Sunday, December 27, 2015

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(5)


சிறுபறவை சிறகசைப்பில்
சிறப்பெதுவும் இருந்தாலும்
உறும்கல்வி உரைத்திடுவார்
உற்றுணரும் நாயகமே!

சொற்சுத்தம், செயல்சுத்தம்
சொந்தஉடல் அதுசுத்தம்
பற்சுத்தம் என்றுரைத்த
பலசுத்தம் பரிசுத்தம்!

தீமைக்குத் தீமையினால்
தீர்வில்லை; நன்மையையே
சேமிப்பார்;அருள்செய்வார்
சிறந்தென்றும் விளங்கிடுவார்!

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(4)



தவறான நம்பிக்கை
தந்தறியாத் தலைவரிவர்
கவர்வதுபோல் கவர்ந்திடவே
காசினியில் யாருமுண்டோ (காசினி- உலகம்)

தாம்ஆற்றும் பணியெதிலும்
தடுமாற்றம் ஏதுமிலார்
ஏமாற்றும் வேலைஇலார்;
இவரன்றோ தனித்தலைவர்!

Saturday, December 26, 2015

யார் அந்த ஆரோக்கியதாஸ்?

ஆளூர் ஷாநவாஸ்:

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மோகன் சித்ரா தம்பதியர், தமது குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் வைத்தார்களல்லவா! அந்த யூனுஸும் நானும் இன்று திருவொற்றியூரிலுள்ள ஆரோக்கிய தாஸ் வீட்டுக்கு சென்றோம்.

யார் அந்த ஆரோக்கியதாஸ்?


திமுகவின் நகரத் துணைச் செயலாளர். இருமுறை கவுன்சிலராக இருந்தவர். மக்கள் சேவகர். விஷ பூச்சி கடித்து பலியான இம்ரானின் அண்டை வீட்டுக்காரர். இம்ரானை மருத்துவமனையில் சேர்த்தது முதல் இம்ரான் மரணத்தை வெகுமக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தது வரை அனைத்தையும் உடனிருந்து செய்தவர். அத்துடன் நிற்கவில்லை அவர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவழைத்து இம்ரானின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னதோடு, தனது மகளின் நகையை அடகுவைத்து 50,000 ரூபாய் நிதியும் வழங்கினார். கடந்த 17-ஆம் தேதி தலைவர் திருமாவளவன் அவர்கள் இம்ரான் இல்லத்துக்குச் சென்றபோது முழுவதும் உடனிருந்தார், ஆரோக்கியதாஸ். அத்தகைய பொது நலத் தொண்டர், அன்று மாலையில் தனது வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து அகால மரணம் அடைந்தார்.

Wednesday, December 23, 2015

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(3)



மன்னித்தே தண்டிப்பார்!
மனங்களையே வென்றெடுப்பார்!
உன்னிப்பாய் உணர்பவர்கள்
உவந்து வந்து தோற்பாரே!

குற்றங்கள் கூறாதார்
குறைகூறிப் பேசாதார்
மற்றெவரே ஆனாலும்
மதிக்கின்ற மாண்பாளர்!

Tuesday, December 22, 2015

வயோதிக வலிகள்!

வலிகளோடு வாழப் பழகுவதே

வயோதிகத்தை

வரவேற்கும் வித்தை!

வலிகளில் - சில

மூட்டில் வருபவை - பிற

வீட்டில் தருபவை!



நிவாரணங்களைப் பற்றிய

உதாரணங்களின் பட்டியலில்

வயோதிகத்தின் வலிகளுக்கு

நிவர்த்தி பற்றிய குறிப்பில்லை!

 

Saturday, December 19, 2015

நெய்யாக உருகாதோ நெஞ்சம்.....(2)




பொறுமைக்கோர் இலக்கணமாய்
புகழுக்கும் இலக்கியமாய்
வறுமையிலும் செம்மையுடன்
வழிகாட்டும் வாழ்வழகு!

புன்சிரிப்போ முழுநிலவு
பூப்போன்ற மென்மைமுகம்
கண்பார்வை அருள்வெள்ளம்
காண்பவர்கள் தமைவெல்லும்!

முத்தொளிரும் பல்தெரிய
முறுவலுடன் அவர்திருவாய்
சத்தியத்தைப் பேசிடுமே
சாந்தஒளி வீசிடுமே!

அடியெடுக்கும் நடைநேர்த்தி!
அணிந்திருக்கும் உடைநேர்த்தி!
வடிதேனாம் அவர்மொழிகள்
வையகத்தில் தனிநேர்த்தி!

நெய்யாக உருகாதோ நெஞ்சம்...






சிந்தனையில் தேன்சுரக்க
செந்தமிழின் மேலினிக்க
வந்தருளும் நாயகமே,
வழிபார்க்கும் வையகமே!

முன்யாரும் கண்டதுண்டா
முஹம்மதரைப் போன்றவரை...
பின்னேனும் அவர்போலாம்
பேறுடையார் எவருமுண்டா?

ஓரழகு, சீரழகு!
ஒப்பில்லாப் பேரழகு!
யாரழகு முஹம்மதினும்
யாதான போதிலுமே?

Tuesday, December 15, 2015

இறைத்தூதர் காட்டித் தந்த வழியில் நாம்..

சென்னை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.
அந்த பாதிப்புகளை அகற்றுவதற்கு
முஸ்லிம்கள் பட்ட பாடுகளும்
கொஞ்ச நஞ்சமல்ல.

* ஜாதி மத பேதம் பாராமல் ...
* தாங்கள் தங்குவதற்கு வாடகைக்கு வீடு கூட தராத மக்களுக்கு ...
* தங்களை பயங்கரவாதிகளாய் எண்ணி ஒதுங்கிய மக்களுக்கு ...
அவர்களையும் தங்களின்
சொந்தங்களாய் எண்ணி
அவர்களின் வீடுகளையும் கோயில்களையும் சுற்றி குவிந்து கிடந்த கழிவுகளை எந்த அருவருப்புமின்றி
முஸ்லிம்கள் அப்புறப்படுத்தினார்கள் என்பதை நாமறிவோம்....

இது விளம்பரத்திற்காகவோ
ஆதாயத்திற்காகவோ செய்த சேவை அல்ல.
இதெல்லாம் முஸ்லிம்களின் ரத்தத்தில் ஊறியது.

Monday, December 14, 2015

திருவொற்றியூர் தியாகராயபுரத்து தியாகக் கொழுந்தே!


திருவொற்றியூர்
தியாகராயபுரத்து
தியாகக் கொழுந்தே!

உயிர் காக்கும் பணியில்
உயிர் நீத்த சகோதரனே!

உனது உயிர்த் தியாகம்
உயர்வான தியாகம் !

உள்ளத்தை உலுக்கிவிட்ட
உருக்கமான சோகம்!

ஆயுதம் தாங்கி புரிவதல்ல ஜிஹாத்
மானுடம் காக்க மரணிப்பதே ஜிஹாத்

Sunday, December 13, 2015

அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க நாட்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் 'டொனால்டு டிரம்ப்' ....


அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க நாட்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் 'டொனால்டு டிரம்ப்' அமெரிக்காவின் அதிபராகும் தகுதியை இழந்துவிட்டதாக அதிபர் மாளிகை அறிவிப்பு..!!

http://edition.cnn.com/…/donald-trump-josh-earnest-disqual…/

'டொனால்டு டிரம்ப்' கூறிய கருத்து அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது

மிகவும் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்கள் பற்றி அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஒரு வேட்பாளர் இப்படி பேசியிருப்பதை முஸ்லிம்கள் அல்லாத பெரும்பான்மை மக்கள் அமெரிக்கா அரசாங்கம் , அமெரிக்க மக்கள் (அதிபர் பதவிப் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், ஜெப் புஷ், கிறிஸ் கிறிஸ்டி, பெர்னீ சாண்டர்ஸ் ஆகியோ உள்பட) பல வெளிநாட்டு அரச்சங்கங்களும் மக்களும் சரமாரியாக கண்டித்திருக்கிறார்கள்.. இவரை இங்கிலாந்துக்கு வருவதை தடைசெய்யவேண்டும் என இங்கிலாந்து மக்கள் இதுவரை 5,51,449பேர்கள் Petition அளித்துள்ளார்கள்...

https://petition.parliament.uk/petitions/114003

Saturday, December 12, 2015

மாமியாரைப் பார்த்து கண்கலங்கி நின்றாள் மருமகள் !

பாசத்தின் வலி ...
ஆமினா உம்மாவின் ஒரே மகன் அஹமது... வயது நாற்பது. மகனின் மீது உம்மாவுக்கு அளவுகடந்த பாசம்...பிள்ளையின் சிறு சங்கடங்களையும் தாங்க முடியாத மனசு ஆமினா உம்மாவுக்கு. கணவர் இறந்த பிறகு மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்து பாசமும் பண்பும் உள்ள பிள்ளையாக வளர்த்தாள் . மகனுக்கு திருமணமும் செய்து வைத்தாள்...தனக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி பாசம் காட்டுவாளோ அப்படி ஒரு பாசத்தை மருமகள் மீதும் காட்டினாள். மகன் அஹமதுவுக்கு அரபு நாட்டில் வேலை. வருடத்துக்கு ஒரு முறை ஊருக்கு வந்து ஒரு மாதம் நிற்பான். திருமணமாகி ஏழு வருடங்களுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்தது. அப்துல்லாஹ் என்று பெயர் வைத்தார்கள். வாப்பாவின் மீது குழந்தைக்கு மிகுந்த பாசம். வாப்பா வந்ததிலிருந்து அரேபியா போகும் வரை வாப்பாவை விட்டுப் பிரிய மாட்டான். எப்போதும் கையில் தூக்கி வைத்து அவனை கொஞ்ச வேண்டும்.. அஹமதும் பிள்ளைக்கு முத்தமழை பொழிந்து குழந்தையுடனேயே இருப்பான்.

Friday, December 11, 2015

மனைவியின் சுயமரியாதையைப் பாதுகாத்தல் கணவனின் கடமை

-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)-
அன்பால் பிணைந்த உள்ளங்களில் சில போது சிக்கல்களும் பிரச்சினைகளும் எழுவதுண்டு. இருவருக்கிடையில் முரண்பாடுகள் தோன்றும் போது அறிய வேண்டிய பல பண்புகள் தோற்றம் பெறும். அறியாத சில விடயங்களும் வெளிச்சத்திற்கு வரும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இந்த நிலை துணை செய்யும். எந்த நேரத்தில் எப்படிப் பேச வேண்டும், எப்படி அணுக வேண்டும், எப்படி சமாளிக்க வேண்டும் என்ற அனுபவம் கிடைத்து விடும்.

இந்த அனுபவங்கள் கணவன் மனைவிக்கிடையில் சிறந்த உறவை கட்டியெழுப்பும். எனவே பிரச்சினைகள் வரக் கூடாது என்று எதிர்பார்ப்பதை விட வந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தான் முக்கியம்.

தன் வீட்டில் இருந்தாலும் பிற வீட்டில் இருந்தாலும் ஒருவர் மற்றவருடன் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள பிரச்சினைகள் வழிகாட்டியாக இருக்கும். ஆனால், வாழ்க்கையையே பிரச்சினையாக்கி விடக்கூடாது.

Thursday, December 10, 2015

கையுறை அணிந்து கழிவகற்றும் சகோதரனே!

கையுறை அணிந்து
கழிவகற்றும் சகோதரனே! – உன்
நன்மாராயப் பலகையில்
மெய்யுரை எழுதுகிறாய் நீ!

செத்த பிராணிகள்
சீரழிந்த குப்பைகள்
சாக்கடை சகதி
துர்நாற்ற வீச்சம்
இவை யாவும் – உன்
ஆவேச வீரியத்தின் முன்
வெறும் துச்சம்

Sunday, December 6, 2015

மெய் சிலிர்க்கிறது

மெய் சிலிர்க்கிறது
உள்ளம் உருகி ஓடுகிறது

கருணை கண்டு
கருணை பொங்கி
கண்கள் கழன்று விழுகின்றன

எங்கும் நிறைந்து தமிழன்
சாதி மதம் பாராமல்
தன் உறவுகளுக்கு
உதவித்தள்ளுகிறான்
விடாப்பிடியாய்

மழை வெள்ளக் கேடுகளை
தூக்கிப் போட்டு மிதித்து
வெல்கிறான்

மிகப் பெரிய
நம்பிக்கையையல்லவா
இந்த மழை
நமக்குக் கொடுத்துவிட்டது

சென்னையில்
ஒட்டியும் ஒட்டாமல் வாழும்
ஒய்யார மக்களையும்
இப்படி
ஒட்ட வைக்கும் பசையையா
நீ பொழிந்தாய் மழையே
நீ வாழி

அன்புடன் புகாரி  

Anbudan Buhari

* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *
http://anbudanbuhari.blogspot.in/
-------------------------------------------------------------

Saturday, December 5, 2015

Friday, December 4, 2015

மிதக்கிறது எங்கள் நகரம்..!


மிதக்கிறது எங்கள் நகரம்..!
தவிக்கிறது எங்கள் உள்ளம்.!

புசிக்கவோ- பருகவோ ஏதாகிலும் கிடைக்குமா
என்கிற நப்பாசையில் எம் நாவுகள்..!!

எதுகை மோனைகளை ரசிக்கும்
நிலையிலில்லை நாங்கள்..!

மழையைத்தா - ஆண்டவனே.!
என்பதாய் - ஏங்கும் ஊரார் எவர்க்கேனும்
எங்கள் மழையை, தாராளமாய் தானம் செய்ய
இதோ நாங்கள் தயார்.!

மனிதனை மனித நேயத்தால் அரவணைப்போம்!

by Yasar Arafat
 
கடந்த நாட்களாக முகனூல் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதையும், உதவி தேடுவதையும் அதிகமதிகமா பார்த்துக்கொண்டு வருகிறேன்.

நிவாரண உதவிக்கு நாமும் அங்கு இருக்கமுடியவில்லையே எனும் கவலையும், பாதிக்கப்பட்ட மக்களின் புகைப்படமும், அதற்காக சுழன்று சுழன்று உதவி செய்யும் இஸ்லாமிய இயக்கங்கள், தன்னார்வத் தொண்டுகள், தனி நபர் முயற்சி, முகனூல் நண்பர்கள், ட்விட்டர் நண்பர்கள்,பண உதவி செய்த நன் மக்கள் எனும் ஏகப்பட்ட செய்திகளில் நெகிழ்ச்சியில் கண்னீரை கசியவிட்டுத்தான் இருக்கிறேன்.

பாராட்டுவதற்கு இதுவா நேரம்? நிச்சயம் இதுதான் உகந்த தருணம்... அரசியல் சூழ்ச்சியாலும், மத துவேஷங்களாலும் கசப்புகளை கக்கிக்கொண்டிருந்த தருணத்தில் இப்படிப்பட்டதான உதவிகளால் மக்களின் மனதிலுள்ள கசடுகள் நீங்கும் அளவிற்கு ஒர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.

சாதி மத வேற்பாடுகளில்லாமல் மனிதனையும் மனித நேயத்தை மட்டுமே காணக்கிடைத்த ஒர் சம்பவம். நிச்சயம் மயிர்கால்கள் எழுந்து நிற்கும் ஒர் உன்னத உணர்வு எனக்குள்;

LinkWithin

Related Posts with Thumbnails