மாநிலங்களவை உறுப்பினரும் தனது மகளுமான கனிமொழி 2G வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் காலகட்டம் இது.இதற்குக் காரணம்கூட்டணி
கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா?அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட தொகுதிகளின் கணக்கா?தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா என்ற கேள்விகளுக்குள் எல்லாம் போக விரும்பவில்லை.
கருணாநிதியின் குடும்பம் தமிழகத்திலும் இந்தியாவிலும் தமது அதிகாரச் செல்வாக்கைப் பெருக்கி ஏராளமாகப் பணம் சம்பாதித்துள்ளது என்று தேர்தலில் பிரசாரம் செய்தவர்கள் இப்போதும் அதே பிரசாரத்தை தொடர்கிறார்கள். அவற்றில் உண்மை ஏதும் இல்லை என்பதைத் தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
"சன்' தொலைக்காட்சியில் பங்குதாரராக இருந்து தயாளு அம்மாள் பிரிந்தபோது கிடைத்த ரூ.100 கோடியில் வரி போக மீதி ரூ.77.5 கோடி கிடைத்தது.அதைப் பகிர்ந்து கொண்டபோது,கனிமொழிக்கு ரூ.2 கோடி கிடைத்தது. அதை பங்குத் தொகையாகச் செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.
கனிமொழி அதை விரும்பாவிட்டாலும்,அப்பா சொல்கிறாரே என ஒப்புக்கொண்டதைத் தவிர வேறு குற்றம் அவர் செய்யவில்லை.எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாப,நட்டத்தில் பங்குதாரராவது பொதுவான விஷயம்.ஆனால் அந்த நிர்வாகத்தின் அன்றாட நடவடிக்கைக்கு அனைத்துப் பங்குதாரர்களும் பொறுப்பு ஆவதில்லை.
சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய அவரது வழக்கறிஞர் ராம்ஜேட்மலானி, இதைத் தெளிவாக சுட்டிக்காட்டியும், கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரையும், கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பி,என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர் சிலர் கூடி, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
அப்போதும் அத்துடன் நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், கட்சிக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என தவம் கிடப்பது எனக்குத் தெரியாமல் இல்லை.
இந்த விவரங்களைத் தொண்டர்கள் படித்து புரிந்துகொண்டு செயல்படுத்தினால், அறப்போர்க் கணைகளை பல ஆயிரம் இளைஞர்கள் வடிவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம்.அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது நிச்சயம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment