மனிதனாகப் படைக்கப் பட்ட அனைவருக்கும் ஐந்து வேளை தொழுகையை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அதேபோல ரமளான் மாதத்தின் 30 நாட்களில் இரவுத் தொழுகையான தராவீஹ் தொழுகையையும் நாம் அனைவரும் இடைவிடாது கடைபிடித்து வருகிறோம். தராவீஹ் தொழுகை சுன்னத்தான தொழுகைதான் என்றாலும் நோன்பு காலங்களில் இதனை தொழுவதால் நன்மைகளை கொள்ளையடித்துக் கொள்ளலாம்.
தராவீஹ் தொழுகையின் போது பள்ளிவாசலுக்கு வெளியில் அதிக சப்தத்துடன் ஒலிபெருக்கி உபயோகிப்பதை பல பள்ளிவாசல்கள் பின்பற்றி வருகின்றன. குர்ஆன் வசனத்தை பலரும் கேட்க வைப்பதற்காகத்தான் இரவுத் தொழுகையில், பள்ளிவாசலுக்கு வெளியில், ஒலிப்பெருக்கி உபயோகிப்பதாக பலர் கருதுகின்றனர். ஆனால் இது அருகில் உள்ள வீடுகளிலோ, அல்லது அதே பகுதியில் ஒலிப்பெருக்கி உபயோகிக்காத பிற பள்ளிகளிலோ தொழுபவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதாக அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெளியில் உள்ள பலரால் குர்ஆன் வசனம் கவனிக்கப்படுவதில்லை என்றும் இதனால் குர்ஆன் வசனத்திற்கு கொடுக்கப்படும் கண்ணியம் குறைகிறது என்றும் மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.
மேலும் வயோதிகர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகள், வழக்கமாக அவரவர்கள் உறங்கும் நேரங்களில் உறங்கிவிடுவர். அவர்களுக்கும் ஒலிப்பெருக்கி சப்தம் பல வகைகளில் சிரமத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
முன்பெல்லாம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர்களில் பள்ளிவாசல்களில் பாங்கு அழைப்பிற்கு மட்டுமே ஒலிப்பெருக்கி உபயோகிக்கப்பட்டது. ஆனால் அது நாளடைவில் மாறி சில ஊர்களின் பள்ளிவாசல்களில் அனைத்து தொழுகைகளுக்கும் ஒலிபெருக்கி உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர்.
இது ஒருபுறமிருக்க, சில பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினரிடையே நிகழும் ஈகோ, போட்டி போன்றவையும், இதுபோன்ற மாற்றங்களுக்கு காரணமாகிவிட்டது. அது பணக்கார பள்ளி, இது ஏழை பள்ளி என்று பிரித்துப் பார்க்கும் தன்மையும் சிலரிடம் சீரியஸாகவே வந்துவிட்டது. இதுவும் இதுபோன்ற மாற்றங்களுக்கு காரணமாகக் கருதப்படுகிறது. ( அல்லாஹ் பிரித்தாளும் தன்மையை எங்கும் அனுமதித்ததில்லை )
அதேபோல நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையும் பள்ளிவாசல்களுக்கு வெளியில் ஒலிப்பெருக்கி உபயோகிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, இதுபோன்ற பல சிரமங்களை கருத்தில் கொண்டே பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு பள்ளிவாசல்களுக்கு வெளியில் ஒலிப்பெருக்கி உபயோகிப்பதற்கு இஸ்லாமிய நாடான சவூதி அரேபியா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதாவது பள்ளிவாசல்களின் உள்ளுக்குள் ஒலிப்பெருக்கி உபயோகித்து தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றும் ஆனால் ஒரே பகுதில் பல பள்ளிவாசல்கள் இருக்கும் பட்சத்தில் ஒலிப்பெருக்கி உபயோகிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதேபோல வெளியில் ஒலிப்பெருக்கி உபயோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களில், பிறருக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சப்தத்தை அதிகரிக்கக் கூடாது என்றும் சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.
மொபைல் போன்களில் குர்ஆன் வசனத்தை ரிங் டோனாக வைத்திருப்பவர்கள், போன் அழைப்பு வந்ததும் குர்ஆன் வசனத்திற்கு பாதியிலேயே தடைபோட்டு போனுக்கு பதிலளிக்கும் நிலை வரும்போது குர்ஆன் வசனத்திற்கு கொடுக்கப்படும் கண்ணியம் மீறப்படுவதாகவும், இதனால் மொபைல் போன்களில் குர்ஆன் வசனங்களை ரிங் டோனாக உபயோகிக்க வேண்டாம் என்றும் மார்க்க அறிஞர்கள் பலர் வேண்டுகோள் விடுத்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
இப்னு ஹசன்
நன்றி : http://www.adirainews.net
No comments:
Post a Comment