Sunday, November 7, 2010

ஓர்நிலைப்படுத்தி ஓரிறையைத் தொழுவது எப்படி?



"எண்ணங்களேச் செயல்களைத் தீர்மானிக்கும்"-என்பதை முதன்முதலாக எண்ணத்தில்திண்ணமாகஇறுத்திக்கொண்டு,இக்கட்டுரையைப்படிக்கவும்;
இப்பயிற்சியும் அக்கருத்தின் அடிப்படையிலேதான் சொல்லப்படுவதாலும், இக்கட்டுரைக் கூறும் செயல்முறை பயிற்சியின் துவக்கம் முதல் இறுதி வரை உங்களின் உள்ளத்தை ஓர்மைப் படுத்திக் கொண்டு தொழ வாருங்கள்:
ஓளு: எல்லா முஸ்லிம்கட்கும் அறிமுகமான ஒன்று தான். இருப்பினும்.
இப்பயிற்சியிலும் கூட துவக்கம் முதல் இறுதி வரைக் கீழ்க்காணும் முறையில்
எண்ணத்தில் பயிற்சி கொடுக்கவும்:
ஒளு செய்யப்போவதாக உள்ளத்தாலும்- உதட்டாலும் உறுதிபட இறுத்திக் கொள்க.
(உடல் முழுவதும் மழையில் நின்று நனைந்தாலும் கூட உள்ளத்தில் "ஒளு" என்ற எண்ணம் இல்லாத வரை, அவ்வாறு மழையில் நனைந்து விட்டதனால் ஒளு ஆகிவிடாது)
பிஸ்மி சொல்லி துவங்கும்போழ்தே, மணிக்கட்டு வரை செய்த பாவங்கள் களைவதாக எண்ணிக் கொள்க;அவ்வாறே, வாய்க்கொப்பளித்தல்-முகம் கழுவுதல்-முழங்கை வரை
கழுவுதல்-தலைக்கு தண்ணீரால் தடவுதல்-  செவிகட்கு தடவுதல் மற்றும் இரு
கால்களைக் கழுவுதல் வரை முறையெ வாயால் பேசிய பாவம்;முகத்தில் உள்ள புலன்களால் புரிந்த பாவம்; கைகளால் செய்த பாவம்; தலையால் செய்த பாவம்; செவியால் கேட்ட பாவம் மற்றும் கால்களால் பாவமான செயல்கட்கு நடந்து சென்றவைகள் யாவற்றயும் நினைவுக்குக் கொண்டு வருக; அப்பாவங்கள் இதோ களைவதாக அகத்தில் உறுதிபட இறுத்திக் கொள்க.(ஓர் அதிசயம்; ஆனால் உண்மை: தண்ணீர் பட்டால் இரும்பிலும் துரும்பு ஏறும்; ஆனால், ஒளுவின் தண்ணீரால் உள்ளத்தின் துருவும் அகலும்!!!!!)
பாங்கு: முதல் அழைப்பான "சூர்" ஊதப்படுவதாகவும்; அதனால் யாவரும் "மௌத்" ஆகிவிட்டதால் உலகமே அமைதியாகி விட்டதாகவும் உள்ளதில் எண்ணிக் கொள்க.
(அதனாற்றான், பாங்கோசைக் கேட்கும் பொழுது, நமது துன்யாவின் நினைவுகள் யாவும் நிறுத்திவிட வேண்டப்படுகின்றது)

இகாம(த்)
மீண்டும் இரண்டாம் "சூர்" ஊதப்படுவதாகவும்; எல்லாரும் விரைந்து
கப்ருகளிலிருந்து எழுப்பப்பட்டு அல்லாஹ்வின் முன்னிலையில் அணி அணியாக நிறுத்தப் படுவதாகவும் எண்ணிக்கொண்டு தொழுகைக்கு விரைக; வெற்றி பெற  விரைக.
தொழுகை:
தக்பீர் கட்டும்போழ்து, இருகரங்களும் உயர்த்தும்போழ்து, நாம் அல்லாஹ்
முன்னிலையில் கேள்விக்கு பதில் கூற நிறுத்தப்பட்டுள்ளோம் என்பதாகவும்;
முன்னால் அல்லாஹ் நம்மை நோட்டமிடுகின்றான் எனவே நமக்குப் பின்னால் எதுவும் தேவையில்லை என்று உதறி விட்டு அவனது கேள்விகட்கு பதில் கூற ஆயத்தப்படுத்து வதாக எண்ணிக் கொள்க. தக்பீர் கூறி கைகளைக் கட்டிய நொடி முதலாய் அடுத்த நிலை(குனிதல்) வரை கண்கள் சீராக -தாழ்மையுடன் (சுஜுது படும்) தரையினை மட்டுமே ஒரே நேர்கோட்டில் அமையப்பெற்று வேறெங்கும் பார்வைச்சற்றும் பிறழாது அவ்விடம் மட்டும் ஒரு புள்ளியில் இருத்தி கிராஅத் துவங்கவும்.தனியாக தொழுவதாக இருந்தால் உன் வாய் மூலம் அல்லாஹ்வின் கேள்விகட்கு பதில் அளிப்பதாகவும்; இமாமுடன் தொழுவதாக இருந்தால், உன் வாய்க்குப் பூட்டுப் போடப்பட்டு உன் புலன்களே பதில் சொல்வதாகவும் எண்ணிக்கொள்.
குனியும்போழ்து, உன்னால் உன் பாவங்களின் சுமைகளைத் தாங்கிட முடியாமல், நிலையிலிருந்து குனிந்து கொண்டே அல்லாஹ்விடம் பேசுவதாக எண்ணிக் கொள்க.
மீண்டும் சற்று சிறு நிலையில் நின்று அவனிடம் பேச முயற்ச்சிப்பதாக
எண்ணிக் கொண்டே குனியலிருந்து சிறு நிலைக்கு வருக.இக்குனியல் முடியும் வரை உனது கால்களின் இரு பெருவிரல்களின் மீது மட்டுமே பார்வைகள் பதிய வேண்டும்.(இப்பயிற்சியின் நோக்கம் மனதை ஓர்நிலைப்படுத்தலுக்கு பெரிதும் உதவும் என்பதே அநுபவப் பேருண்மை)
உன் பாவங்களின் சுமைகள் அதிகமானதால் அல்லாஹ்வின் "ஜலாலியத்"தான
திருமுகத்தை நேர்கொண்டு பார்க்க இயலாமலும்,
எல்லாம் வல்ல அல்லாஹ்விடமே உன்னை முற்றிலும் சரணடய முடிவு செய்து கொண்டதாகவும் அவன் அருளால் மட்டுமே
அத்தருணம் கரைசேர முடியும் என்பதாகவும் எண்ணிகொண்டே.... அவன் திருவடியில் உன் நெற்றியை வைத்து புகலிடம் தேடுக.
(இத்தருணம், யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்யமான தருணமாதலால்,படைத்தவனுக்கு மிக மிக நெருக்கமான இடம்-
நேரம் அதனால், உனது தேவைகளை இவ்விடம் கேட்டுப் பெறுக; பழத்துக்குள்
இருக்கும் வண்டு போல் அல்லாஹ்வுடன் ஒன்றி போகும் இத்தருணம்
அல்லாஹ்வுக்கும் மிக விருப்பமான இடம்- நேரம்; அடியானுக்கும் தேவைகளைக் கேட்டுப் பெற நல்ல வாய்ப்பு)இங்கு நெற்றியைத் தரையில் வைத்தது முதலாய் மீண்டும் எழும்வரை உன் கண்கள் உன் மூக்கின் நுனிமீது மட்டுமே அமையப் பெற வேண்டும்(இதுவும் மனதை ஓர்நிலைப்படுத்த அநுபவப்பூர்வமானப் பேருண்ம) நீண்ட நேரம் அல்லாஹ்வின் திருவடியில் சரணடைந்த நீ, சிறிது இருப்புக்கு வந்து அவன் திருமுகம் காண எத்தனிப்பதாக எண்ணிக்கொண்டே சிற்றிருப்புக்கு வருக. இவ்விடம் அமர்ந்ததும், உன் கைகளிரண்டும் இரு