Thursday, January 28, 2016

ஜுமுஆ தினத்தில்... சில சந்தேகங்கள்!


ஜுமுஆ தினத்தில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் சொல்லப்படும் அதானுக்கு பதில் கூறி துஆ செய்யாமல் 2 ரகாஅத் தொழக்கூடாதா?

ஜுமுஆ தினத்தில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் சொல்லப்படும் அதானுக்கு பதில் கூறி துஆ செய்யாமல் 2 ரக்அத் தொழுவதற்கு தடை ஏதும் இல்லை.

அதேபோல அதானுக்கு பதில் கூறி விட்டு துஆவும் செய்து விட்டு 2 ரக்அத் தொழுவதற்கும் தடை ஏதும் இல்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இரண்டிற்குமே தடை விதிக்காததால், தொழக் கூடாது என்று தடை விதிக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது. தடை ஏதும் இல்லை என்றாலும் மேற்கண்ட இரண்டில் சிறந்தது எது என்பதை கவனிப்போம்.

பள்ளியில் நுழைந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?


“”நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக் கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

நேரத்தின் தேவை (Hour of Need) :

ஃபர்ள் தொழுகைகளை தொழவும் சுன்னத் தொழுகைகளை தொழவும் “”நேரத்தின் தேவை” தேவைப்படுகிறது. அவற்றை நாம் ஹதீஃத்களிலிருந்து அறிந்து வைத்துள்ளோம். அது போன்றே, பள்ளியில் நுழைந்த உடன் பள்ளி காணிக்கை 2 ரகா அத் தொழுகையை நிறை வேற்ற வேண்டிய நேரம் எது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹதீஃத் தெளிவுபடுத்துகிறது.

ஜுமுஆ தினத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குத்பா நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, ஷிலைக் அல் கத்பானி (ரழி) என்பவர் பள்ளிக்கு வந்து உட்கார்ந்து கொண்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஷிலைக் எழுந்து 2 ரகாஅத்துகள் சுருக்கமாகத் தொழுவீராக! இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, யாரேனும் வந்தால் அவர் சுருக்கமாக 2 ரகாஅத்துகள் தொழ வேண்டும் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

பள்ளியில் நுழைந்தவர் அத்தருணத்தில் (Hour of Need) இமாமின் பிரசங்கத்தை செவி மடுப்பதற்கு முன்பாகக் காணிக்கை 2 ரகாஅத் தொழ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட பின், அதானுக்கு பதில் கூறிவிட்டு துஆ செய்த பிறகுதான் தொழவேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நடந்த சம்பவம் ஒன்றை கவனியுங்கள்:

கடந்த 9.10.15 அன்று தவ்ஹீத் பள்ளிவாசல் ஒன்றில் ஜுமுஆ தொழுதேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்ற 33:21 இறைவசனத்தைக் கூறி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த அன்றாட நிகழ்வுகளில் ஓத வேண்டிய சில துஆக்கள் பற்றி மிக அழகிய முறையில் ஆதாரங்களுடன் நண்பர் ஒருவர் விளக்கினார்.

பிரசங்கத்தின் இடையே, ஜமாஅத்தில் அமர்ந்து இருந்த ஒரு சகோதரரை சுட்டிக் காண்பித்து அதான் சொல்லும்பொழுது அதானுக்கு பதில் கூறி துஆ கேட்காமல் அந்த சகோதரர் தொழ ஆரம்பித்து விட்டார். அப்படி செய்யக் கூடாது என்று கூறினார்.

அதான் சொல்லும்போது வந்த நானும், பிரசங்கி சுட்டிக் காட்டிய நபரைப் போன்று, அதானுக்கு பதில் கூறாது துஆவும் செய்யாமல் 2 ரகாஅத் தொழுது விட்டுத்தான் அமர்ந்தேன். அப்படி தொழக்கூடாது என்று பிரசங்கி கூறியவுடன், அதற்குத் தடையேதும் இல்லையே என்று உட்கார்ந் திருந்த நான் கூறினேன். துஆ செய்ய வேண்டும் அல்லவா? என்று வினா எழுப்பினார்.

அதாவது அதானுக்கு பதில் கூறி துஆ கேட்கும் ஒரு சுன்னத்தை; அந்த நண்பர் ஃபர்ளைப் போன்று கட்டாயம் என நினைத்திருப்பார் போலும். அப்படியானால், அது அவரின் முதல் தவறு; அதானுடைய துஆவைக் கேட்காமல் 2 ரகாஅத் தொழுகையை தொழக்கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்யாத ஒன்றை அவர் தடை செய்தது அவரின் இரண்டாவது தவறு.

ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு தருணம் (நேரம்) (Hour of Need) உண்டு. அந்த தருணம் வந்து விட்டால் அந்த செயலைச் செய்ய வேண்டும் அல்லவா? ஆகவே, பள்ளியில் நுழைந்தவுடன் தொழுவது சரியானதே.

எதை செய்யக் கூடாது என்று அந்த நண்பர் கூறினாரோ அதை அவரே, அவரையும் அறியாமல் தருணத்திற்கேற்ப (Hour of Need) அன்றே செயல்படுத்திக் காண்பித்து விட்டார். ஜுமுஆவின் ஃபர்ளை முடித்தவுடன் தஸ்பீஹ் ஓதவில்லை. ஃபர்ள் தொழுகைக்குப்பின் கேட்கும் துஆ அல்லாஹ்வால் கபூல் செய்ய தகுதி வாய்ந்தது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய பின்னும், அந்த துஆவையும் கேட்கவில்லை. மாறாக, “ரோஷன் மஹாலில் 11.10.15 அன்று மாநில மாநாடு அறிமுகக் கூட்டம் நடைபெறும். சிறப்பு அழைப்பாளர் வருகை தர உள்ளார் என்பதை விளம்பரப்படுத்தினார்.

ஃபர்ள் தொழுதவுடன் ஒரு சாரார் எழுந்து சென்று விடுவார்கள். எனவே நண்பர் செய்ததை நான் தவறு என்று கூற முன்வரவில்லை. மாறாக நேரத்திற்கேற்ப (சூழ்நிலைக்கேற்ப) அவர் செயல்பட்டது சரியே.

அந்த நண்பருக்கான நேரத்தின் தேவை. Hour of Need) இதுதான். எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை விதிக்காத ஒன்றை நமக்கு நாமே தடை விதித்துக் கொள்ளக் கூடாது என்பதை அறிவோமாக!

ஜுமுஆ தினத்தன்று பள்ளியில் நுழைந்தவுடன், இமாம் குத்பா நிகழ்த்திக் கொண்டிருந்தாலும் காணிக்கை தொழுகை தொழுது விட்டே அமர வேண்டும்.

இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது :

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரகாஅத்களையும் லுஹருக்குப் பின் இரண்டு ரகாஅத்துகளையும் ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரகாஅத்துகளையும் மஃரிபுக்குப் பின் இரண்டு ரகாஅத்துகளையும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் தொழுதிருக்கிறேன். (புகாரி: 1165)

அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரகாஅத்கள் தொழுபவர்களாகவும், மஃரிபுக்குப் பிறகு தமது வீட்டில் இரண்டு ரகாஅத்துகள் தொழு பவர்களாகவும் இஷாவுக்குப் பிறகு இரண்டு ரகா அத்துகள் தொழுபவராகவும் இருந்தனர். ஜுமுஆ வுக்குப் பின் (வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று) இரண்டு ரகாஅத்துகள் தொழுபவர்களாகவும் இருந்தனர்.(புகாரி : 937)

பள்ளி காணிக்கைத் தொழுகை தொழாமல் அமரக்கூடாது :

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்ததும் இரண்டு ரகாஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம்." இதை அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (புகாரி : 1163)

ஜாபிர் பின்அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது :

உங்களில் ஒருவர் இமாம் உரை நிகழ்த்தும் போது வந்தால் இரண்டு ரகாஅத்துகள் தொழட்டும் என்று தமது சொற்பொழிவின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (புகாரி : 1166)

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இன்ன மனிதரே, தொழுது விட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை’ என்றார். “எழுந்து தொழுவீராக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 1584)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் தொழுதுவிட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை என்றார். எழுந்து இரண்டு ரகாஅத்கள் தொழுவீராக என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 1585)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளிக்கிழமை சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது (நின்று) உரையாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் அந்த மனிதரிடம் இரண்டு ரகாஅத்கள் தொழுது விட்டீரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என் றார். அவ்வாறாயின் தொழுவீராக என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 1586)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரையாற்றினார்கள். அதில் வெள்ளிக்கிழமை அன்று இமாம் புறப்பட்டு வந்திருக்க, உங்களில் ஒருவர் (பள்ளிவாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும் என்று குறிப்பிட்டார்கள். (முஸ்லிம் : 1587)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது உட்கார்ந்து கொண்டிருந்தபோது, சுலைக் அல்ஃகதஃபானீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து தொழுவதற்கு முன் அமர்ந்துவிட்டார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இரண்டு ரகாஅத்கள் தொழுதுவிட்டீரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். எழுந்து அந்த இரண்டு ரகாஅத் களைத் தொழுவீராக என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 1588)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளிக் கிழமை உரையாற்றிக் கொண்டிருக்கையில் சுலைக் அல்ஃகதஃபானீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து(தொழாமல்) அமர்ந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுலைக் எழும் சுருக்கமாக இரண்டு ரகா அத்கள் தொழும் என்றார்கள். பிறகு உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது (பள்ளிவாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரகாஅத்கள் சுருக்கமாகத் தொழுதுகொள்ளட்டும் என்று கூறினார்கள். (முஸ்லிம்: 1589)
source:  http://annajaath.com/archives/7468
http://www.nidur.info

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails