Tuesday, November 23, 2010

திருமணத்தின் நோக்கம்

திருமணம் செய்தல் என் வாழ்க்கை வழியாகும் என்றொரு ஹதீஸிலும், எவர் இந்த வழியைப் பின்பற்றவில்லையோ அவர் என்முறை தவறியோர் ஆவர். என்று மற்றொரு ஹதீஸிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

திருமணத்தின் நோக்கம் சிற்றின்பத்தை அனுபவிப்பது மட்டுமல்ல. இரண்டு ஆத்மாக்களும் ஒன்று பட்டு இருவரிடமும் உள்ள இயற்கைத் தன்மைகளை சீர்படுத்துவதும் அதன் நோக்கமாகும். அன்பு மலர்களால் ஆழ்ந்த பூந்தோட்டம் என்னும் திருமணத்தை தம்பதிகள் தங்களது சுயநலம் காரணமாக போர்க்களமாக ஆக்கிவிடுகிறார்கள்.

 'இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா)

கடலில் படகுப்பயணம் செய்பவர்கள் படகில் ஓட்டை ஏற்பட்டால் தண்ணீர் உள்ளே வராதிருப்பதற்கு அதை அடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். முயற்சிகள் தோல்வியடைந்தால் வேறு படகில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான். ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவியரிடையே சூழ்நிலை சந்தர்ப்பங்கள் காரணமாக கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. சிந்திக்கத் திறனில்லாமை, ஆத்மீகப் பயிற்சியில்லாமை போன்ற காரணங்களினால் விவாகரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஒரு மூஃமினான ஆண் மூஃமினான தன் மனைவியை வெறுத்துவிட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன் விரும்பக்கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம். நபிமொழி (முஸ்லிம், அஹ்மத்)

 அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.
(திருக்குர்ஆன் 2:187)

என்றும் நம் நினைவில் வாழ்கிற காயிதே மில்லத் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்: ''தன்மானம் உள்ள முஸ்லிம் இளைஞன் தன் உழைப்பில் நம்பிக்கைக் கொண்டு அதன் மூலம் இறைவன் அளிப்பது மட்டும் போதும் என்ற உணர்வுடன் ஏழை வீட்டில் பெண் எடுப்பான். அவன் கைக்கூலிக்கோ மற்ற எந்த அற்ப பொருளுக்கோ ஆசைப்படமாட்டான். நமது மார்க்கச் சட்டம் தெரியாத இளைஞன் பணத்திற்கும் கைக்கூலிக்கும் ஆசைப்படுவான். அவனை நமது பெரியோர்கள் திருத்த வேண்டும். இல்லையயன்றால் நமது சந்ததியினருக்கு ஆபத்து வந்து சேரும்.''


கைக்கூலிக்கு ஆசைப்பட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மீண்டும் கைக்கூலி பெறுவதற்காகவே, தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் கயவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். படித்த இளைஞர்களும் பணத்திற்காக விலைப்போகும் கொடுமை இந்த நாட்டில் அதிகமாகி வருவது வேதனைக்குரியது.



 உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பியவாறு உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள். உங்கள் ஆத்மாக்களுக்காக (நற்செயல்களின் பலனை) அனுப்புவதில் முந்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன், 002:223)

நபி (ஸல்) அவர்கள் திருமணத்தில் வாழ்த்தும்போது ''பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கய்ர்'' என்று கூறுவார்கள். (திர்மிதீ, அபூதாவூத்)

''அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக''


Source : இஸ்லாமியச் சட்டம் (13) --நீடூர் A.M.சயீத்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails