Thursday, November 11, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 7

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இப்பொழுது 7வது தொடரை வல்ல அல்லாஹ்வின் மாபெரும் அருளால்  படிக்கத் தொடங்குகிறீர்கள்.

இந்த தொடர் எனக்கு ஒரு சோதனையான தொடர் காரணம் சில சகோதரர்களிடம் இந்த வாரத்தில் சில கடன் சம்பந்தப்பட்ட காரியங்களைப் பற்றி விவாதம் செய்து கிடைத்த பதிலால் நாம் இந்த கட்டுரையைத் தொடரத்தான் வேண்டுமா? (உபயம் சகோதரர்: அபுஇபுறாஹிம்). எங்கும் கடன், எதிலும் கடன் இதிலிருந்து விடுபடுவார்களா? மாட்டார்களா? நாம் எழுதுவதால் நம் சமுதாயம் பலன் அடையுமா?  என்றெல்லாம் மனக்குழப்பம்.

வல்ல அல்லாஹ்வின் அருளால் கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனமும், நபிமொழியும் மனதில் வர கட்டுரையை தொடருவோம் என்ற மன உறுதியை கொடுத்தது.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல்குர்ஆன் : 3:104)

நீங்கள் மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!. (அல்குர்ஆன் : 3:110)

உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் தன்கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும், அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்) இது, இறை நம்பிக்கையில் மிக பலவீனமானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல் : முஸ்லிம்)

(குழப்பத்திற்கு என்ன காரணம் என்பதை குர்பானியை பற்றி தெளிபு படுத்திய பிறகு தொடர்வோம்).

ஹஜ் பெருநாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. குர்பானி கடன் வாங்கியும் வீண் பெருமைக்காகவும், கொடுக்கப்படுவதால் இதைப்பற்றி தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் நாம் அனைவரும் பிராணியை பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். (இதன் விரிவான விளக்கத்தை குர்ஆனில் 37வது அத்தியாயம் அஸ் ஸாஃப்பாத் 99முதல் 110 வரை படியுங்கள்).

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் மகனையே அல்லாஹ்விற்காக பலியிட முன்வந்தார்களே அதைப்போன்று நாமும் தியாகத்தை செய்வதற்கு முன்வருவோம் என்பதை நிருபிக்கும் வண்ணம் குர்பானி கொடுக்கிறோம். இறையச்சத்தின்  வெளிப்பாடுதான் குர்பானி.

குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடைகிறது. (அல்குர்ஆன் : 22:37)


குர்பானி யார் கொடுக்கலாம்:
யாரிடம் அவர்களின் செலவு போக, கடன்கள் எதுவும் இல்லாமல் அதிகமாக பணம் இருக்கிறதோ அவர்தான் குர்பானி கொடுக்க வேண்டும். கடன் இருந்தால் முதலில் கடனைத்தான் கொடுக்க வேண்டும். அதனால் குர்பானி மட்டும் இல்லை ஹஜ்ஜாக இருந்தாலும் வேறு கடமையான எந்தக்காரியமானாலும் கடன் வாங்கி செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை.
  
கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம் 3498)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்துகொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 7288)

நபி (ஸல்) அவர்கள் தடுத்தக் காரியங்களை முழுமையாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.  அவர்கள் கட்டளையிட்டால்  அதை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டுமே தவிர சிரமப்பட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை.
  
வசதியில்லாதவர் கடன் வாங்கி சிரமப்பட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை: வல்ல அல்லாஹ் கூறுவதை பாருங்கள்:

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியது.(அல்குர்ஆன் : 2:286) (காலம் காலமாக கொடுத்து வருகிறோம். அதனால் நிறுத்தக்கூடாது என்று கடன் வாங்கி குர்பானி கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும்).


நபி (ஸல்) காலத்தில் ஒருவர் தன் சார்பகவும் தன் குடும்பத்தார் சார்பாகவும் ஒரு ஆட்டை மட்டும் குர்பானி கொடுப்பார் என அபூ அய்யூப் (ரலி) கூறுகிறார்கள். (திர்மதி இப்னுமாஜா)

ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடே போதுமானது. வீண் பெருமைக்காகவும், கடன் வாங்கியும் செய்யப்படும் குர்பானிக்கு வல்ல அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்க்க முடியாது.

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: பரா(ரலி) நூல்: புகாரி, 5560)

ஆகவே சகோதர சகோதரிகளே வல்ல அல்லாஹ் கூறியபடியும், நபி(ஸல்)அவர்கள் காட்டி தந்தபடியும் நமது குர்பானியை கொடுத்து நன்மையை பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம். இன்ஷாஅல்லாஹ்.

திருமண (வலீமா) கடன்கள்:
ஒரு சில சகோதரர்களிடம் நான் விவாதித்த செய்திகளை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். ஒரு சகோதரர் திருமணத்திற்கு ஊர் செல்கிறார். பெண்ணுக்கு மஹர் கொடுப்பதற்காக நகை வாங்கியுள்ளார். (நல்ல செய்திதானே) திருமணம் ஆன பிறகு வலீமா விருந்து மாப்பிள்ளைதான் கொடுக்கப்போகிறார்.(மாப்பிள்ளை வலீமா விருந்து கொடுப்பாரா? பெண் வீட்டில் வலீமா விருந்தை சாப்பிட்டவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்). இவை அனைத்தும் மார்க்கம் சொன்னபடி செய்கிறார், பாராட்டப்பட வேண்டிய செயல். ஆனால் இவை அனைத்திற்காகவும் கடன் வாங்கியுள்ளார். இதைத்தான் பாராட்ட முடியவில்லை.

ஊருக்கு செல்வதற்கு இவர் திருமணத்திற்கு போடும் கோட் முதல் மற்ற அனைத்து பொருட்களும் அதிகமான விலை கொண்டதே. கடன் அட்டையில்தான் அதிக கடன். வீட்டுக்கு போன் செய்யும்பொழுது நான் அதிக கடன் வாங்கி விட்டேன், வந்து திருப்பி செலுத்த வேண்டும் என்று சொல்கிறார். ரூம் வாடகை கூட ஊர் போய் வந்து கொடுக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு கடன்.

என்னுடைய கேள்வி இப்படி கடன் வாங்கித்தான் இதையெல்லாம் செய்யவேண்டுமா? இவர் வாங்கியுள்ள பொருட்களை குறைத்திருக்கலாம். அதிக விலையுள்ள பொருட்களை வாங்கியதை தவிர்த்திருக்கலாம். அவருடைய வருமானம், சேமிப்புக்கு  தக்கவாறு திட்டமிட்டு திருமணத்தை நடத்த முடிவு செய்திருக்கலாம். எத்தனை லாம் எல்லாம் கடனில் அடி வாங்கிவிட்டது. கடன் வாங்கியது அவர் மனதிற்கு உறுத்தலாக இருந்தாலும், வாங்காமல் செல்ல மனம் இல்லை. நம் இரத்தத்தோடு இந்த கடன் மட்டும் பிரிக்க முடியாத அணுக்களாகி விட்டது. ( இவருடைய உறுத்தலுக்கு தீர்வு என்ன? )

இன்னொரு சகோதரரைப்பற்றி பார்ப்போம் மேலே சொன்னதுதான் இவர் குடும்பத்தில் மகனுக்கு  திருமணம். மார்க்கத்தில் பிடிப்பு அதிகம். மகன் திருமண செலவுக்காக கடன் வாங்க முற்படுகிறார். திருமணத்தை லட்சத்திலும் செய்யலாம் சில ஆயிரத்திலும் செய்யலாம். அவரவர் தகுதிக்கு திருமண காரியங்களை நடத்த ஆசைப்படுவது மனித இயல்புதான். வீண் பெருமைக்காகவும், குலப்பெருமைக்காகவும், செல்வந்தர் என்று காட்டிக்கொள்வதற்காகவும், சமுதாயத்தில் அந்தஸ்தில் இருக்கிறோம் இதை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காகவும் குடும்பத்தின் திருமண  காரியங்கள் மண்டபம், பிரமாண்டமான பந்தல் மற்றும் வேறு ஆடம்பரங்களோடும் நடந்து கொண்டு இருக்கிறது.

எத்தனை சொன்னாலும் ஆடம்பரத்தை  விட தயாராக இல்லை. இதற்காக ஏன் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் கலங்கி நிற்க வேண்டும். சரி கடன் வாங்கி விட்டார். இவர் மேல்  மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்களும் கடன் கொடுத்து விட்டார்கள். திருப்பி தருகிறேன் என்று சொன்ன கால கட்டத்தில் திருப்பி தருவார் என்று இவருக்கு கடன் கொடுத்த உறவினர்களோ, நண்பர்களோ நாம் கொடுத்த கடன் இத்தனை மாதத்திற்கு பிறகு நமக்கு வரும் நம்முடைய தேவையை அந்த நேரத்தில் நிறைவேற்றிக்கொள்வோம் என்று ஒரு திட்டம் வைத்திருப்பார்கள். (கோடீஸ்வரனுக்கும், ஏழைகளுக்கும் தேவைகள் இருக்கிறது. எந்த தேவையும் இல்லாத மனிதர்கள் உலகில் இல்லை, ஏதாவது ஒரு தேவை இருந்து கொண்டேதான் இருக்கும்).

அந்த நேரத்தில் அந்த நண்பர், உறவினர் பணத்தை திருப்பித்தரவில்லை. இப்பொழுது கடன் கொடுத்தவருக்கு கடன் வாங்கியவர்கள் மேல் ஒரு வித வெறுப்பு (உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்) ஏற்படுவது இயல்பு. (இல்லையென்று சொல்ல முடியாது) வெளியே சொல்ல முடியாமல் மனதில் போராட்டம். நெருங்கிய உறவினர், நெருங்கிய நண்பன் என்று மனது எடைபோட்டு போனால் போகிறது என்று விட்டு விடாது. நம் மனம் நம்மை சவுக்கால் அடிக்கும் அதெப்படி தருகிறேன் என்று சொல்லி விட்டு வாக்கு மீறுவது. இப்பொழுது நம்முடைய தேவையை எப்படி நிறைவேற்றுவது நம்முடைய பணம் அவனிடம் இருக்கும்பொழுது நாம் ஏன் மற்றவர்களிடம் கடன் வாங்க வேண்டும் தலையெழுத்தா? என்றெல்லாம் மனதிற்குள் ஒரு பெரும் போர் நடந்தாலும், நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ? நேரடியாக கடுமையாக கேட்க மனம் வராது. (இப்பொழுது கடன் கொடுத்தவர்கள் படும் மனப்போராட்டதிற்கு தீர்வு என்ன?)

இந்த நேரத்தில் தமிழகத்தின் மிகச்சிறந்த இளவயது (ஆலிம்)  மார்க்கப்பேச்சாளரின் திருமணம்  ஞாபகத்திற்கு வருகிறது. இவரின் திருமணத்தை வெறும் ரூ500க்குள் நடத்தியிருக்கிறார். என்னுடைய வருமானம் மிக குறைவு அதனால் வலீமா விருந்து  டீ, பேரீத்தம்பழம் (பிஸ்கெட் கொடுத்தாரா என்பதை மறந்து விட்டேன்) கொடுத்து திருமணத்தை முடித்து விட்டார். இவர் கடன் கேட்டால் தருவதற்கும், அன்பளிப்பாக தருவதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் யாரிடமும் கையேந்தாமல், இறையச்சம் உடையவராக இருந்த காரணத்தால், அவரின் வருமானத்திற்குள் திருமணத்தை முடித்துவிட்டார். (அதெப்படி பிரியாணி போடாமல் ஒரு திருமணமா? இந்த திருமணத்திற்கு போய் என்ன செய்ய? டீ குடிக்கவா? மக்களிடம் கேள்வி? )

திருமண கடன்கள்:
ஒரு சகோதரரிடம் வேறொரு சகோதரர் வந்து என் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்து விட்டேன். உதவி செய்யுங்கள் என்று சொன்ன பொழுது இவர் விபரங்களை கேட்டுள்ளார். மாப்பிள்ளை வீடுதான் எல்லாம் செய்கிறார்கள் இருந்தாலும் நாங்களும் செய்ய வேண்டும் அல்லவா? என்று கேட்டிருக்கிறார். இந்த சகோதரர் பெண் வீட்டிற்கு ஒரு ரூபாய் கூட செலவு கிடையாது. உனக்கு உதவி செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டாராம். (இவர் சொன்னது சரிதானா? இப்படிப்பட்டவர்களுக்கு தீர்வு என்ன? ).


என்னிடமும் ஒரு சகோதரர் அவர் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. நபிவழிப்படிதான் திருமணம் நடக்கிறது. எனக்கு உடனே பணம் அனுப்பி வையுங்கள் என்று தொலைபேசியில் சொன்னார். (ஒரு தடவை இவர் நிலையை பார்த்து நானாக உதவி செய்யப்போய், எப்பொழுது ஊருக்கு போனாலும் அல்லாஹ்வுக்காக கடன் கொடுங்கள் என்று கேட்பார். அவரால் திருப்பி கொடுக்க முடியாது என்பது அவருக்கே தெரியும்). (நிறைய பேரிடம் இப்படித்தான் கேட்கிறார் என்பதை நண்பனின் மூலம் பிறகு தெரிந்து கொண்டேன்). என் வீட்டிற்கு போன் செய்து உண்மை நிலை என்ன என்று கேட்கும்பொழுது அவருக்கு ஒரு செலவும் இல்லை மாப்பிள்ளையே அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார் என்று சொன்னார்கள். மேலும் எத்தனை பேரிடம் மகளுக்கு திருமணம் என்று பணம் வாங்கினார் என்பது தெரியவில்லை. (விசாரிக்காமல் கேட்டவுடன் உதவி செய்து விடுவதா? இது போன்றவர்களுக்கு தீர்வு என்ன?)

என் வீட்டிலும் தெரிந்த பெண்ணிற்கு திருமணம் வருகிறது நம்மால் ஆன உதவிகள் செய்ய வேண்டும் என்றார்கள். மார்க்கப்படி வரதட்சனைக்கு துணை போகக்கூடாதே என்று சொன்னேன். அப்படி என்றால் அந்த பெண்ணிற்கு திருமணமே ஆகாது, நாம் விருந்து செலவை மட்டும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறி விருந்து செலவை ஏற்றுக்கொண்டு அந்த பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்தார்கள். பெண் வீட்டாரும் வெட்கத்தை விட்டு வெளியில் உதவி கேட்டார்கள் பெண்ணின் தாய் மாமா மற்றும் சில பேரின்  உதவியால் திருணம் முடிந்தது. (வரதட்சனைக்கு துணை போகிறோமே இதற்கு என்ன தீர்வு? )

சில பேர் திருமணத்தை நிச்சயம் செய்து விட்டு பலபேரிடம் வசூல் செய்து திருமணத்தை நடத்துகிறார்கள்? (இது சரியா? இதற்கு என்ன தீர்வு?) நமது உறவுக்குள்ளும், வெளியிலும் பெண்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்கள். தெரிந்தவர்களும், உறவுகளும் நம்மிடம் உதவியை எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்கு உதவுவது பற்றிய விவாதத்தில் வருகின்ற கேள்விகள். நம்மால் ஆன உதவிகளை செய்யாவிட்டால் மாப்பிள்ளை வீட்டார் எங்கு வரதட்சனை கிடைக்கிறதோ அங்கு பெண் பார்த்து மணம் முடித்து விடுவார்கள். நமக்கு தெரிந்தவர், உறவினர் வீட்டு பெண்களுக்கு உதவி செய்யாவிட்டால் காலம் முழுக்க முதிர்கன்னியாக வீட்டில்தான் இருக்க நேரிடும்.

மார்க்கம் மஹர் கொடுத்து மணம் முடிக்க சொல்லி இருக்கிறதே? நாம் மஹரை பெண்ணிடம் இருந்து அல்லவா வாங்குகிறோம். மார்க்க அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள். நம் சமுதாயம் உதவி செய்யும் என்ற எண்ணத்தில்தான் பெண்ணை பெற்றவர்கள் அவர்களுக்கு வசதி இல்லாமல் இருந்தாலும் மாப்பிள்ளை வீடு கேட்பதை தருகிறோம் என்று ஒத்துக்கொள்கிறார்கள். வரதட்சணை என்பது மிகப்பெரிய பாவம் இதற்கு துணை போகாதீர்கள். கடன் கொடுத்தோ, உதவியாகவோ செய்ய வேண்டாம், வரதட்சனை வாங்கும் கூட்டம் பெருக நீங்கள் ஒரு காரணமாக இருக்கிறீர்கள், வரதட்சனை வாங்கவும் மாட்டோம், கொடுக்கவும் மாட்டோம் என்ற உறுதியான நிலை எடுக்க வேண்டும். குறிப்பாக கொடுக்கவே மாட்டோம் என்று மிக உறுதியான முடிவை பெண் வீட்டார் எடுக்க வேண்டும், பாவத்தில் பங்காளியாக வேண்டாம் என்கிறார்கள். (நமக்கு என்ன தீர்வு துணை போவதா??? வேண்டாமா??? )

வசதி இல்லாத பெண்களுக்கு வரதட்சனை கொடுப்பதற்கு நம்மால் ஆன உதவிகள் செய்யாவிட்டால் பெண் முதிர் கன்னியாக இருந்து விடுமே இதற்கு என்ன தீர்வு?. நம் சமுதாயத்தின் இளைஞர்கள் இப்பொழுதுதான் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். மஹர் கொடுத்து திருமணம் முடிக்கும் இளைஞர்கள வரும் வரை காத்திருக்க முடியுமா? என்று கேட்கிறார்கள். நாம் இக்கட்டான நிர்பந்தத்தின் பேரில்தான் வரதட்சனை திருமணத்திற்கு உதவி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். (நாம் செய்வது சரிதானா? நாம் எப்பொழுது நிர்பந்தத்தில் இருந்து வெளிவருவது?)

ஆண் மக்களைப்பெற்றவர்களே, இளைய சமுதாயமே தாங்கள் எப்பொழுது விழிப்புணர்வு அடைவீர்கள். தாங்கள் கேட்கும் வரதட்சனையால் பெண் வீட்டார் உதவி செய்பவர்கள் என்று எல்லோருமே பாவத்தில் பங்காளியாகி விடுகிறார்கள். நிர்பந்தம் என்ற நெருப்பில் அனைவரையும் பிடித்து தள்ளிய உங்களுக்கு வல்ல அல்லாஹ்விடம் என்ன தண்டனை காத்துக்கொண்டு இருக்கிறது என்பதை சிந்தித்து பாருங்கள்.

பெற்றோர் மேல் பழி போடும் இளைய சமுதாயமே வரதட்சனை திருமணம் வல்ல அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடியது. வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்தவர்கள் எத்தனை சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள். அவர்களின் பொருளாதாரத்தில் பரக்கத்தை அல்லாஹ் தாரளமாக தந்திருக்கிறான் என்பதையும்,  வரதட்சனை வாங்கி திருமணம் முடித்தவர்களின் பொருளாதாரம் பரக்கத்(அபிவிருத்தி) இல்லாமல் குறைந்து கொண்டே வருவதையும் தாங்கள் பார்த்து இருக்கலாம். பார்த்தது இல்லை என்றால் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.   வரதட்சனை வாங்கி பெண் வீட்டாரை கடனிலும், அடுத்தவரிடம் கையேந்தும் இழிவிலும் தள்ளிவிடாதீர்கள்.

வரதட்சனை என்று பெண் வீட்டார் கடன் வாங்குவதிலிருந்தும், பெண்ணுக்கு மஹர் கொடுக்கிறேன் என்று மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும் கடன் வாங்குவதிலிருந்தும் விலகி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடையுங்கள். 

அன்பு அதிரை நிருபர் குழு மற்றும் அன்பு வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய (Advance) ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்..

-- அலாவுதீன் . S.
 Source : http://adirainirubar.blogspot.com/2010/11/7.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails