ஒன்றுமில்லை ....
ஏகனவன் உண்டு ....!
ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
ஒருபாடு பாடுபட்டு ஓடாய் தேய் கிறோம்
முடிவில் மிஞ்சுவது ஒன்றுமே இல்லை
ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
விறுதாய் கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டுகிறோம்
முடிவில் கூட்டு நிற்க யாருமே இல்லை
ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
பயந்து படபடத்து ஓடி ஒழிக்கிறோம்
முடிவில் நிமிர்ந்து நின்று
ஒரு நோக்கு நோக்கியால்
அதனையும் வெறும் பீதி என்று உணர்கிறோம்
ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
சந்தேகப் பார்வையில்
சகலமும் கண்டு கொண்டு சலனப் படுகிறோம்
முடிவில் சந்தோசம் துறக்கிறோம்
ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
யாரை எல்லாமோ துணைக்கு அழைக்கிறோம்
தனிமையை வெறுக்கிறோம்
முடிவில் தனித்தே போகிறோம்
ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
காரணம் கற்பிக்க
காலமெல்லாம் காரணிகள் தேடுகிறோம்
முடிவில் காரியத்தின் காரண கர்த்தாவாகி நிற்கிறோம்
ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
குறை கூறி
அடுத்தவர் குற்றம் காண அலைகிறோம்
முடிவில் நிம்மதி இழந்து தவிக்கிறோம்
ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
கண்ணும் மூக்கும் வைத்து
கண்டபடி இட்டுக் கட்டுகிறோம்
முடிவில் உண்மை வெளிச்சத்திற்கு வர
கூனிக் குறுகுகிறோம்
ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
கற்பனைகள் செய்து
மனத்தைக் குழப்புகிறோம்
முடிவில் நிதர்சனம் நிலைத்து நிற்க
தன்னிலை உணர்கிறோம்
ஒன்றும் இல்லாததற்கு எல்லாம்
எதுவும் எண்ணாமல்
எப்போதும் ஏகன் இறையோனை எண்ணுவோம்
முடிவில் அவனிடமே செல்லுவோம்
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment