மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை அடைந்திட வேண்டும் என்கிற தணியாத தாகத்துடன் கடந்த 63 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் சங் பரிவாரங்கள் தங்களது சதித்திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்திட எடுத்துக் கொண்ட வலிமையான ஆயுதம்தான் “அவதூறு பிரச்சாரம்”
நாட்டில் வாழும் முஸ்லிம்களை பற்றி கலாச்சார ரீதியாக, மதரீதியாக, பொருளாதார ரீதியாக, எப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை பாமர மக்களிடம் பரப்ப இயலுமோ அப்படியெல்லாம் பரப்பி வருகின்றனர் இந்த கோயபல்ஸின் வாரிசுகள்.
உலக அளவில் நவீன ஊடகங்கள் வழியாக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வரும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பல காரணங்கள் உண்டு. அதில் குறிப்பாக சமீப காலமாக ‘ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயரும் சமூகங்களால் ஏற்படும் புவி, அரசியல், பொருளாதார மாறுதல்கள்’ என்கிற சமூகவியல் ஆய்வுகளின் தகவல்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கி
இன்னும் 30 வருடங்களில் பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சதவீதம் பெரும்பான்மையாக மாறிவிடும் என்கிறது இந்த ஆய்வுகள். குறிப்பாக ஜெர்மனி, லண்டன் மாநகரம், பிரான்ஸ் போன்ற நாடுகள் இதில் அடக்கம்.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சி விகிதம் 225 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒருபுறம் இருக்க,
18 – 19 ஆம் நூற்றாண்டுகளில் எப்படி இஸ்லாத்துக்கு எதிராக பொய்களையும் புரட்டுக்களையும் அள்ளிவிட்டு இஸ்லாமிய நிலப்பரப்பில் புகுந்து அரசுகளைக் கவிழ்த்து, அபகரித்துக் கொண்டார்களோ, அது போல தற்போது சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு ஏகாதிபத்திய கொடுமதியாளர்களின் உலகளாவிய பொருளாதாரச் சுரண்டலுக்கு நிரந்தரமான முடிவுரை எழுதும் ஆற்றலும் வல்லமையும் வலிமையான கருத்தியல் கோட்பாடும் இஸ்லாம் ஒன்றுக்கு மட்டுமே உள்ளது என்பதால் அவதூறுகளை தங்களது பிரச்சார சாதனங்கள் மூலம் அயராது அள்ளிவிடுகின்றனர். இதன் தாக்கம் இந்தியாவிலும் இந்தியாவிலும் பெரிய அளவுக்கு எதிரொலித்திருக்கிறது.
கடந்த 25 வருடங்களாக உலக அளவிலும் இந்திய அளவிலும் இடைவிடாது முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி அள்ளிவிடப்பட்டு வந்த இந்த அவதூறு மூட்டைகள் தற்போது நவீனமெடுத்து தொழில்நுட்ப ரீதியாக வலிமை பெற்று அனைத்து ஊடகங்களின் வாயிலாக அயராமல் ஒலித்து வருகின்றன.
முஸ்லிம் என்கிற அடையாளத்தை தாங்கிய அனைவருமே பயங்கரவாதிகள் என்று ஊதி ஊதி பாமர மக்களையும் நம்பவைத்து விட்டனர். உலக அளவில் ஓங்கி ஒலிக்கப் பட்டு வரும் இந்த எதிர்ப்பு பிரச்சாரம் இந்தியச் சமூகத்திலும் உலககச் சமூகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
நடுநிலை பேணுவோர், ஜனநாயக சக்திகள் சத்தியத்தை நிலைநிறுத்திட தங்களால் இயன்ற அளவு முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அவதூறு போரில் தடுப்பு அரணாக வீற்றிருக்கின்ற போதிலும் அவதூறு பிரச்சாரத்தின் வலிமை சில நேரங்களில் தடுப்பு அரணையும் தாண்டிச் செல்கிறது.
இதன் விளைவுகளை முஸ்லிம் சமூகம் பெருமளவில் சந்தித்து வருகின்றது. நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்கள் தங்களது ஆய்வறிக்கையில் இது குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
“They (Muslims) carry a double burden of being labeled as ‘‘anti national’’ and as being “appeased” at the same time. Wile Muslims need to prove on a daily basis that they are not “anti national” and “Terrorist”.
“தேச விரோதிகள்” என்றும் “தாஜா செய்யப்படுகின்றனர்” என்றும் ஒரே நேரத்தில் குத்தப்பட்ட இரட்டை முத்திரையை இரட்டைச் சுமைகளாக முஸ்லிம்கள் சுமந்து கொண்டு இருக்கின்றனர்.
நாங்கள் “தேச விரோதிகளோ” “பயங்கரவாதிகளோ” அல்ல என்று தினமும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம்கள் இருக்கின்றனர்’’ – சச்சார் கமிட்டி அறிக்கை (பக்கம் – 11)
இந்திய நாட்டில் வேறெந்த சமூகத்திற்கும் இதுபோன்ற நெருக்கடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சமூக பாதிப்புகள் என்பது பல்வேறு மட்டத்தில் வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார ரீதியாக கடும் துன்பங்களை முஸ்லிம் சமூகம் அனுபவித்து வருகிறது.
பெருநகரங்கள் என்று சொல்லப்படும் மும்பய், டெல்லி போன்ற நகரங்களில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகள் மறுக்கப்படுகின்றன. தொழில் செய்வதற்கு ஏற்ற இடங்களோ, கடைகளோ மறுக்கப்படுகின்றன. சிறந்த பள்ளி கல்லூரிகளில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் அனுமதி மறுக்கப்படுகிறது. ஏறக்குறைய சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களாக வடமாநில முஸ்லிம்கள் கருதப்படுகின்றனர். இது ஒரு தேசிய அவமானம். 63 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டதிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.
இது குறித்து நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்கள் தனது ஆய்வறிக்கையில் கவலையோடு குறிப்பிட்டிருந்தும் கூட அரசின் மெத்தனப் போக்கால் இந்தப் பிரச்சினை தற்போது பெரிதாகி வருகிறது. சில நாட்கள் முன்பு சிழிழி-மிஙிழி என்ற செய்திச் சேனல் முஸ்லிம்கள் பெரு நகரங்களில் புறக்கணிக்கப்படுகின்றனரா என்கிற ஆய்வை நடத்தி செய்தி வெளியிட்டிருந்தது. அதில் முஸ்லிம்களுக்கு வீடுகள் வாடகைக்கு கொடுப்பதில்லை என்று வீட்டின் உரிமையாளர்கள் பகிரங்கமாகத் தெரிவித்தனர்.
தென்னிந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆந்திராவையும் கேரளாவையும் மத பயங்கரவாதிகள் நிறைந்த பகுதிகள் என்று வழக்கம் போல மத்திய உளவு அமைப்புகள் தங்களது வேலையைக் காட்டி வருகின்றனர். இவற்றிற்கு உள்துறைச் செயலாளர் நி.ரி. பிள்ளையும் ஒத்து ஊதுகிறார்.
சென்னையில் பல பகுதிகளில் முஸ்லிம்கள் என்றாலே வீடுகள், கடைகள் மறுக்கப்படுகின்ற காட்சிகளை நிதர்சனமாகப் பார்க்க முடிகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலை உருவாகி உள்ளது.
வட இந்தியாவில் சங்பரிவார் அமைப்புகளின் திட்டமிட்ட அவதூறு பிரச்சாரங்கள் இதற்கு காரணம் என்றாலும் சகோதர வாஞ்சையுடனும் அனைவரும் உறவுகளைச் சொல்லி அழைத்திடும் தென்னிந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இந்த சிந்தனை அதிகரித்து வருகிறது. இது ஒரு தேசிய அபாயம்.
தமிழ்ச் சமூகத்தின் தந்தை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணிலும் இத்தகைய மனப்போக்கு மாறிவருவது மிகவும் வேதனையை தருகிறது.
சமூக பகிஷ்கரிப்பு என்கிற நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளப்பட்டு வரும் முஸ்லிம் சமூகம் இதிலிருந்து எப்படி விடுபடுவது? பாதிக்கப்பட்ட மக்களான முஸ்லிம் சமூகம் இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி மீளுவது? விரிவான கண்ணோட்டத்தோடு அணுக வேண்டிய விவகாரம் இது.
ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் என்பது அந்த சமூகம் தன்னைப் பற்றி எந்த அளவிற்கு சுயபரிசோதனை செய்து கொள்கிறதோ அதை வைத்தே அமையும்.
முஸ்லிம்கள் பல்வேறு மட்டங்களில் புறக்கணிக்கப்படுவதற்கு வெளியிலிருந்து வரும் அவதூறுகள் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதில் சற்றும் குறைவில்லாத அளவிற்கு முஸ்லிம்களின் உள்ளார்ந்த செயல்பாடுகள் சமூக தளத்தில் அவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதை உணர்ந்தும் உணராத மக்களாக முஸ்லிம்கள் இருக்கின்றனர். இதை வலிமையாக அவர்களிடம் உணர்த்த வேண்டிய ஆலிம்கள், சமூகத் தலைவர்கள் அதைப் பற்றி கொஞ்சமும் அக்கறை செலுத்தாமல் முஸ்லிம்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகளை எதிர்மறையாகச் சொல்லி, உணர்ச்சியைத் தூண்டி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வேலையை தவறாமல் ஒவ்வொரு கட்டத்திலும் செய்து வருகின்றனர். பிரச்சனையின் விபரீதத்தை உணர்ந்து முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து இதை மாற்றிட முன்வரவேண்டும். முதலில் முஸ்லிம்களின் மனநிலை மாற்றப்பட வேண்டும்.
உணர்ச்சிப் பூர்வமாக சிந்திக்கும் எந்த சமூகத்திடமிருந்தும் அறிவுப்பூர்வமான நடவடிக்கைகள் வெளிவராது. தேவை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை. கடந்த 25 வருடங்களாக தங்களுக்கெதிராக செய்யப்பட்டு வரும் இந்த “அவதூறு பிரச்சாரங்களுக்கு” முஸ்லிம் சமூகம் இஸ்லாம் என்கிற அதி நவீன அறநெறி வாழ்க்கை முறையாலும் வலிமையான இஸ்லாமியப் பிரச்சாரத்தினாலும் மட்டுமே இதை மாற்ற இயலும். எவ்வளவு வலிமையான அவதூறுகள் பரப்பப்பட்டாலும் அல்லாஹ்வின் கலாமிற்கு (அல்குர்ஆன்) முன்னால், நபி (ஸல்) அவர்களது வழிகாட்டலுக்கு முன்னால் அனைத்தும் தவிடு பொடியாகிப் போகும் என்பதை முதலில் முஸ்லிம் சமுதாயம் முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.
உலகில் தோன்றும் முஸ்லிம் எதிர்ப்பு அலைகளை இஸ்லாம் என்கிற உள்ளத்தை புரட்டிப் போடும் ஆற்றலுடைய கொள்கையால் மட்டுமே முறியடிக்க இயலும். மனிதர்களால் இயற்றப்பட்டச் சட்டங்களை வைத்தோ அதனடிப்படையிலான தண்டனைகளை வைத்தோ எதிர்ப்புகளை அடக்கிவிட இயலாது. இதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக செய்யப்படும் அவதூறு பிரச்சாரங்களை முறியடித்து எல்லா சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட மக்களாக முஸ்லிம்கள் பரிணமிக்க முஸ்லிம்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும்தான். இது “இஸ்லாத்தின் பண்பாடுகளை, பழக்க வழக்கங்களை முழுமையாக பேணுவதோடு பிற மக்களையும் பேணச் சொல்ல வேண்டும்” இந்த வழக்கம் நடைமுறைக்கு வருகின்றபோது மிகப்பெரும் சமூகப் புரட்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
அதிகாரம் தன் மடியில் வர வேண்டும் என்றால் உன் கலாச்சாரத்தைப் பரப்பு என்றான் ஒரு அறிஞன்.
அவதூறுப் பிரச்சாரங்களை முறியடித்திட முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை.
1. அண்டைவீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் முஸ்லிம் அல்ல என்கிற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும். அண்டை வீட்டுக்காரன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
2. சுத்தம் என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என்ற இஸ்லாமியத் தத்துவம் ஒவ்வொரு முஸ்லிமாலும் கடைப்பிடிக்கப்பட்டு தனது வசிப்பிடத்தோடு சுற்றுச்சூழலையும் ஒரு முஸ்லிம் சுத்தமாகத்தான் வைத்திருப்பான் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும்.
3. அமானிதத்திற்கு மாறு செய்யமாட்டான் முஸ்லிம் என்கிற நம்பிக்கையை தங்களது நடவடிக்கை மூலம் பிற மக்களிடம் விதைப்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் இருசாரர் மீதும் இஸ்லாம் கடமையாக்கி வைத்துள்ளதை மறக்காமல் கடைபிடிக்க வேண்டும். இது இஸ்லாமிய விழுமங்களை பிற மக்களிடம் உயர்த்தும்.
4. பெரும் செல்வந்தர்கள் என்றாலும் எளிமையான வாழ்க்கை முறையை முஸ்லிம்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற பேச்சு பிற மக்களிடம் ஏற்பட வாழ்ந்திட்டால் அங்கே இஸ்லாமிய மார்க்கத்திற்கு பெருமை.
5. தான தர்மங்களில் சாதி மதம் பாராமல் ஈகை குணத்தின் சிகரங்களாக, வாரி வழங்கும் வள்ளல்களாக முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்ந்தால் குரோதங்களும் விரோதங்களும் இருந்த இடம் தெரியாமல் போகும்.
6. அளவு நிறுவைகளில் மோசடி செய்யாமல், கலப்படம் செய்யாமல், பொருட்களை பதுக்கி வைக்காமல், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாமல் நபி (ஸல்) அவர்களைப் போல நேர்மையான வியாபாரிகள் தான் முஸ்லிம்கள் அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லை என்கிற பெயரை நிலைநிறுத்தும் போது எதிர்ப்பு பிரச்சாரங்கள் கரைந்து ஓடிவிடும்.
7. வாடகைக்கு வீடு தரும் உரிமையாளரிடம் ஒப்பந்தத்திற்கேற்ப நடந்து கொள்வதும், உரிமையாளர் ஒப்பந்தத்தை முறிக்கின்ற போது அமைதியாக மாற்று வழி தேடுவதும் தான் இஸ்லாமிய நடைமுறை என்று முஸ்லிம்கள் நடந்து கொள்வது சமூகத்தில் மிகப்பெரும் இணக்கத்தை ஏற்படுத்தும்.
8. அநியாய வாடகையும், அளவுக்கு மீறிய முன்பணமும் (அட்வான்ஸ்) இஸ்லாமிய மார்க்கத்தில் விருபத்தக்கதல்ல என்பதை நிலைநிறுத்தி ஹலால் (அனுமதிக்கப்பட்டது) ஹராமை (விலக்கப்பட்டது) முழுமையாக பேணும் முஸ்லிம்களாக வீட்டின் உரிமையாளர்கள் வாழும்போது பிற மக்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும்.
9. முஸ்லிம்களின் வாக்கும், வாழ்வும், சுத்தம் நிறைந்தது. தனது பேச்சால் எந்த ஒரு மனிதனையும் நோகடிக்க மாட்டான் என்கிற நிலையை உருவாக்கினால் இந்தியாவில் இஸ்லாத்திற்கு வெற்றி நிச்சயம்.
10. தொழிலாளி முதலாளி என்கிற பாகுபாடு இல்லாமல் தான் உண்ணுவதை உண்ணக் கொடுத்து, உடுத்துவதை உடுத்தக் கொடுத்து வாழ்பவன் தான் முஸ்லிம் வியாபாரி. உழைத்த வியர்வை காயும் முன் ஊதியம் கொடுத்து மகிழ்வான் முஸ்லிம் முதலாளி என்பதை தனது செயலால் உணர்த்திடும் போது சமூகப்புரட்சி ஏற்படும்.
11.முஸ்லிம்கள் அதிகப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்க வேண்டும். முஸ்லிம்களால் நடத்தப்படும் தற்போதுள்ள பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமியப் பண்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் அதிகம் அதிகம் நடத்தப்பட வேண்டும். பிற சமூகத்துடனான தொடர்புகள் அனைத்தும் இஸ்லாமிய நெறியின் அடிப்டையிலேயே அமைந்திட வேண்டும்.
12. ஜனநாயகத்தில் அநீதி இழைக்கப்பட்ட பிற மக்களின் உரிமைப் போராட்டங்கள் அனைத்திலும் முஸ்லிம் சமூகம் பெருமளவு கலந்து கொண்டு குரல் கொடுக்க வேண்டும். அநீதம் இழைக்கப்பட்டவர்களோடு துணை நின்று போராடுவதும் ஒரு ‘‘இபாதத்’’ (வழிபாடு) என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்
இப்படி பன்முகச் சமூகத்தில் உள்ளடங்கி வாழும் முஸ்லிம் சமூகம் தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்லாமிய மார்க்கத்தை சிறுபான்மையாக வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடைபிடிக்கும் போது இந்த பூமியையே சொர்க்கச் சோலையாக மாற்றிவிடும் ஆற்றல் இஸ்லாமிய மார்க்கத்திற்கு இருக்கிறது.
இத்தகைய ஆற்றல் மிகுந்த இஸ்லாமியப் பண்புகளை முதலில் முஸ்லிம்களிடமும் அதோடு பிற சமூகத்தாரிடமும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் இஸ்லாமிய இயக்கங்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் ஆலிம்களுக்கும் இருக்கிறது.
குறிப்பாக சகமனிதர்களோடு உறவுகளைப் பேணுவதில் பெருமானாரைப் பின்பற்றும் சமூகம் எந்தக் காலத்திலும் சோதனைகளை சந்திக்காது. முஸ்லிம்கள் அது போன்று வாழும் நேரத்தில் மாறிவரும் விபரீதத்தை உணர்ந்து முஸ்லிம்கள் கடமையாற்ற வேண்டும். முஸ்லிம்களாக சாட்சி கூறி உம்மாவில் சேர்ந்து இருப்பது இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநாட்ட அன்றி வேறு எதற்காகவும் இல்லை.
Source - Samooganeethi....
நன்றி: மின்னஞ்சல் மூலம் அனுப்பிய சகோதரர் நபி நேசன்
No comments:
Post a Comment