தொடைகளின் முட்டில் பதியப் பெற்றதும் அந்நொடி முதல் அவ்விருப்பிலிருந்து எழும் வரை உன் கண்கள் அக்கரங்கள் பதியப் பெற்றுள்ள முட்டி மற்றும் கைகள் உள்ள அத்தோரணை மட்டும் உன் கண்கள் பதியட்டும்; இப்படிப் பதிந்துள்ள அக்காட்சி முற்றிலுமாக ஓர் அடிமை எஜமானிடம் தாழ்மையுடன் அமர்ந்து பேசுவது போலவோ அல்லதுச் சரியாக ஒரு மாணவன் ஆசானிடம் பாடம் படிக்க மிகத் தாழ்மையுடன்
அமர்ந்திருப்பது போலவும் நிச்சய்ம் உன் மனதுக்குள் தோன்றும்
(இப்பயிற்சியும் மனதை ஒர்நிலைப்படுத்தும் என்பதும் அனுபவப் பேருண்மை)
சிற்றிருப்புக்குப் பின்பு மீண்டும் அல்லாஹ்விடம் கேள்விக்கு பதில் கூற
எழுவதாக எண்ணிகொண்டே இரண்டாம், மூன்றாம், நான்காம் ரக் அத் கான நிலைக்குவருக. அதுவேபோழ்து எல்லா நிலைகளிலும் மேலே துவக்கம் முதலாய் இவ்விருப்பு வரை மேற்கூறிய எண்ண ஓட்டங்களிலேயேப் பயிற்சி கொடுத்து வந்து ,மிக முக்யமானதும்; இறுதி இருப்புமான "தஷ்ஹூத்" அத்தஹ்யாத்   இருப்பு நிலைக்கு வந்ததும் ஏற்கனவே, சிற்றிருப்ப்பில் எப்படி கண்கள் தொடைகளின் மீதுள்ள முட்டில் பதிந்துள்ள கரங்களை மட்டுமே நோக்கும்போழ்து, ஏற்கனவேச் சொன்னபடி, ஓர் ஆசான் முன் தாழ்மையுடன் அமர்ந்து பாடம்படிக்கும் மாணவைனின் மனநிலைக்கு வருக. அதைவிட ஓர் ஒப்புக்கொள்ளப்பட்ட பேருண்மையின்படி, அத்தருணம் மிகச்சரியாக "மிராஜ்" அன்று இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் முன்பு இவ்வாறு தான் அமர்ந்தார்கள் என்பதும்; அவ்விடம் அவர்களும்; அல்லாஹ்வும் உரையாடியதன் - நேர்காணலின் நகல் தான் நாம் இன்று இத்தருணம் செய்து கொண்டிருப்பதாகவும் உள்ளத்தில் உறுதியாக இறுத்திக் கொண்டெ இறுதி நிலையில் ஓதும்
"அத்தஹ்யாத்..............."முழுவதும் நீ மனதுக்குள் மொழிபெயர்த்துப்
பார். அப்படியே இறுதித்தூதர்(ஸல்) அவர்களும்; அல்லாஹ்வும் உரையாடியதன்அமைப்பு விளங்கும்.
முடிவாக
ஸலாம் கொடுக்கும்போழ்து, வலப்பக்கம்- இடப்பக்கமாக மக்கள் கேள்வி கணக்கு முடிந்து பிரிக்கப்பட்டு மலக்குகளால் அல்லாஹ்வின் தீர்ப்பின்படி சுவனம் அல்லது நரகம் என்று முடிவு செய்யப்பட்டு அழைத்துச் செல்வதால்,
துஆ
உடனே இறைவைனிடம் கையேந்துங்கள்:"சுவனத்தை தா" என்று
பள்ளியை விட்டு வெளியேம்றுபோழ்து,"உனது அருட்கொடையான சுவனத்தின் வாயில்கள் இதோ திறந்துவிட்டன யா அல்லாஹ்" என்று மனம் நிறைவுடன் வருக.
("தொழுகை சுவனத்தின் திறவுகோல்")
ஞானிகளின்  தோட்டத்தில் யான்பெற்ற இன்பமிதை
தேனீபோல்     உங்களின்  தேவைக்குத் தருகின்றேன்
தேனுண்டால்   உங்கட்    திருவதனம் தேடுமே
தேனிருக்கும்  திக்கினைப்  பார்த்து

by mail from -"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails