தாய்லாந்து நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் முன்னர் அங்கிருந்து விரட்டப்பட்ட முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ராவின் இளைய தங்கை யிங்லுக் சினவத்ரா, அபார வெற்றி பெற்று பிரதமர் பதவியைப் பிடித்துள்ளார். இவர் தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர் என்ற சாதனையையும் இத்துடன் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் பிரதமராக இருந்து வந்த தக்ஷன் சினவத்ராவுக்கு எதிராக ராணுவத்தின் உதவியுடன் மக்கள் புரட்சி வெடித்தது. இதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் கடந்த 6 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் மாறி மாறி வந்த போதும் தாய்லாந்தில் கலவரங்கள் ஓயவில்லை. இந்நிலையில் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் சினவத்ராவின் இளைய தங்கையான யிங்லுக் பியூ தாய் என்ற கட்சியின் தலைமையில் போட்டியிட்டார். "தாய் மக்களுக்காக" என்ற அர்த்தம் வரும் இக்கட்சியின் தலைவர் நாட்டைவிட்டு விரட்டப்பட்ட தக்ஷின் சினவத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில் 44 வயதான யிங்லுக் தலைமையிலான கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதையடுத்து யிங்லுக் பிரதமராக பொறுப்பேற்கிறார். தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் இத்துடன் அவருக்குக் கிடைத்துள்ளது.
யிங்லுக் இதுவரை எந்த அரசுப் பொறுப்பையும் வகித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் எப்படி தாய்லாந்து நாட்டை நிர்வகிக்கப் போகிறார் என்று சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும் தாய்லாந்து மக்கள் குறிப்பாக பெண்கள் யிங்லுக்கின் திறமையைப் போற்றுகின்றனர். அவர் மிகச் சிறந்த நிர்வாகி, சிறப்பான ஆட்சியை அவர் கொடுப்பார் என்று புகழாரம் சூட்டுகின்றனர்.
கலவரங்களுக்கிடையில் தத்தளிக்கும் தாய்லாந்தில் யிங்லுக் அமைதியைக் கொண்டுவருவாரா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் நிலவுகிறது.
Source : http://www.inneram.com
--------------------------------------------------------------
No comments:
Post a Comment