Monday, December 29, 2014

எது நபிவழி ..?


போராட்டங்கள் ,தியாகங்கள்,இழப்புகள்,உங்கள் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காத பிற இயக்கங்களால் கைவிடப்படல் இப்படியாக பல தடைகளையும் தாண்டி இன்று ஓங்கிய ஆலமரங்காய் பல இஸ்லாமிய
இயக்கங்கள் நம் சமுதாயத்திற்கு நிழல் தந்து கொண்டிருப்பதாக
நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நடுநிலைப் போக்கை எம்போன்றோர்களுக்கு சில விளக்கங்களைத் தர இவ்வொட்டு மொத்த இயக்கங்களும் கடமைப்பட்டுள்ளன

நடுநிலை என்றவுடன் இங்கொரு கால் அங்கொரு கால் வைத்திருப்பவர்கள்
என்று கருதவேண்டாம் நல்லதை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்கள் . இறைவாக்கினையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸுகளையும் ஆதாரமாகக்கொண்டு
எல்லாவற்றுக்கும் விளக்கம் தரும் நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக களமிறங்கும்போது மட்டும் அதே இறைவேதமும் ஹதீஸுகளும் உங்களுக்கு மட்டும் விதிவிலக்காகிப் போனதா என்று நினைக்கும் அளவிற்கு உங்களின் உயர்ந்த கொள்கையினை விட்டு சற்று சருகுவதாகவே எண்ணத்தோன்றுகிறது.

பாலஸ்தீனம்,ஈராக்,குஜராத்,காஷ்மீர்,இப்படி உலகில் எந்த தேசங்களில் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டாலும் கொதித்தெழுந்து உங்களின் எதிர்ப்பினையும் அனுதாபங்களையும் தெரிவிக்கும்
நீங்கள் அவர்கள் எந்த ஜமாஅத்தினர்கள் என்றோ அல்லது எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்றறெல்லாம் கருதாமல் மொத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்ற அடிப்படையிலேயே அவர்களுக்காய் களத்தில் இறங்கும் நீங்கள் அவர்களோடு உறவாடியிருக்கிறீர்களா?
அவர்கள் யாரென்றாவது அறிவீர்களா?
 வெறும் இஸ்லாமியர்கள் என்ற உணர்வு மட்டுமே நம்மில் மேலோங்கி நிற்கிறது. ஆனால் நேற்றுவரை தந்தையும் மகனுமாக,அண்ணனும் தம்பியுமாக, வாழ்ந்து வந்த நம் சமுதாயங்களுக்குள் செய்தித்தாள்களிலும் அகப்பக்கங்களிலும் தொலைக்காட்சிகளிலும் எதிர் இயக்கங்களுக்கு எதிராக மாறி மாறி குற்றச்சாட்டுகள் என்ற பெயரில் ஏகவசனத்தில் வசைமொழி பாடி வருவதுதான் உண்மை நபிவழி நடப்பவர்கள் என்று சொல்பவர்களின் உயர்ந்த பண்பா. உங்கள் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளதாக நீங்கள் கருதினால் உங்களிடமுள்ள தகுந்த ஆதாரங்களை அழகிய முறையில் உரியவர்களிடம் சமர்ப்பித்து தீயவர்களை சமுதாயத்தின் முன் தோலுறித்துக் காட்டுங்கள் பிறகு யார் மார்க்கத்தை வழிநடத்திச் செல்ல தகுதியுடையவர்களென்று நம்
சமுதாயத்தினர்கள் முன் நிரூபணமாகிவிடும் அதை விடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் தரம் தாழ்ந்து எழுதுவதும் பேசுவதும் தான் நீங்கள் அறிந்த இஸ்லாமிய நாகரீகமா ?

உங்களைப்போன்ற தலைவர்கள் செய்யும் இத்தகைய செயல்களால் உங்களைச் சார்ந்தோர்களுக்கும் எதிர்தரப்பினர்களுக்கும் பகைமையை அதிகரிக்க துணைபுரியும் தவிர வேறு எவ்வித நன்மையும் காண இயலாது .
அவர்கள் எங்களை தவறாக விமர்ச்சிக்கிறார்கள் அதனால் நாங்களும் அவர்கள் பாணியில் தான் பதிலடி தருவோம் என்று நீங்களோ அவர்களோ கருதினால் நீங்களும் அவர்களும் ஒன்றுதான் என்பதினை ஒத்துக்கொள்ளுங்கள்

"இறையச்சத்தைக் கொண்டே தவிர ஒருவர் மற்றவரை விட சிறந்து விளங்க முடியாது"
இஸ்லாம் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் மனிதநேயத்தையும் அமைதியையும் விரும்பி வலியுறுத்தும் மார்க்கம் என்று பிறருக்கு போதிப்பது மட்டும் போதாது

மூடப்பழக்கங்களிலும் சம்பிரதாயம் என்ற பெயரில் நடந்த மார்க்க சீர்கேடுகளிலிலும் மூழ்கி ஈமானை அடகு வைத்து வெவ்வேறு திசைகளில் பிரிந்து கிடந்த சமுதாயத்தினர்களை வாருங்கள் அல்லாஹ்வின் நேரான வழி இதுதான் அவனின் ஒற்றுமை யெனும் கயிற்றினைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்த நீங்களே இன்று அதே கயிற்றினை அறுத்து ஆளுக்கொரு துண்டாக பிடித்துக்கொள்ள கத்துயினை தீட்டிக்கூர்பார்ப்பது தான் நீங்களறிந்த நபிவழியா?

முதலில் நமது குளத்து நீரில் உள்ள பாசிகளையும் அசுத்தங்களையும் சுத்தம் செய்து நீரைத் தூய்மைப்படுத்தினால் ஆன்மீக தாகங்களைத் தீர்த்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு நாம் பிறருக்கு அழைப்புக் கொடுக்க வேண்டிய அவசியமிருக்காது சொல்ல வேண்டியவைகளை  சொல்லத் தேர்வு செய்தவர்கள் மூலம் இறைவன் அழகுற எப்போதே சொல்லிவிட்டான் பிறர் மனம் புண்படுமாறு பேசியும் நடந்தும் வாழ்ந்திராத உத்தம திருநபிகள் (ஸல்) அவர்களின் வழியினைப் பின்பற்றும் நாம் இத்தகையப்  போக்கினில் மென்மையை கடைப்பிடிக்கத் தவறினால் ஒருவர் பள்ளிவாசலுக்கு மற்றவர் உரிமைக்கோரி நீதிமன்றங்களின் படிகளில் ஏறியிறங்கிய பெருமையை மட்டுமே நாம் எல்லோரும் பகிர்ந்து கொள்ள முடியும் .


தமிழ் பிரியன் நசீர்

by mail from Najeer Ahamed
<ashanajeer2014@gmail.com>

1 comment:

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும்.....சகோ ,
நல்லா எழுதி இருக்கீறிர்கள் ...
இதை முஸ்லிம் இயக்க தலைவர்களுக்கு அஞ்சல் (போஸ்ட் )
செய்யவும் .....
ஒற்றுமையுடன் இருந்தால் சமுதாயத்துக்கு
நல்லது ......

LinkWithin

Related Posts with Thumbnails