திருமலர் மீரான்
-----------------
ரமலானுல் முபாரக்
புனித காலம்
இறையருள் குறிஞ்சிகள்
பூத்துக் குலுங்கும்
வசந்த காலம் !
விண்ணவர் குயில்கள்
தீன் ராகம் இசைக்க
மண்ணகம் தேடும்
அபூர்வ காலம் !
கருணை மனுக்களைக்
கரங்களில் ஏந்தித்
தெளபாவிற்காய்
வரிசையாய் நிற்கும்
பாவாத்மாக்களின்
மனுநீதிக் காலம் !
பாதகச் செயல்களைச்
சுமந்து தவிக்கும்
ஐம்பொறிகளின்
ஓய்வின் காலம் !
இதய தாமரைகள்,
திருமறைக் கதிர்களால்
மலர்ந்து சிறக்கும்
உதய காலம் !
முப்பதாயிரம் இரவினும்
முத்தாய் ஜொலிக்கும்
முதுபெரும் இரவாம்
லைலத்துல் கத்ரின்
வரவின் காலம் !
அல்லாஹ் அளித்த
அருமறைப் பேழையைத்
திருநபி முகம்மது
திருவாய்க் கொண்டு
திறந்த காலம் !
பரோலில் சென்ற
சைத்தான் இப்லீசு
ஆயுட் கைதியாய்ச்
சிறைப்படும் காலம் !
மனமொழி
மெய்களால்
கசடற ஒழுகிய
நோன்பாளிகளைச்
சுவனத்தின்
ரய்யான் வாயில்
விருந்திற்காய்
வரவேற்கும் காலம் !
நோன்பு வேள்வியில்
வென்ற வீரர்கள்
இறைவனிடமிருந்து
பரிசினைப் பெறுகின்ற
அதிர்ஷ்டகாலம் !
திக்ர் துஆ
தவ்பா சலவாத்
தொழுகை யென்னும்
வைரச் சுடர்களால்
இரவுகளைப் பகலாக்கிப்
பகல்களில் ஒளி பாய்ச்சும்
மூமின்களென்னும்
வித்தைக்காரர்களுக்குப்
பொற்காலம் !
திருமலர் நோன்பின்
தீந்தேன் சுவையை
மாந்தித் திளைத்த
மாந்தர்க்கெல்லாம்
ஈதுல் பித்ர்
திருவிழாக் காலம் !
நன்றி :
மதிநா மாத இதழ்
ஆகஸ்ட் 1980
( முனைவர் திருமலர் மீரான் பிள்ளை திருவனந்தபுரம் அரசு கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பல்வேறு நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். )
from: Muduvai Hidayath
<muduvaihidayath@gmail.com>
No comments:
Post a Comment