Saif Saif
கல்லால் சில
பேர் அடித்தார்கள்..
கடும் சொல்லால் பல
பேர் வதைத்தார்கள்.
எல்லா துயரத்தையும்
சகித்தார்..
நபி அல்லாஹ் ஒருவன்
என்றே உரைத்தார்.."
என்று நாகூர் அனிபா பாட கேட்டிருப்போம்..
அந்த நிகழ்வுகளின்
உண்மையை அறியும் போது நெஞ்சம் நம்மையறியாமல்
பதைபதைப்பதை ஏனோ
தடுக்க முடியவில்லை..
நபியின் சித்தப்பா அபூலஹப் நபிக்கு செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
நபியின் வீடு அபூலஹபின் வீட்டோடு இணைந்திருந்தது..
அவனும்,அவனது அண்டை வீட்டுக்காரர்களும்
நபிக்கு எப்போதும்
நோவினைக் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்..
அதில் முக்கியமானவர்கள்..
அபூலஹப்,ஹகம் இப்னு அபுல்ஆஸ், இப்னு உமைய்யா,உக்பா இப்னு அபீமுயீத்,அதீ இப்னு ஹம்ரா ஸகாபி,இப்னுல் அஸ்தா..
இவர்கள் நபிகள் தொழும் போது ஆட்டுக்குடலை அவர்கள்
மீது வீசுவார்கள்..
நபியவர்கள் வீட்டில் சமைக்க சட்டியை வைக்கும் போது அதில் ஆட்டுக்குடலை கொண்டு வந்து போடுவார்கள்..
நபியவர்கள் "இதுதான் அண்டை வீட்டாருடன் நீங்கள் காட்டும் ஒழுக்கமா.." என்று கேட்டுக் கொண்டே..
அதை ஒரு குச்சியில் எடுத்து வீட்டின் வெளியே ஓரமாக போடுவார்கள்..
ஹஜ்ஜின் காலங்களில்,கடைத் தெருக்களில் அபூலஹப் நபியின் பின்னால் சுற்றி வந்து அவர்களை "பொய்யர்" என்று கூறுவான்..
அதுமட்டுமல்ல ரத்தம் சொட்டும் வரை அவர்களின் பிடரியில் பொடிக்கற்களால் அடித்துக் கொண்டேயிருப்பான்..
அபூலஹபின் மனைவி அபூஸுப்யானின் சகோதரி உம்மு ஜமீல் மிக மோசமானவள்..முட்களை நபியின் வீட்டு வாசலிலும்,அவர்கள்
செல்லும் பாதையிலும்
வைத்து விடுவாள்..
எப்போதும் ஏசிக் கொண்டும்,பொய்களை
பரப்பிக் கொண்டும் இருப்பாள்..பிரச்சினைகளில் நெருப்பை மூட்டிக் கொண்டிருப்பாள்..இதனால் தான் அல்குர்ஆன் அவளை "ஹம்மாலதல் ஹதப்" விறகை சுமப்பவள் என வருணிக்கிறது..
குழவிக்கல்லை
கையோடு எடுத்து
வந்து முகம்மதின் வாயில் அடிப்பேன்..என்று வெறித்தனமாக
வந்தவள் இவள் தான்..
ஒருமுறை நபியவர்கள் கஅபாவுக்கு அருகில் தொழுது கொண்டிருக்கும் போது ஒட்டக குடலோடு அபூஜஹ்லும் அவனது கூட்டாளிகளும் வந்தார்கள்.
"முகமது சுஜூது போகும் போது இதை அவர் முதுகில் போட வேண்டும்.யார் இதை செய்வது" என்று கேட்டான் அபூஜஹ்ல்..
"நான் செய்கிறேன்" என்று
கூறிய திமிர் பிடித்த உக்பா வெறியோடு நபியவர்கள் சுஜூது செய்யும் போது அவர் முதுகில் அதை போட்டு விட்டான்..
நபி(ஸல்) அவர்கள் தலையை உயர்ந்த முடியாமல் சுஜூதிலேயே இருந்தார்கள்..
இதை பார்த்த அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து விழுந்து ஏளனமாக சிரித்தார்கள்..
அங்கு வந்த பாத்திமா(ரலி) தான் அதை அகற்றினார்கள்..
இன்னொருவன் உமையா
நபியை பார்க்கும்
போதெல்லாம் பகிரங்கமாக ஏசிக்கொண்டும்,இரகசியமாக குறை கூறிக் கொண்டும் இருப்பான்..
இதை இறைவனின் இறைவசனம் அழகாக கூறுகிறது..
குறை கூறிப் புறம் பேசித்திரிபவர்களுக்கெல்லாம்
கேடு தான் (104:1)
உமையாவின் சகோதரர்கள் தான் உக்பாவும்,உபையும்
ஒரு தடவை நபிகள் ஓதுவதை செவிமடுத்து விட்டான் உக்பா..
இதையறிந்த கடும் சினங்கொண்ட உபை உடனே நீ சென்று நபியின் முகத்தில் துப்பி வர வேண்டும் .என்று சொல்ல அது போலவே எச்சிலை துப்பி வந்தான்
இந்த உக்பா.
இந்த உபையும் மிகவும் மோசமானவன்.மக்கிப்போன எலும்புகளை நொறுக்கி பொடியாக்கி நபிகளை நோக்கி காற்றில் பறக்க விடுவான்..
ஒருமுறை நபிகள் மகாம் இப்றாஹீமிற்கு அருகில் தொழுததைப் பார்த்த அபூஜஹ்ல் நபிகளை எச்சரிக்கைச் செய்தான்..
"நான் இவ்வோடையில் வசிப்போரில் நானே பெரிய சபையுடையவன் உமக்குத் தெரியாதா "என்றான்.
"உனக்குக் கேடுதான்..
உனக்குக் கேட்டிற்கு மேல் கேடுதான்.."(75:34,35)
என்ற வசனத்தை இறைவன் அப்போது தான் இறக்கி வைத்தான்..
பதிலுக்கு" நீயும் சரி..உமது இறைவனும் சரி என்னை ஒன்றும் செய்ய முடியாது..மக்காவில் இரு மலைகளுக்கிடையில் நடக்கும் மிகப் பெரிய பலசாலி " என்றான் அபூஜஹ்ல்..
ஒருமுறை குழுமியிருந்த ஒரு கூட்டத்தை பார்த்து முகம்மது உங்களுக்கு முன்னிலையில் தனது முகத்தை
மண்ணில் வைத்து தேய்க்கிறாராமே..என்று கேட்டான்..
நான் அவரைப் பார்த்தால் அவரது பிடரியின் மீது கால் வைத்து அழுத்தி அவரது முகத்தை மண்ணோடு மண்ணாக்கி விடுவேன்..என்றான் அபூஜஹ்ல்.
இதை உக்பா இப்னு அபூமுயூத் செயல்படுத்தினான்..
நபியவர்கள் ஸஜ்தாவில் இருக்கும் போது அவர்களுடைய பிடரியில் மிதித்தான்..நபி(ஸல்) அவர்களின் விழிகள் பிதுங்கிற்று..
இதையெல்லாம் விட மிக மோசமான ஒரு சம்பவம் நபியவர்கள் ஹஜருல் அஸ்வத்திற்கு அருகில் தொழுது கொண்டிருந்த போது
உக்பா இப்னு அபூமுயீத் அங்கு வந்து தன் மேலாடையை நபியின் கழுத்தில் போட்டு இறுக்கினான்..
அந்த நேரத்தில் அங்கு விரைந்து சென்ற அபூபக்கர்(ரலி) அவர்கள் ,
"தனது இறைவன் அல்லாஹ்" என்று கூறியதற்காகவா ஒருவரை கொல்ல பார்க்கிறீர்கள்" என்று நபியை அவர்களிடமிருந்து விடுவித்தார்கள்..
அந்நிராகரிப்பாளர்கள் நபியை விட்டு விட்டு தங்கள் கோபத்தை அபுபக்கர் அவர்கள் மேல் காட்டி விட்டார்கள்..
நபியவர்கள் ஒருமுறை ஸஃபா மலைக்கருகில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த அபூஜஹ்ல் கடும் வார்த்தைகளை சொல்லி இம்சித்தான்..
ஆனால் நபியவர்கள் அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள்..
பிறகு அபூஜஹ்ல் ஒரு கல்லால் நபி(ஸல்) அவர்கள் மண்டையில் அடித்து காயப்படுத்தி விட்டு சென்று விட்டான்..
நபி(ஸல்) அவர்களின் தலையிலிருந்து இரத்தம் கசிந்தது..
இந்நிகழ்வு தான் ஹம்ஜா அவர்கள் இஸ்லாத்தை தழுவ முக்கிய காரணமாக அமைந்தது..
இப்படி பல சோதனைகளையும்,
வேதனைகளையும்,
அடிகளையும்,
அவமானங்களையும்
தாங்கி தாங்கி நபியவர்கள் பொறுமையின் சிகரமாக இருந்து இஸ்லாத்தின் பால் பலரையும் அழைத்தார்கள்..
அப்படி வளர்ந்த,
வளர்க்கப்பட்ட இஸ்லாம்
இன்று நம் சகிப்பின்மையின் சாராம்சத்தை பறைசாட்டிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது உண்மையில் வேதனை தான் மிஞ்சுகிறது..
இறைவன் நம்
அனைவருக்கும்
பொறுமையை
தந்தருள போதுமானவன்..
Saif Saif
No comments:
Post a Comment