், அச்சம் கொள்ளத்தக்க ஒரு நிலையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தப்பார்வையைப் போக்கவும், நிலையை மாற்றவும் முஸ்லிம் தலைமையிடம் வியூகம் இல்லை.

அரசியலுக்குப் போனால் அனைவரையும் கையெடுத்துக் கும்பிட வேண்டி வரும்; மனிதர்களை கும்பிடுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது; எனவே நேரடி அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கருத்து முஸ்லிம்களிடம் பரப்பப்படுகிறது.

கவிதை, இசை, சினிமா அத்தனையும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை; எனவே அவற்றிலிருந்து விலகியிருக்கும்படி முஸ்லிம்களிடம் பரப்புரை செய்யப்படுகிறது.

முஸ்லிம் பெண்கள் எளிதில் கெட்டுப்போக காரணமாக இருக்கும் செல்போனையும், இன்டர்நெட்டையும், கேபிள் இணைப்பையும் துண்டியுங்கள் என முஸ்லிம்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆக, பொதுச்சமூகத்தோடு உரையாடக்கூடிய அத்தனை வாசல்களும் மார்க்கத்தின் பெயரால் அடைக்கப்படுகிறது. எல்லாவற்றிலும் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும்போது தீமையை மட்டுமே பெரிதுபடுத்தி, அரசியல், ஊடகம், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் என அத்தனை வடிவங்களையும் முஸ்லிம்கள் தொடர்ந்து நிராகரித்து வருவதால், பொது அரங்கில் அவர்களின் குரல் எடுபடுவதில்லை.

முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதற்கான சதிகளும், சூழ்ச்சிகளும் எங்கும் எதிலும் வியாபித்திருக்கும்போது, முஸ்லிம்களே தம்மை தனிமைப்படுத்திக் கொள்வது மேலும் மேலும் அவர்களை வலிமை இழக்கவே செய்யும்.

[ஆளூர் ஷாநவாஸ் எழுதிய 'குருதியில் நனையும் காலம்' நூலிலிருந்து]
 Aloor Shanavas
நன்றி :http://aloorshanavas.blogspot.in/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails