Thursday, January 28, 2016

நோய் விசாரணை

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்-


இஸ்லாத்தைப் பொருத்தவரை அதிகமான நல்ல விடயங்களை மக்களுக்கு வழிக்காட்டி உள்ளன. அவைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உற்ச்சாகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஒரு மனிதன் நோயாளியாக மாறிவிட்டால் அவனை நோய் விசாரணை செய்ய வேண்டும். அதன் மூலம் நோயாளிக்கு மன ஆறுதலாகவும், நோய் விசாரித்தவருக்கு நன்மையாகவும் அமைந்து விடுகிறது.

நோயும் மனிதனும்
இறைவன் ஒரு மனிதனுக்கு நோயை கொடுக்கிறான் என்றால் ஒன்று அவனது பாவங்கள் மன்னிக்கப் படுவற்காக இருக்கும். இல்லாவிட்டால், அவனை தண்டிப்பதற்காக இருக்கும். நோய் என்பது ஒரு சோதனையாகும். இந்த உலகில் படைக்கப்பட்ட எந்த மனிதரும் சோதிக்கப்படாமல் மரணிப்பது கிடையாது. அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளை கொடுக்கிறான்.


சிலருக்கு செல்வத்தை கொடுத்து சோதிக்கிறான். சிலருக்கு செல்வத்தைக் கொடுக்காமல் சோதிக்கிறான். சிலருக்கு பிள்ளைகளை கொடுத்து சோதிக்கிறான். சிலருக்கு பிள்ளைகளை கொடுக்காமல் சோதிக்கிறான். சிலருக்கு விவசாயத்தை கொடுத்து சோதிக்கிறான். சிலருக்கு விவசாயத்தை கொடுக்காமல் சோதிக்கிறான். சிலருக்கு நோயை கொடுத்து சோதிக்கிறான், சிலருக்கு நோயை கொடுக்காமல் சோதிக்கிறான். எனவே நோய் என்பது ஒரு சோதனையாகும். இந்த நோய் என்ற சோதனையின் போது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மார்க்கம் நமக்கு அழகாக சொல்லித் தருகிறது.

நோயும் பொறுமையும்
ஒரு மனிதனுக்கு நோய் வந்து விட்டால் வலியின் காரணமாக தாங்க முடியாமல் துடிக்கிறான். சில நேரங்களில் அந்த நோயை ஏச ஆரம்பித்து விடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸாயிம் என்ற பெண்மணியை நோய் விசாரிக்க சென்ற சமயம் அந்த பெண் தனக்கு வந்த காய்ச்சலை தாங்க முடியாமல் காய்ச்சலை ஏச ஆரம்பிக்கிறாள். அப்போது காய்ச்சலை ஏசாதீர்கள், அதன் மூலம் உங்கள் பாவங்களை அல்லாஹ் அழிக்கிறான் என்று கூறினார்கள்.

அதே போல மைய்யத்திற்காக ஒப்பாரி வைத்து அழுபவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும் வழிப்பு நோயுள்ள பெண்ணிடம் அதில் நீ பொறுமையாக இருந்தால் அல்லாஹ் அந்த நோயிக்கு பகரமாக சுவனத்தை தருவதாக நபி (ஸல்) அவரகள் கூறினார்கள். காலில் ஒரு முள் குத்தினாலும், உடம்பில் ஒரு நரம்பு துடித்தாலும், மனிதனின் உள்ளத்தில் கவலை ஏற்ப்பட்டாலும் அதற்கு பகரமாக அல்லாஹ் அடியானின் பாவங்களை மன்னிக்கிறான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதே நேரம் தனக்கு கொடுக்கப் பட்ட நோயை ஏசினால் அதன் மூலமாக பாவங்களை அதிகமாக்கி கொள்கிறான்.

நோயாளியும், மனிதனும்
ஒரு மனிதன் நோயாளியாக இருந்தால் அவனை அடிக்கடி நலம் விசாரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காக இஸ்லாம் பல வெகுமதிகளை பரிசாக வழங்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் (உடல் நலிவுற்ற) தம் சகோதர முஸ்லிமை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், அவர் திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டேயிருக்கிறார்.- இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் – 5019)

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), “ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?” என்று கேட்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்பான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

மேலும் “ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், “என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் – 5021)

எனவே ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி நோயாளியை அல்லாஹ்விற்காக நலம் விசாரித்து, து ஆ செய்ய வேண்டும்.

அதே போல நோயாளி காபிராக இருந்தாலும் அவரையும் தாராளமாக நலம் விசாரிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் தனக்கு சேவை செய்த யூத சிறுவன் நோயுற்றிருந்த போது அவரை நலம் விசாரித்ததோடு, இஸ்லாம் மார்க்கத்தின் பக்கம் அழைப்பும் விடுத்தார்கள்.

http://www.islamkalvi.com/?p=106618

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails