Wednesday, May 4, 2011

கண்ட கனவும்; காணாத நிகழ்வுகளும்.


ஒரு வீட்டில் இருக்கும் வயதிற்கு வந்த பெண்ணுக்கு அவளை ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு திருமணம் முடித்து வைக்க அவளை ஈன்றெடுத்த பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும், உடன் பிறந்த சகோதரர்களும் எவ்வளவோ பல சிரமத்தையும், பல சிரத்தையையும் எடுத்து பல சங்கடங்களைப் பொறுத்தும், சகித்தும் வருகிறார்கள் என்பது ஊரறிந்த, உலகறிந்த விசயம். அதற்கு மேல் அவர்களின் கஸ்டங்களையும், இன்னல்களையும், அற்பணிப்புகளையும் அல்லாஹ்வே நன்கறியக்கூடியவன்.

காரணம் நம் வீட்டிற்கு வரும் மருமகன் (நம்மூரில் இன்னும் திருத்த முடியாமல் இருந்து வரும் சாபக்கேடான பழக்கவழக்கம்) நம் பிள்ளையை நல்ல விதமாக, சந்தோசமாக கடைசி வரை வாழ வைப்பான் அத்துடன் கூட இருந்து வரும் நமக்கும் தொந்தரவு இல்லாமல் இருப்பான் என்ற பேராவலில் மற்றும் எதிர்பார்ப்பிலும், நல்ல கனவுகளிலும் பெண் வீட்டினர் அனைவரும் இருந்து வருவது இயல்பு. இதில் தவறென்ன இருக்க முடியும்? குறை எங்கு காண முடியும்?

ஆயிரம் ஏற்பாட்டுடன் வீட்டு கலியாணமும் இனிதே நிறைவேறி சில மாதங்கள் சென்ற பின் தான் அவன் (வீட்டுக்கு வரும் மருமகன்) தன் சுயரூபத்தை காட்டுகிறான். சின்ன, சின்ன பிரச்சினைகளைக்கூட பூதாகரமாக்கி விடுகிறான். இதில் விட்டு கொடுக்கும் மனப்பான்மையை முற்றிலும் இழக்கிறான். நீ உன் சொந்த உழைப்பிலோ அல்லது உன் பெற்றோர்கள் கட்டித்தந்த வீட்டில் வைத்து இருக்கும் உன் மனைவி தவறுகள் செய்தால் கூட உனக்கு அவள் மேல் வரம்பு மீறுவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. நம்மூரில் தன் வீட்டில் மனைவியை வைத்திருப்பவன் நூற்றில் எத்தனை பேர்? வேதனையான கேள்வி தான்.

நீயே நேற்று வரை யாராகவோ இருந்தவன் இன்று திருமணம் முடித்து மனைவி வீட்டிற்குள் நுழைந்தவன். அங்கு இருக்கும் சில அசொளகரியங்களை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், பக்குவம், பகுத்தறிவு இல்லாமல் அதை பட்டியலிட்டு வெளியில் பிரசங்கம் செய்வதற்கும், பிதற்றுவதற்கும் உனக்கு என்ன தகுதி இருக்கிறது? இல்லை என்ன உரிமை இருக்கிறது? வெட்கித்தலைகுனிய வேண்டிய விசயமல்லவா?

நமதூரில், நமது தெருவில், நமது குடும்பத்தில் எத்தனையோ பேர் பள்ளிவாசலின் முன் வரிசையில் (சஃப்) நின்று ஒவ்வொரு வக்தையும் இமாம் ஜமாத்துடன் தொழுது வருகிறார்கள். தொழுகைக்குப்பின் குர்'ஆன் ஷரீஃப்பும் ஓதுகிறார்கள். நல்ல விசயம் மார்க்கம் போற்றும் விசயம். ஆனால் எப்படி மாற்று மதத்தினர் தான் கட்டிய புதிய கட்டிடம், நிறுவனத்தை அவர்களின் பெரியவர்களை வைத்து கத்தரிக்கோல் மூலம் ரிப்பனை வெட்டி திறந்து வைக்கிறார்களோ அது போல் தான் நம்மவர்களில் சிலர் தொழுகைக்குப்பின் பள்ளியை விட்டு வெளியேறும் பொழுது தன் அநியாய அட்டூழியங்களுக்கும், அக்கிரமங்களுக்கும், பல பித்தலாட்டங்களுக்கும் சைத்தான் கொடுக்கும் கத்தரிக்கோல் மூலம் ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்து வெளியேறுகின்றனர் அல்லது அவர்கள் தவறான எதிலும் தலையிடாமல் இருந்தாலும் தன் வீட்டில் உள்ளவர்கள் பல தவறுகளை முன்னின்று செய்யும் பொழுது அதை தட்டிக்கேட்காமல் வாயிருந்தும் மொளனமாகி விடுகின்றனர். இந்த நேரத்தில் மொளனம் அவசியம் தானா? அல்லது அநியாய அட்டூழியங்கள் அரங்கேற அவர்கள் சம்மதிக்கிறார்களா?

நமதூரில் எவ்வளவோ இடங்களில் பல மார்க்க அறிஞர்களால் நல்ல பல சொற்பொழிவுகளும், ஆங்காங்கே பயான்களும், அன்றாடம் அனைத்து பள்ளிகளிலும் ஏதேனும் ஒரு நேரத்தில் குர்'ஆன் தர்ஜுமாக்களும், தஃலீம், வாராந்திர சொற்பொழிவுகளும், வெள்ளிக்கிழமை குத்பா சொற்பொழிவுகளும் இன்னும் பல வழிகளில் நமக்கு திருக்குர்'ஆனின் இறை வசனங்களும், நபி பெருமானாரின் வாழ்க்கை வழிமுறைகளை அழகிய முறையில் விளக்கும் ஹதீஸ்களும் அன்றாடம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என யாரும் எவ்விதத்திலும் தப்பிக்கா வண்ணம் தனித்தனியே ஆண்களுக்கும், பெண்களுக்கும் செவிக்குள் புகட்டப்பட்டுக்கொண்டு தான் வருகின்றன.

இதை எல்லாம் நன்கு கேட்ட பிறகும் தன் தீய குணத்தாலும், வறட்டுப்பிடிவாதத்தாலும், இரக்கமற்ற செயல்களாலும், சகோதர சகிப்புத்தன்மை இன்மையாலும், தான் தான் என்ற மமதையாலும், தன்னை கேள்வி கேட்க ஆளில்லை என்ற திமிராலும், பிறர் உடமைக்கும், பொருளுக்கும் ஆசை கொண்டு அப்பாவிகளின் உரிமைகளில் தலையிடுவதாலும் மேற்கண்ட திருக்குர்'ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் இவர்கள் பொய்யாக்கி விட்டார்களா? இல்லை அவற்றை எல்லாம் வென்று அரியணையில் ஏறி விட்டார்களா? நிச்சயமாக இவர்கள் நாசத்தின் வாசற்படியில் நின்று கொண்டு தெரிந்தோ அல்லது தெரியாமலோ அதன் கதவை தட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியுமே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

நம்மூரில் பல வீடுகளில் (வீடு, பெண்ணிற்கு போடும் நகை, பண உதவி போன்று ஏதாவது ஒரு ரூபத்தில்) வரதட்சிணைக்கொடுமைகளும் , பெண் வீட்டாரின் இயலாமையையும், அவர்களின் சில குறைபாடுகளையும் தன் பக்கபலமாக கொண்டு அதையே ஆயுதமாக வைத்து அவர்களை மிரட்டுவதும், பயமுறுத்துவதும், வாட்டி வதக்கி, வறுத்தெடுப்பதும் ஆங்காங்கே இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. முற்றிலும் இல்லை ஒழிக்கப்பட்ட ஒன்று என்று யாரும் இதில் மார்தட்டிக்கொள்ள முடியாது. இவர்களின் இத்தீய செயல்களாலும், பிற்போக்கான மனோபாவத்தாலும் அவர்கள் வீடுகளிலேயே பல சங்கடங்களையும், பிரச்சினைகளையும், சோதனைகளையும், வேதனைகளையும் அன்றாடம் சந்தித்து அதை கண்கூடாக பார்த்தும் வருகிறார்கள். இருந்தும் அவர்கள் தன் செயல்களில் இறை அச்சம் கொண்டு சிறிதும் திருந்துவதும் இல்லை திருத்திக்கொள்ள விரும்புவதும் இல்லை.

நல்ல குடும்பப்பெயர்களெல்லாம் நாளை படைத்த இறைவன் முன் நமக்கு நற்சான்று அளித்து விடுமா? இல்லை கப்ருக்குழியைதான் விரிவாக்கி விடுமா? நாம் செய்த நல்ல அமல்களைத்தவிர வேறு என்ன உதவிட முடியும்?

சில குடும்பங்களில் சின்ன,சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் கணவன்,மனைவியர் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மீதி உள்ள வாழ்நாட்களை இனிதே தொடர இயலாமல் "தலாக்" மூலம் காரணங்கள் பல கூறி பல சான்றோர்கள் கூடும் சபையிலேயே அவர்களின் இல்லறம் முறிந்து முற்றுப்பெற்று விடுகிறது. ஆனால் சில குடும்பங்களில் எப்படி எனில் வீட்டுக்கு வரும் மருமகனாலோ அல்லது அவன் குடும்பத்தாலோ ஆட்சி அதிகாரம் செலுத்தப்பட்டு கேள்வி கேட்பார் யாருமின்றி அங்கு கொடுங்கோல் ஆட்சி அரியணையில் அமர்கிறது.

இங்கு மார்க்கத்தைப்பற்றி பேசும் மனிதர்கள் பேயனாகவும், பைத்தியக்காரனாகவும், பிழைக்கத்தெரியாத முட்டாளாகவும் ஆக்கப்பட்டு விடுகின்றனர். மார்க்கத்தை ஓதிப்படித்த ஆலிம்களே திருமணம் முடித்து பெண் வீட்டிற்குச்செல்கிறான். வந்து விட்டான் புதுக்கதை பேசுவதற்கு? என்று ஓரங்கட்டப்படுவதை நாம் காணுகிறோம். அல்லது ஏதோ பெரும் ஊழலில் சிக்குண்ட அரசியல்வாதிகள் தன் மேல் மக்கள் கோபம் கொண்டு வெகுண்டு எழாத வண்ணம் அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டை மூடி மறைக்க ஏதேனும் ஒரு புதிய குற்றச்சாட்டை குற்றம் சாட்டியவர் மீதே சுமத்துவது போல் நன்கு ஜோடித்து அவர் மேல் சுமத்தி திசை திருப்பி விடுகின்றனர். இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக நாளை மறுமையில் இவர்கள் முன் மார்க்கத்தை முறையே போதித்ததால் பேயன், பைத்தியாரன் என்று இகழப்பட்டு கேவலப்படுத்தப்பட்டவன் தலை நிமிர்ந்து படைத்த ரப்புல் ஆலமீன் முன் நிற்பான்.

மார்க்க/உலக விசயங்களில் உருப்படாதவன்/உருப்படாதவள் என ஊராரால் கெட்ட பெயர் பெற்ற ஆணோ அல்லது பெண்ணோ மருமகனாகவோ அல்லது மருமகளாகவோ ஒரு வீட்டிற்கு வந்து விட்டால் அவ்வீட்டினர் காலமெல்லாம் வேதனைப்படுவதை விட வேறென்ன அமைதியையும், சந்தோசத்தையுமா அவர்கள் அனுபவிக்க முடியும்?

மேற்கண்டவை ஏதோ இட்டுக்கட்டியோ அல்லது அவதூறாகவோ குறிப்பிட்ட யாரையும் தாக்கி கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலோ எழுதப்பட்டவை அல்ல. இதை உங்கள் முன் எடுத்து வைக்க எனக்கு அறுகதையும், தகுதியும் இருக்கிறதோ? இல்லையோ? இறைவன் அறிவான். ஆனால் சில குடும்பங்களில் இன்றும் நடந்து வரும் மனதிற்கு வேதனையான நிகழ்வுகளின் வெளிப்பாடே இங்கு திறந்த புத்தகமாய்.

நமக்கு நாமே திட்டம் போல நம் சமுதாயத்தை அழிக்க நமக்கு நாமே (வேட்டு வைக்க) திட்டமிடுவது போன்ற நம் அன்றாட செயல்களும், மனோபாவங்களும் இருந்து வந்தால் இதை சாபக்கேடு என்று சொல்லாமல் வேறென்ன சன்மார்க்க நெறி என்றா சொல்ல முடியும்?

சன்மார்கத்திற்கு எதிரான தீயசக்திகளைக்கண்டும், அதன் சதித்திட்டங்கள், சூழ்ச்சிகளைக் கண்டு வெகுண்டெழும் நாம் நம் மார்க்கத்திற்கே வேட்டு வைக்கும் நம் இரக்கமற்ற செயலை, துர்க்குணத்தை வேதனை என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்?

சரியான மணமகன் தன் வீட்டுப்பிள்ளைக்கு அமையாததால் ஒட்டு மொத்த மணமகள் குடும்பமே வேதனைப்பட்டு வாடும் நிலையில் அவனைத்திருத்த திரானி இன்றி, தட்டிக்கேட்க தைரியமின்றி மாறாக அவனுக்கு சப்பைக்கட்டு கட்டி அவன் செய்வதை எல்லாம் நியாயப்படுத்தி தன் பெற்றோர், உற்றாருக்கே போர்கொடி தூக்கும் பெண்களை வேதனை என்னும் நாணயத்தின் மறுபக்கம் என்று தான் சொல்ல வேண்டுமே அன்றி வேறென்ன சொல்ல முடியும்?

பாதிக்கப்பட்டவர்களின் உள்ளக்குமுறலும், அதன் வெளிப்பாடான கண்ணீரும் தண்ணீருக்குள் அழும் மீன்களின் கண்ணீர் போல் இவ்வுலகுக்கு தெரியாமல் போகலாம். அதை உலகம் அறிந்தும் அறியாதது போல் இருக்கலாம். ஆனால் படைத்த இறைவனுக்கு தெரியாமல் போய் விடுமா?

திருமணம் என்பது நல்ல கணவன், மனைவியாக கடைசி வரை இடையில் வரும் பல இன்னல்கள், சோதனைகளை எல்லாம் எதிர்கொண்டு இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொண்டு ஈருலக வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கேயன்றி ஒருவருக்கொருவர் வேட்டு வைத்து அந்த வேதனையை வேடிக்கை பார்க்க அல்ல.

எத்தனையோ குடும்பங்கள் இல்லற வாழ்வில் இன்முகம் காண இயலாமல் பல சிக்கல்களும், தேவையற்ற பிரச்சினைகளும் விஸ்வரூபம் எடுத்து இன்று வேதனையின் விழிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. இறைவன் அன்றி இவர்களின் வேதனையை துடைக்க எவரால் முடியும்?

யா! அல்லாஹ் தெளிவான மார்க்க அறிவும், தெளிந்த இஸ்லாமிய நடையும் இல்லாமல் இத்தரணியை விட்டு எங்களை அப்புறப்படுத்தி விடாதே நாயனே....

நம்மைப்படைத்த அல்லாஹ் தான் நம்மை நல்வழியில் காத்து நல்லருள் புரிய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நான் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

-- மு.செ.மு. நெய்னா முஹம்மது.
Source ; http://adirainirubar.blogspot.com/2011/05/blog-post_05.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails