சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிடும் நோக்கம் அரசுக்கு இல்லை என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதியளித்துள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை, இது குறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் விபரம் பின்வருமாறு:
சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு எடுத்துள்ள முடிவு பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. எனவே, இது தொடர்பாக சட்டப் பேரவை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் அ. சௌந்திரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை நேரில் சந்தித்து பேசினார்கள்.
இருவரும் கூறிய விஷயங்களை அமைச்சர் பொறுமையாகக் கேட்டறிந்தார். பின்னர் சமச்சீர் கல்வித் திட்டம் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அதனை கைவிடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
இப்போது அரைகுறையாக உள்ள இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்தாது என்பதால் அமைச்சரவை முடிவின்படி, ஒரு வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள் வந்தபின் சமச்சீரான கல்வி விரைவில் அமலாக்கப்படும் என்றார்.
ஏழை, எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் பொருட்டு பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை எளிதில் கட்டக் கூடிய அளவில் நிர்ணயிக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. அமைச்சரவை இது குறித்து பரிசீலினை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment