அவரது வாழ்வே தீண்டாமைக்கு எதிரான போராக இருந்தது. முதன் முதலாக 1989ல் நீடூரில் தீண்டாமை குறித்து ஒரு பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாட்டை அப்போது இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் தமிழக மண்டலத் தலைவர் நீடூர் எஸ்.ஏ. மன்சூர் அலி செய்திருந்தார். டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, மு. குலாம் முஹம்மது கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், மவ்லவி இஸ்மாயீல் நாஜி, மவ்லவி இப்றாஹீம் ஜமாலி முதலியோருடன் நானும் பங்குக் கொண்டேன். அந்த நிகழ்வில் தான் முதன் முதலாக சகோதரர் டி.எம். மணியின் உரையை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வியந்துப் போனேன் அவரது தியாகம் நிறைந்த சிந்தனை வெளிப்பாட்டை அறிந்தேன்.
நீடூரில் நடைபெற்ற அந்த பயிலரங்கம் சமீப கால தமிழக வரலாற்றில் இஸ்லாமிய அழைப்பியல் பணியில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது.
தொடர்ந்து களத்தில் இடைவிடாமல் மக்களுக்காக பணியாற்றிய சிந்தனை செம்மல் டி.எம். மணி அவர்கள். நான் பழகிய தலித் தலைவர்களில் தனி நபர் ஒழுக்கம், நாணயம், எளிமை ஆகியவற்றில் சிகரமாக திகழ்ந்தவர். வெற்று விளம்பர மோகம் இல்லாமல் அடிதட்டு மக்களுக்காக தன்னலமற்ற முறையில் உழைத்த தலைவர் அவர். அவர் தனக்கென சேர்த்து வைத்த உலகியல் சொத்து திருப்பனந்தாளில் உள்ள பொது மிதிவண்டி நிறுத்துமிடம் மட்டுமே. ஆனால் அவரது தியாகமும் உழைப்பும் பழைய தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாமல் தென் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தலித் மக்களின் வாழ்வில விடுதலையின் ஒளியை ஏற்றி வைத்தது.
பேச்சாளர்கள் சிறந்த எழுத்தாளர்களாக பெரும்பாலும் இருப்பதில்லை. இதே போல் சிறந்த எழுத்தாளர்களும் பெரும்பாலும் சிறந்த பேச்சாளர்களாக இருப்பதில்லை. இதற்கு விதிவிலக்கு அண்ணன் மணி. அவரது பேச்சில் இருந்த வீரமும் எழுச்சியும் அவரது எழுத்து நடையிலும் அதே கம்பீரத்துடன் காணப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது நான் நேரில் சென்று பார்த்தேன். பிறகு சென்னையில் அரசினர் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். இதன் பிறகு என்னுடைய இல்லத்திற்கு வந்து பல மணிநேரம் பேசினார். பழைய நினைவுகளை அசைப்போட்டோம். தலித் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக இன்னும் ஏராளமாக உழைக்க வேண்டும் என்ற வேகம் இருந்தது. நான் தொகுத்து வெளிவந்து தித்திப்பான திருப்புமுனைகள் நூல் தனக்கு ஏராளமாக வேண்டும் என்று கேட்டார். எதற்கு என்று நான் கேட்டபோது பல ஊர்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அங்கெல்லாம் நண்பர்களுக்கு இந்த நூலை அளிக்க வேண்டும் என்றார். நான் இப்போது தான் மருத்துவமனையிலிருந்து வந்துள்ளீர்கள். சற்று வீட்டில் ஒய்வெடுங்கள்; பிறகு களத்திற்கு போகலாம் என்று ஆலோசனைச் சொன்னேன்.
இன்று காலை 5 மணியளவில் அவரது புதல்வர் டி.எம். சம்சுதீன் 'சற்று முன் அப்பா மரணித்துவிட்டார்' என்று சொன்ன போது எனது துக்கம் அளவு கடந்து விட்டது. ஒரு சக களப்பணியாளரை, ஒரு சீரிய சிந்தனையாளரை, சுயநலமில்லாமல் மக்களுக்காக உழைத்த தலைவரை நாம் இழந்து விட்டோம்.
எல்லாம் வல்ல இறைவன் அண்ணன் டி.எம். உமர் பாரூக் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு உயர்ந்த சுவனபதியை வழங்க பிரார்த்தனைச் செய்கிறேன்.
No comments:
Post a Comment