Tuesday, July 12, 2011

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை

இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வெளியுறவுக்  கொள்கை பற்றி சில ஆங்கில நூல்களை சமீபத்தில் படித்து முடித்தேன். குறிப்பாக பேராசிரியர் முஹம்மது சித்தீக் குறைஷி  எழுதிய நூலைச் சொல்லலாம். அந்நூல்களில் உள்ள பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதனால் அவற்றிலிருந்து நான் எடுத்த சில பல விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்காக இங்கே தருகிறேன் – நாகூர் ரூமி

பெருமானாரின் வெளியுறவுக் கொள்கை

முன்னுரையாக சில விஷயங்கள்

இந்த உலகம் ஆன்மிகத்திலும், ஒழுக்கத்திலும் மிகவும் மோசமான நிலையில் இருந்தபோது இஸ்லாத்தின் வருகை நிகழ்ந்தது. இஸ்லாத்தின் புனித ஒளி அந்த இருளை நீக்கியது. பள்ளிவாசலிலிருந்து சந்தை, பள்ளிகளில் இருந்து அரண்மனைகள், வீடுகளில் இருந்து யுத்த களம் என பரவ ஆரம்பித்தது அந்த ஒளி. அறிவு, இரக்கம், பரஸ்பர புரிந்து கொள்ளல், நீதி, நியாயம் போன்றவையெல்லாம் முதன் முறையாக அரேபியர்கள் மத்தியில் உருவாக்கப் பட்டன. இஸ்லாம் எனும் அமைதி மார்க்கத்தின் பெயரால் அரேபியா மட்டுமல்ல, அகில உலகமும் ஒன்றுபட ஆரம்பித்தது.

பெருமானாரின் வரலாற்றை வரலாற்று ஆசிரியர்கள் அருமையான நூல்களாகக் கொடுத்திருக்கிறார்கள். என்றாலும், அவர்கள் பார்க்காது விட்ட கோணங்கள் சில உண்டு. அவற்றில் வெளியுறவுக் கொள்கையும் ஒன்று. அது நம் கவனத்துக்குரியது. அதைப்பற்றிய ஆராய்ச்சியும் தேவை.

இன்றைய உலகில், சர்வதேச போட்டி மனப்பான்மை மேலோங்கி உள்ளது. கலாச்சார மன இறுக்கங்கள் சமுதாயத்தைக் கூறு போடுகின்றன. ஆனால் மாற்றம் மட்டுமே நிரந்தரமான ஒன்றாக உள்ளது. மனிதன் நிறைய சேர்த்து வைத்திருக்கிறான், ஆனால் சமூக அநீதி அவன் ஆன்மாவைக் கிழித்து விட்டது. அவன் படைத்தவற்றாலேயே அவனது இருப்புக்கு அபாயம் வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் முன்னணி வீரனாக அவன் இருக்க விரும்பினால், முஹம்மது (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதே சிறப்பாக இருக்கும். இந்த கருத்தின் பின்னால் உள்ள நேர்மையை ஆழமாகப் படித்து உணர்பவர்கள் நிச்சயம் புரிந்து கொள்ளலாம். கொள்கைகளைவிட மற்ற விஷயங்கள் நமக்கு முக்கியமானதாகப் போய்விட்டதால், நல்லது கெட்டதுக்கு மத்தியில் வித்தியாசமில்லாமல் போய்விட்டது.

முஹம்மது நபியவர்களின் சர்வதேசக் கோட்பாடுகளைப் பின்பற்றினால் வறுமையில் இருக்கும் உலகம் மேலே வர வாய்ப்புண்டு. நவீன உலகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல், நிர்வாக ரீதியான ஞானம் அக்கோட்பாடுகளில் உள்ளது. தலைசிறந்த ஆட்சியாளராக, நிர்வாகியாக, கோட்பாட்டு வடிவமைப்பாளராக, சட்ட வல்லுணராக இருந்த முஹம்மது அவர்களைப் பின்பற்றினால் சர்வதேச அளவில் பல நாடுகளில் ஆட்சி செய்யும் முஸ்லிம் அரசுகள், விரிவடையவும் வலுவடையவும் முடியும்.

கடந்த 1400 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்ற மார்க்கமாகும். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் அதி வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம் என்று அதன் ஆட்சியாளர்களும் அதிகாரிகளுமே சொல்லியிருக்கிறார்கள். டோனி ப்ளேரின் மனைவியின் சகோதரி முஸ்லிமானதுவரைஇன்றைய வரலாறு நமக்குத் தெரிந்ததுதான்.

தொடக்கத்திலிருந்தே ஓர் உலக மதமாகவே இஸ்லாம் இருந்து வந்துள்ளது. ஆப்பிரிக்காவின் சுடு மணல், சைபீரியாவின் குளிர் பனி, மலேயாவின் பவழப்பாறைகள், அரேபியாவின் பொட்டல் பள்ளத்தாக்கு — எல்லாப் பகுதிகளிலும் பெருமானாரைப் பின்பற்றுபவர்கள் உள்ளனர். நாகரீகம் என்பது பூகம்பத்தாலோ, புயலாலோ, ராணுவ வெற்றியாலோ அழிந்து போகக்கூடியதல்ல. மெல்ல மெல்ல அநீதி, அராஜகம் போன்றவற்றிற்கு  மனிதர்கள் அடிபணிந்து விடுகிறார்கள். அது நம்மை உள்ளே அரித்துக் கொண்டே போகிறது.

மிகத் தொன்மையான ஆதார நூல்களும், நவீன ஆராய்ச்சிகளும் நான் படித்து முடித்த நூல்களின் உள்ளடக்க விஷயங்களுக்காக  உதவியுள்ளன. முக்கியமான எதையும் நூலாசிரியர்கள் விட்டுவிடவில்லை. கிடைத்த தகவல்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரிசையில் சொல்ல மட்டுமே நான் முயன்றுள்ளேன். உதிரியாகக் கிடைத்த தகவல்களும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. முஹம்மது நபி ஒரு கொடுங்கோலர், மோசமான அரசியல்வாதி என்று காட்ட மேற்கத்திய எழுத்தாளர்கள், ஓரியண்டலிஸ்ட்டுகள் காலங்காலமாக முயன்றுள்ளனர். ஆனால் நான் உத்தேசித்துள்ள இந்த தொடர் கட்டுரைகளைப் படிப்பவர்கள், முக்கியமாக முஸ்லிமல்லாதவர்கள், முஹம்மது அப்படிப்பட்டவரல்ல என்ற உண்மையை விளங்கிக் கொள்வார்கள். ஒரு வகையில் இக்கட்டுரைகளின் நோக்கமும்கூட இதுதான். இது ஒரு சிறிய தொடக்கம்தான். வருங்கால சந்ததியினர் மேலும் ஆராய்ச்சி செய்து பல உண்மைகளை வெளிக்கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

வெளியுறவுக் கொள்கை – ஒரு சிறு அறிமுகம்

தனி மனிதர்கள் ஒருவருக்கொருவர் உறவு வைத்துக்கொள்வது போல நாடுகளும், அரசுகளும் வைத்துள்ளன. ஒரு நாடு என்பதும் தனி மனிதர்களைக் கொண்டதுதான். எனவே நாடுகளுக்கு இடையேயான உறவு என்பதும் தனி மனிதர்களுக்கிடையேயான உறவுதான். என்ன, இந்த உறவின் தன்மை கொஞ்சம் வேறுபட்டதாகவும், சிக்கலானதாகவும் இருக்கும். அவைகள் சர்வதேச உறவுகள் என்றும் வெளியுறவுக் கொள்கை என்றும் அறியப்படுகின்றன. சர்வதேச கால் பந்து விளையாட்டு அல்லது ஒலிம்பிக் விளையாட்டை உதாரணமாகச் சொல்லலாம்.

நாடுகளுக்கிடையேயான இந்த உறவுகளை வெளியுறவுக் கொள்கைகள்தான் வரையறை செய்கின்றன. பந்து விளையாட்டும் சரி, அரசியல் அதிகார விளையாட்டும் சரி, இக்கொள்கைகளை அடிப்படையாக வைத்தே ஆடப்படுகின்றன. அப்படியானால் இக்கொள்கைகள் எப்படி உருவாக்கப் படுகின்றன? அவை எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன? போரைத் தவிர்க்க அவைகளைப் பயன்படுத்த முடியுமா? என்பதையொத்த கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்க நாம் வெளியுறவுக் கொள்கையை கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது.

கிட்டத்தட்ட ஏழாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதகுல வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளிலும் பல்வேறு நாடுகளுக்கும் இடையே உறவும் பகையும் இருந்துள்ளன. ஒவ்வொரு நாடும் அல்லது அரசும் தனக்கென தூதர்களை நியமித்துள்ளது. அந்நிய நாட்டுத் தூதர்களை வரவேற்றுள்ளது. கடன் கொடுத்தும் கடன் வாங்கியும் உள்ளது. இடம் கொடுத்தும், இடம் பிடித்தும் உள்ளது. மாணவர்களை, ஆசிரியர்களை மற்றும் பொருள்களைக் கொடுத்தும் எடுத்தும் உள்ளது. வாணிபம் நடைபெற்றுள்ளது. விளையாட்டும், கலை நிகழ்ச்சிகளும் பரிமாறப்பட்டுள்ளன. போர் நடந்துள்ளது. நட்பு மலர்ந்துள்ளது. திருமணங்கள் நடைபெற்றுள்ளன. ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாமும் ஒருங்கிணைக்கப்பட்டோ, ஒருங்கிணைக்கப்படாமலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ நடைபெற்று வந்துள்ளன. பல்வேறு நாடுகளுக்கும் இடையே இவ்விதமாக கலாச்சார, அரசியல், பொருளாதார, சமூக, சமய உறவுகள் இருந்துள்ளன.

ஒரு நாட்டின் அதிகார மையமாக இருக்கும் அரசினால் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்படுகிறது. சர்வதேச சமூகத்தில் தனக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்தில் அவை வகுக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டையும், தேசிய அந்தஸ்தையும் உயர்த்தும் வகையிலும், தேவைப்பட்டால் பாதுக்காப்பு கொடுக்கும் வகையிலும் அவை அமைக்கப்படுகின்றன. ஒரு நாடு என்ன செய்து கொண்டிருக்கிறது, இன்னொரு நாட்டிலிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நாட்டின் பூகோள ரீதியான அமைப்பும், தட்பவெப்பமும், ராணுவச் செயல்பாடுகளும் அதன் வெளியுறவுக் கொள்கையை கட்டுப்படுத்துகின்றன. உதாரணமாக, ஹிட்லர் கால ஜெர்மனியின் வெளியுறவுக் கொள்கையில் ‘லெபன்ஸ்ட்ராம்’ என்ற ஒரு கருத்து வலுவாக இருந்தது. ‘லெபன்ஸ்ட்ராம்’ என்றால் இடத்தைப் பெருக்குதல், நாடு பிடித்தல் என்று அர்த்தம். இன்னொரு நாட்டைப் பிடித்து அடிமையாக்கிக் கொண்டு, தன் மக்கள் தொகையைப் பெருக்க வேண்டும் என்பது அதன் கருத்தாக இருந்தது. முதல் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் இந்த கொள்கை பரவலாக வலுப்பெற்று இருந்தது. அதாவது, அவர்களுடைய வெளியுறவுக் கொள்கையானது மனித உறவுகளை அழித்து விட்டு வெறும் வெளியை மட்டும் விஸ்தீரணப் படுத்திக் கொள்வதாக இருந்தது.

ஒரு நாடு பூகோள ரீதியாக எந்த சூழ்நிலையில் இருக்கிறது என்பதை வைத்தே அதன் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும் என்று ஹெர்பெர்ட் மெக்கிண்டர் போன்றவர்கள் (Herbert Mackinder) கூறினர். பூகோள அரசியலின் தந்தை என்று சொல்லப்படும் ருடால்ஃப் ஜெல்லன் என்பவரும் (Rudolf Kjellen) இந்த கருத்தையே வலியுறுத்தினார்.

கிட்டத்தட்ட அந்த கருத்துதான் இன்றுவரை உள்ளது. 1957-ல் ரஷ்யா ஸ்புட்னிக் என்ற வான ஊர்தியை பிரபஞ்ச வெளியில் மிதக்க விட்ட பிறகு விமானப்படைத் தற்காப்பு என்ற கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. பொருளாதாரப் பிரச்சனைகளும் சர்வதேச உறவுகளை பாதிப்பதாக இன்று உள்ளன. மக்கள் தொகை அதிகம் உள்ள ஒரு நாடு நிறைய கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இன்றைய உலகம் டாலர் பகுதி என்றும், ஸ்டெர்லிங் பகுதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. பலவீனமான நாடுகள், பொருளாதார ரீதியில் வலுவாக இருக்கும் நாடுகளோடு சேர்ந்துகொள்ள பிரியப்படுகின்றன. தொழில் ரீதியாக முன்னேறிய நாடுகள் தங்கள் தயாரிப்புகளை எந்தெந்த நாடுகளில் அதிகம் விற்கலாம் என்று பார்க்கின்றன. எண்ணெய், கரி, இரும்பு போன்ற பொருள்கள் பல நாடுகளின் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அதிக மக்கள் தொகை, புலம் பெயர்தல், அவர்களுக்கான மறுவாழ்வு, மக்களின் மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் இவற்றை ஒட்டியும் வெளியுறவுக் கொள்கைகளை வகுக்க வேண்டியுள்ளது.

அந்தக் காலத்தில் அரசாங்கம் என்பது குறிப்பிட்டதொரு பெரிய நகரத்தை ஒட்டியதாகத்தான் பெரும்பாலும் இருந்தது. அங்கே முடிவு செய்யப்படுவதுதான் முழு தேசத்துக்குமான சட்டங்களாக, கொள்கையாக இருந்தது. உதாரணமாக பண்டைய ரோமாபுரி, ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, மாசிடோனியா போன்ற நகர அரசுகளைச் சொல்லலாம். ஆனால் பாரசீகம் போன்ற பெரிய அரசுகளும் இருக்கத்தான் செய்தன. ஒவ்வொரு நாடும் தான்தான் ‘பெரிசு’ என்று நினைத்தது.

உதாரணமாக கிரேக்கரல்லாதவர்களை ‘காட்டுமிராண்டிகள்’ என்று கிரேக்கர்கள் வர்ணித்தனர். அரிஸ்டாட்டில், ப்ளேட்டோ போன்ற தத்துவவாதிகள்கூட கிரேக்கரல்லாதவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தையே ஆதரித்தனர். இன்னொரு பக்கம் யூதர்களோ, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்று தங்களைக் கருதினர்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும்கூட சர்வதேச உறவுகளைத் தீர்மானிப்பதில் பங்கெடுத்துக் கொண்டன. அரசியலில் அதிகாரம் என்பது இயற்பியலில் ‘எனர்ஜி’ எனப்படும் ஆற்றலைப் போன்றது. அரசியல், அதிகாரம் இரண்டும் ஒரு நாட்டின் குறியீடாக உள்ளன. ராட்சச அரசியல் அதிகாரம் கொண்ட நாடுகள், அப்படி இல்லாத நாடுகள் என இரண்டு பிரிவுகளாக உலகில் உள்ள நாடுகளைச் சொல்லலாம். இதில் ஒரு பிரிவு ஜனநாயகத்தையும் இன்னொரு பிரிவு கம்யூனிசத்தையும் ஆதரிக்கும். ஆனால் இவ்விரண்டு பிரிவுகளும் அமைதியான நல்லுறவில் இருந்தால்தான் உலகின் எதிர்காலம் நன்றாக இருக்கும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது வெளியுறவுக் கொள்கை என்பது நான்கு கோணங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்:

1.         இலக்குகளை, நோக்கங்களை நிர்ணயிப்பது.

2.         அவற்றை அடைவதற்காக வழிகளை வகுப்பது.

3.         செயல்படுத்துவதற்கான அதிகாரத்தை அரசியலுக்கு வழங்குவது.

4.         கொள்கைகளை மறுபரிசீலனை செய்வது.

நிறம், இனம், மொழி, பூகோளம் இவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் உலகத்துக்கே பொதுவான ஒரு லட்சிய அரசை இஸ்லாம் ஸ்தாபிக்கிறது. அமைதி, உலகளாவிய நீதி ஆகியவற்றின்மீது அது கட்டப்படுகிறது. வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் இஸ்லாமிய மார்க்கத்தின் பங்கு இது. எப்படி? பார்க்கலாம்.

 Source : http://nagoorumi.wordpress.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails