பாத்திமா மைந்தன
இறைவனின் திருப்பெயர்கள்
அல்லாஹ் என்பது 'அல் இலாஹ்' என்பதாகும். 'இலாஹ்' என்ற பொதுப்பெயருடன் 'அல்' என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே 'அல்லாஹ்' என்பதாகும்.
அதாவது, 'வணக்கத்திற்குரிய தகுதியான ஒரே இறைவன்' என்பது அதன் பொருள்.
'அல்லாஹ்' என்ற சொல் ஆண், பெண் போன்ற எந்த பாலினத்தையும் குறிக்காது.
பாரசீக மொழியில் 'குதா', இந்தியில் 'தேவ்தா', ஆங்கிலத்தில் 'காட்', தமிழில் 'இறைவன்', 'கடவுள்' என்னும் சொற்களின் பொருளும் பெருமளவு இதற்குப் பொருத்தமாக இருப்பதைப் பார்க்கலாம்.
'அல்லாஹ்' என்ற சொல்லின் மாபெரும் சிறப்பு, அச்சொல்லில் இருந்து இடது பக்கமாக ஒவ்வொரு எழுத்தாக நீக்கினால் எஞ்சி இருக்கும் சொல், அல்லாஹ் என்ற அர்த்தத்தையே தரும்.
அல்லாஹ் - அல்லாஹ்
லில்லாஹ் - அல்லாஹ்
லஹு - அல்லாஹ்
ஹு - அவன் (அல்லாஹ்)
வேறு எந்த மொழியிலும் 'இறைவன்' என்ற சொல்லுக்கு இந்தச் சிறப்பு இல்லை.
இறை வேதமாகிய திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னைப் பற்றி அறிமுகம் செய்யும்போது, தனது அழகிய பண்புகளை வெளிப்படுத்துகின்றான்.
அவை அல்லாஹ்வின் திருநாமங்கள் ('அஸ்மாஹுல் ஹுஸ்னா') எனப்படும்.
'அல்லாஹ் அழகிய பெயர்களுக்கு உரித்தானவன்; எனவே, அந்த அழகிய பெயர்களைக் கொண்டே அவனை அழையுங்கள்' (7:180) என்கிறது திருமறை.
உதாரணமாக...
'அர் ரஹ்மான்' - அளவற்ற அருளாளன்
'அர் ரஹீம்' - நிகரற்ற அன்புடையோன்
'அர் ரகீப்' - கண்காணிப்பவன்
'அல் மலிக்' - அரசன்
'அல் காலிக்' - படைப்பாளன்
'அஸ்ஸலாம்' - சாந்தி அளிப்பவன்
'அல் அஸீஸ்' - யாவரையும் மிகைத்தவன்
'அல் கப்பார்' - மன்னிப்பவன்
'அல் வாஹித்' - தனித்தவன்
'அல் வதூத்' - நேசிப்பவன்
'அல் ரஸ்ஸாக்' - உணவளிப்பவன்
இறைவனின் திருநாமங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது, 'அர் ரஹ்மான்', 'அர் ரஹீம்'.
முஸ்லிம்கள் எந்தச் செயலைத் தொடங்கினாலும், 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்' என்று சொல்ல வேண்டும். இதற்கு, 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருநாமத்தால் தொடங்குகிறேன்' என்று அர்த்தம்.
திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயமும் இந்தச் சொல்லைக் கொண்டே தொடங்குகின்றன. குர்ஆனின் முதல் வசனமும் இதுதான்.
அல்லாஹ்வைப் பற்றி பல்வேறு விஷயங்களைக் குர்ஆன் தன்னகத்தே கொண்டிருந்தாலும், அனைத்தையும் உள்ளடக்கி புரிந்துணர திருக்குர்ஆனின் 122-வது அத்தியாயம் (இக்லாஸ்-ஏகத்துவம்) போதுமானது.
'(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்; அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை. (எவராலும்) பெறப்படவும் இல்லை'.
மேற்காணும் வசனங்கள் இறைவனுக்குரிய தனித்துவத்தின் பெருமையைச் சுருக்கமாகவும், 'சுருக்'கென்று மனதில் பதியும் வகையிலும் எடுத்தியம்புகின்றன.
இறைவனுக்கு எதிராகச் செய்யப்படும் பாவங்கள் ஒன்றைத் தவிர ஏனைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். அந்தப் பாவங்களைச் செய்தவர் உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்புக்காக மன்றாட வேண்டும்.
ஆனால் இறைவனுக்கு இணை வைத்தல் என்ற பாவத்தை மட்டும் இறைவன் மன்னிக்கவே மாட்டான்.
'நிச்சயமாக அல்லாஹ் (இறைவன்) தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்' (4:48) என்று திருமறை தெளிவாகவும், உறுதியாகவும் தெரிவிக்கிறது.
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>
No comments:
Post a Comment