Saturday, July 9, 2011

இஸ்லாமியக் கல்விக்கு ஒரு புதிய பாடத்திட்டம்!

எழுதியவர் : நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed.,கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல், மொழி – இவற்றில் எந்தப் பாடமாக இருக்கட்டும். நமது இளந்தலைமுறைக்கு – இவைகளை எப்படிச் சொல்லிக் கொடுக்கிறோம்? பள்ளிக்கூடங்களில் சேர்க்கிறோம். ஒவ்வொரு பாடத்துக்கும், ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு பாடத் திட்டம். அதற்குப் பாட நூல்கள், வாரம் ஒன்றுக்கு குறிப்பிட்ட சில வகுப்புகள், ஒரு ஆசிரியர், நோட்புத்தகம், தேர்வுகள், மதிப்பெண்கள் – இந்த அடிப்படையில் ஓராண்டு இறுதியில் தேற வைத்தல் அல்லது தக்க வைத்தல்! பின்னர் அடுத்த வகுப்பிற்குச் சென்றதும் சற்றே அதிகரிக்கப்பட்ட பாடத் திட்டத்துடன் அதே பயிற்றுவிப்பு முறை. இவ்வாறு பத்து ஆண்டுகள் – பன்னிரண்டு ஆண்டுகள் படித்து பள்ளிப் படிப்பை முடிக்கிறான் நமது மாணவன். கல்லூரிக்கு மேற்படிப்புக்குச் சென்றாலும் இதே முறைதான். வரவேற்போம்.
நாம் கேட்பது என்னவென்றால் – இஸ்லாம் என்ற பாடத்தை நமது இளந்தலைமுறைக்கு இவ்வாறு நாம் கற்றுக்கொடுத்தோமா? கற்றுக் கொடுக்க நினைத்தோமா? இஸ்லாம் கற்றுக் கொள்ளப்பட வேண்டிய பாடமா அல்லவா என்று சிந்தித்தோமா? நாம் அவர்கள் அனைவரையும் ஆலிம்களாக ஆக்கி விடுங்கள் என்று சொல்லவில்லை. ஒரு பத்தாவது படித்த மாணவனுக்கு மற்ற பாடங்களில் எவ்வளவு தெரிந்திருக்கிறதோ அதே அளவு இஸ்லாத்தைப் பற்றியும் அவன் தெரிந்தருக்க வேண்டாமா?
நாம் என்ன செய்கிறோம்? பள்ளிவாசலோடு இணைந்தீருக்கும் மக்தப் பள்ளிகளுக்கு நமது குழந்தைகளை அனுப்புகிறோம். எல்லோருமே அனுப்புகிறார்களா என்பதும் கேள்விக்குறி! அலிஃப் – பே – தே – என்று நமது குழந்தைகள் ஓதுவார்கள். குர்ஆன் ஓதக் கற்றுக்கொடுக்கப்படும். பொருள் தெரியாது. பத்துப் பனிரெண்டு வயது ஆனவுடன் – நிறுத்தி விடுவோம். ஏதோ பட்டம் வாங்கி விட்டது போல. பெற்றோர்க்கு குழந்தைகள் அங்கு என்ன கற்றுக்கொண்டன என்பது குறித்தெல்லாம் கவலை கிடையாது.
ஆனால் 5 கலிமாக்கள், குர்ஆன் ஓதுதல், தொழுகை, குளிப்பு, உளு – பற்றிய சட்டங்கள், நபி (சல்) வரலாறு, கொஞ்சம் அறிவுரைகள் – என்று அங்கேயும் ஒரு பாடத் திட்டம் உண்டு. மக்தப் பள்ளிகளில் அவ்வளவு தான் இயலும் என்றாலும் அந்த அளவுக்குக்கூட – எத்தனை சிறார்கள் படித்துக்கொண்டார்கள் என்பதும் கேள்விக்குறி!
இந்நிலையில் நமது மாணவர்கள் மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்து வெளிவருகின்ற வேளையில் எத்தகைய இஸ்லாமிய அறிவு அவர்களிடத்தில் இருக்கிறது? இஸ்லாம் குறித்த எந்த ஒரு கேள்;விக்கும் பதில் சொல்லத் தெரியாத இளைஞர்களே அதிகம். இஸ்லாம் என்பதன் பொருள் தெரியாது. நபியவர்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் கூடத் தெரியாது. விளைவு?
ஈமானிலேயே அவர்களுக்குச் சந்தேகங்கள். யாரிடம் கேட்டாலும் தெளிவான பதில்கள் கிடைப்பது அரிது.
யார் முஸ்லிம்? எது இஸ்லாம்? அதன் அடிப்படைகள் என்ன? நாம் சார்ந்திருக்கும் மார்க்கம் எத்தகையது? அதன் வரலாறு என்ன? நமது கடமைகள் என்ன? முஸ்லிம்கள் வரலாற்றில் சாதித்தது என்ன? – எதுவுமே தெரியாது இன்றைய இளைஞனுக்கு!
என்ன செய்யலாம்? நாம் முதலில் குறிப்பிட்டது போல ஒரு முறையான பாடத்திட்டத்தின் கீழ் இஸ்லாத்தை (Strucural study of Islam) நமது இளைய தலைமுறைக்குக் கொண்டு போய் சேர்த்திட நாம் – என்ன செய்யலாம்? சொல்லுங்கள்!
Source : http://meemacademy.com/?cat=48

நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர். மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy) எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் (Human Resource Development) பயிற்சி அளித்து வருகிறார்.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா.

Jazakkallahu Hairan நன்றி http://niduronline.com

Please Visit Mansoor Ali websites:

http://www.meemeducation.com/
http://meemacademy.com/
http://thegardenacademy.in/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails