Thursday, May 26, 2011

டெல்லி சென்றும் சோனியாவை சநந்திக்காதது ஏன்? - கருணாநிதி விளக்கம்!

டெல்லி சென்று மகள் கனிமொழியை சந்திது வந்த கருணாநிதி, ”சோனியாவைச் சந்திக்கும் வாய்ப்பும், நேரமும் இருந்தது. என் மகள் கனிமொழி சிறையில் இருந்ததால், இந்த நேரத்தில் சோனியாவைச் சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே நான் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.” என்று கூறியுள்ளார்.

டெல்லியில் இருந்து திரும்பிய கருணாநிதி, நேற்று புதன்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம்  கூறிய விபரம் பின்வருமாறு:
”திகார் சிறையில் இருக்கின்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, என்னுடைய மகள் கனிமொழி, சரத்குமார் ஆகியோரைக் காண்பதற்காகச் சென்றேன். டெல்லியில் தங்கியிருந்த ஹோட்டலில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத்,புதுவை நாராயணசாமி, பரூக் அப்துல்லா மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் என்னைச் சந்தித்துப் பேசினார்கள்.
கனிமொழி துணிச்சலோடும், உறுதியோடும் இந்த நிலையைச் சமாளிப்பதாகக் கூறியிருக்கிறார். அத்துடன் சட்ட ரீதியாகவும் நீதி கிடைக்கும் என்று நானும், கனிமொழியும் கருதுகிறோம். சோனியாவைச் சந்திக்கும் வாய்ப்பும், நேரமும் இருந்தது. என் மகள் கனிமொழி சிறையில் இருந்ததால், இந்த நேரத்தில் சோனியாவைச் சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே நான் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.
எல்லா மாணவர்களுக்கும் சமநிலையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் உள்பட சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களுடைய கருத்துக்கு மதிப்பளித்து திமுக ஆட்சியில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, தலைசிறந்த கல்வியாளர்களின் ஒப்புதலோடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களோடும் கலந்து பேசி சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டம் இப்போது நிறுத்தப்படுவதால் எதிர்கால தலைமுறைக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
திமுக ஆட்சிக் காலத்தில் பறிக்கப்பட்ட சொத்துகள் உரிய முறையில் மீட்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படி ஏதாவது இருந்தால் அதைத் திரும்பப்பெற்று உரியவர்களிடமோ அல்லது உரிய அமைப்புகளிடமோ ஒப்படைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.” இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தலைமைச் செயலகம் மாற்றம், சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைப்பு, சட்டமேலவை நீக்கம் என்பவை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இதற்காக வருந்த வேண்டியவர்கள் வாக்களித்தவர்கள்' என்றார்.
அதைத்தொடர்ந்து, "ராஜீவ்காந்தி கொலையில் திமுகவிற்கும் பங்கு உண்டு என்பதுபோல கே.பி. கூறிருக்கிறாரே” என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, "அவர் யாரென்றும், அவர் என்ன சொன்னாரென்றும் எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார் கருணாநிதி.
Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails