Thursday, November 18, 2010

2 ஜி அலைவரிசை ஊழல் : பிரபல துபாய் நிறுவனத்திற்கு திமுகவுடன் தொடர்பு

புது தில்லி : ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழலுக்காக ராசா பதவி விலகினாலும் அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஊழல் தொடர்பாக தொலை தொடர்பு ஆணையம் லைலென்ஸை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ள 5 முக்கிய நிறுவனங்களில் ஒன்றுக்கு தமிழ்நாட்டுடன் அதிலும் குறிப்பாக திமுகவுடன் தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.


சர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்வான் டெலிகாம் ஜனவரி 2008ல் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றது. ஸ்வான் டெலிகாம் துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல நிறுவனமான ஈ.டி.ஏ ஸ்டாருக்கு ( ETA Star) சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பல கட்டுமான பணிகளை செய்து வரும் இக்குழுமத்தின் நிறுவனர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 2008ல் 2 ஜி அலைக்கற்றை வாங்கிய ஸ்பான் டெலிகாமிடமிருந்து 9 மாதங்கள் கழித்து துபாயின் பிரபல தொலைபேசி நிறுவனமான எடிஸலாட் (Etisalat) 45% பங்குகளை அதிக விலலக்கு வாங்கி எடிஸலாட் டி.பி (Etisalat DB) என பெயர் மாற்றம் செய்தது. இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் இதற்கு ஒரு வாரத்திற்கு முன் அதாவது செப்டம்பர் 17, 2008ல் வெறும் ஒரு இலட்சம் முதலீட்டில் ஜெனிக்ஸ் எக்ஸிம் (Genix Exim) வெண்டர்ஸ் எனும் நிறுவனம் தொடங்கப்பட்டது.
அதிர்ச்சியளிக்கும் விதமாய் மூன்று மாதங்கள் கழித்து டிசம்பர் 17, 2008 ல் வெறும் ஒரு இலட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் 380 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை எடிஸலாட் டி.பி.யிடமிருந்து வாங்கியுள்ளது. அதே சமயத்தில் பணம் எங்கிருந்து திரட்டப்பட்டது என்பதற்கு எவ்வித கணக்கு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஜெனிக்ஸ் எக்ஸிமை எடிஸலாட் டி.பியில் ஈ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்தின் அதிபர் சையது சலாஹூதினின் மகன் அஹமது சலாஹூதின் பிரதிநிதிப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுமம் திமுக அரசுக்கு சாதகமான ஒன்று என்பதும் காஞ்சிபுரத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட தமிழக அரசின் பல திட்டங்கள் இக்குழமத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் அனைவராலும் கவனிக்கப்பட கூடிய ஒன்றாக உள்ளது.
சென்னை அருகே 450 ஏக்கர் பரப்பில் ஒரு நகரம் ஈ.டி.ஏ ஸ்டார் குழுமத்தால் நிர்மாணிக்கப்படவிருக்கிறது. தமிழக அரசின் தலைமை செயலகமும் இக்குழுமத்தால் தான் கட்டப்பட்டது. தமிழக அரசின் மூலம் கிடைத்த இத்திட்டங்களுக்கு கைமாறாக சில மாதங்களுக்கு முன் இக்குழமத்துக்கு சொந்தமான சென்னை சிட்டி செண்டர் (City center - Chennai) தமிழக அரசின் ஆளும் குடும்ப பிரமுகர் ஒருவருக்கு கைமாற்றப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
Source :http://www.inneram.com/2010111811972/2g-spectrum-scam-dubai-company-linked-to-dmk

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails