Saturday, January 16, 2016

சமூக சேவை இறை நம்பிக்கையின் ஓர் அம்சம்

சமூக சேவை இறை நம்பிக்கையின் ஓர் அம்சம்

    ஹாபிழ் அ. செய்யது அலி மஸ்லஹி, பாஜில்  

இறைவனை வணங்கி வாழ்வதுதான் இறை நம்பிக்கையின் அடையாளம் என்று மட்டும் நினைத்திட வேண்டாம். மக்களுக்கு சேவை செய்வதும் இறை நம்பிக்கையின் ஒரு அடையாளமாக அங்கீகரிக்கப்படுகிறது.

மக்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையாக கருதப்படுகிறது. இறைவனுக்காக செய்யப்படும் தொண்டு மக்கள் தொண்டாக கருதமுடியாது.

இறைப்பணி, மக்கள் பணி ஆகிய இரண்டு பணிகளிலும் ஒருவர் ஈடுபடுவது ஈமானின் பணியாக உள்ளது.

“இறை நம்பிக்கைக்கு எழுபதுக்கும் அதிகமான கிளைகள் உண்டு. அவற்றில் சர்வசாதாரணமானது “நோவினை தரும் பொருட்களை நடைபாதையிலிருந்து அகற்றுவது;’ அவற்றில் உயர்வானது ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்று கூறுவது’’ (அறிவிப்பாளர்: அபூஹ§ரைரா ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி : 2614)



இறை நம்பிக்கையின் உயர்வான நிலைக்கு உந்து சக்தியாக இருப்பது ‘பொது சேவை’ தான் என்பதை மேற்கூறப்பட்ட நபி மொழியிலிருந்து நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

இறைவனை அடைவதற்கு கூட பொது சேவை அவசியம் என்பதால், முஸ்லிம்கள் பொது சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். இறைவனுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளில் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவைகளுக்கும் கொடுக்க வேண்டும்.


இந்த ஒரு நிகழ்வு நமக்கு உற்சாகம் ஊட்டுகிறது.

“ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டால். அப்பணிவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இத்தகைய மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான்; அவருக்க மன்னிப்பும் அளிக்கிறான்” (நூல்: புகாரி : 652)

தொழுது, இறைவனுக்கு நன்றி செலுத்தவரும் ஒருவர், மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் பொருட்களை அவர் அகற்றும் பொதுப் பணி இறைவனையே கவர்ந்துவிட்டது. இறைவனே அவருக்கு நன்றிகடன் பட்டது பொதுச் சேவையின் மகத்துவத்தை பறைசாற்றுகிறது. பொதுச்சேவையால் இறைப்பணியை கூட பிற்படுத்துவது தவறில்லை. இறை சேவைக்காக பொதுச் சேவையை பிற்படுத்தக்கூடாது. இடிபாடுகளிலும், வெடிவிபத்துகளிலும், சிக்குண்டு உயிருக்கு போராடும் நபர்களை முதலுதவியாக அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு மருத்துவ சேவைகளை செய்திட வேண்டும்.

இவ்வாறு செயல்படும் போதுதான் உண்மையான ஈமானின் பிரகாசம் நம்மிடம் பளிச்சிடும். உள்ளம் என்பது ஏகத்துவத்தின் களம். பள்ளிவாசல் என்பது நமது தொழும் களம். மக்கா என்பது நமது ஹஜ் களம். இதையெல்லாம் தாண்டி ஊரிலிருந்து உலகம் வரை, வீட்டிலிருந்து வீதிவரை பொது களம்.

பொது களத்தில் ஆற்றவேண்டிய பொது சேவைகள் ஏராளமாகவும், தாராளமாகவும் உள்ளன. தாய்மை இந்தியாவிலிருந்து, தூய்மை இந்தியா வரைக்கும் பொதுச் சேவையில் ஈடுபடுவது முஸ்லிம்களின் பொறுப்பாகவும், ஈமானின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

தண்ணீர் பந்தல் தொட்டு, கிணறு வெட்டிதாகித்தவர்களின் தாகத்தை தீர்ப்பதும் புனித சேவையாக உள்ளது. புனித சேவையில் இனிதாக நாம் ஈடுபடவேண்டும். “ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “யாரேனும் அத்தோட்டக் கிணற்றை வாங்கி, இறைவழியில் வக்ப் செய்தால், சொர்க்கத்தில் அவருக்கு ஒரு கிணறு கிடைக்கும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உடனே உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம்மிடமுள்ள பணத்தையாவும் கொட்டி, வாங்கி மக்களுக்கு அதை அர்ப்பணித்தார்கள். மக்களுக்காக மக்களில் ஒருவனாக, மக்களின் நலனுக்காக, மக்களின் துயர் நீங்கிட, மக்களுக்காக உழைத்திட, அவர்களுக்காக பாடுபட, வாழ்பவனே சமூக சேவகன். இதுவே சமூக சேவை.

முஸ்லிம் முரசு, அக்டோபர் 2015

source: http://jahangeer.in/October_2015.pdf
http://nidur.info

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails