Monday, June 1, 2015

சில நேரச் சிறகுகள் !

சில நேரச் சிறகுகள் !

                                 -கம்பம் ஹாரூன் ரஷீத்

சில நேரங்களிலாவது

சிந்தனைச் சாளரத்தில்

படைப்பியல் நுகர்வோம்;

பிறப்பியல் நுணுக்கங்கள்

சிறப்பியல் சிந்தையிடும் !



சில நேரங்களிலாவது

கோபக் குமுறல்களில்

குளிர் நீருற்றுவோம்;

இரத்தக் கொதிகலன்

சத்தமின்றிச் சாந்தமிடும் !



சில நேரங்களிலாவது

மென்மையின் ரிதங்களை

நாவினில் மீட்டுவோம்

செவிகளின் வருடலில்

இதயம் புன்சிரிக்கும் !



சில நேரங்களிலாவது

மழலையின் அசைவுகளை

மனதாரக் கொஞ்சுவோம்

மறுபடியும் மழலையாய்

மாறிய மகிழ்விருக்கும் !



சில நேரங்களிலாவது

சுயநலம் தவிர்த்திட்ட

பொது நலம் புரிவோம்

மனதின் நிறைவுகளில்

எது நலம் புரிபடும் !



சில நேரங்களிலாவது

மறுமையின் நினைவுகளை

மனதினில் பதிப்போம்

இம்மையின் அசைவுகள்

செம்மையாய்ச் செப்பனிடும் !



சில நேரங்களிலாவது

இறைமையின் ஓர்மையில்

இமைகளை நனைப்போம்

இதயச் சுமைகளெல்லாம்

இதமாகப் படியிறங்கும் !

 ( இனிய திசைகள்  - மார்ச் 2015 இதழிலிருந்து )

from:    Muduvai Hidayath
 <muduvaihidayath@gmail.com>

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails