தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
அரிசி மாவு - 1/2 கிலோ
தேங்காய் - 2 (சிறியது)
மிளகுத் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகப்பொடி (சோம்பு) - 2 டேபிள் ஸ்பூன்
மல்லிப் பொடி - 1/2டேபிள் ஸ்பூன்
பல்லாரி(பெரிய வெங்காயம்) - 2
சின்ன வெங்காயம் - 15
கறுவா - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 3
இஞ்ஜி, பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.
முன்னேற்பாடு :
தேங்காய் - 1, மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, பெருஞ்சீரகப்பொடி- 1 டேபிள் ஸ்பூன், கறுவா ஆகியவற்றுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை :1. கோழிக் கறியை ரோஸ்ட் செய்ய:
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித்தழையை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கோழிக் கறியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறுவா, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றுடன் இஞ்ஜி, பூண்டு பேஸ்ட் போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கும் பொழுது 2 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளவும். அதில் தக்காளியைச் சேர்த்து நன்கு கரையும் வரை வதக்கவும்.
வதங்கிய பின் கோழிக் கறித் துண்டுகளைப் போட்டு வதக்கவும். பிறகு மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்த் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன், பெருஞ்சீரகப்பொடி (சோம்பு) - 1 டேபிள் ஸ்பூன், மல்லி பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும். கோழிக் கறி வெந்தவுடன் மல்லி இழை தூவி இறக்கவும்.
2. மாவு உருண்டை செய்ய:
அடுப்பில், பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் ஒரு தேங்காயின் துருவலையும் அத்துடன் அரைத்து வைத்து இருக்கும் மசாலாவின் பாதியையும் போட்டு தண்ணீர் கொதித்தவுடன் அரிசி மாவை இட்டு தேவையான அளவு உப்புப் போட்டு (கொழுகட்டை பதத்திற்கு) கிண்டவும். சிறிது நேரம் கழித்து மாவு ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக ஆக்கிக் கொள்ளவும்.
3. சக்கோலிச் செய்ய:
மீதி இருக்கும் அரைத்த மசாலாவை தண்ணீரில் கரைத்து நன்றாக கொதிக்க விட்டு அதில் மாவு உருண்டைகளை உதிரியாக (ஒவ்வொன்றாக) போட்டு வேக விடவும். அனைத்து மாவு உருண்டைகளும் வெந்தவுடன் வேக வைத்து இருக்கும் கோழிக் கறி ரோஸ்டை உருண்டை கலவையுடன் சேர்த்து கிளறி கொதிக்க வைக்கவும்.
4. தாளிக்க:
எண்ணெயில் நறுக்கிய சிறிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து, சக்கோலிக் கலவையில் கொட்டி மல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான சூடான சக்கோலி தயார். இளம் சூட்டோடு பரிமாறினால், அதன் சுவையே தனிதான்!
குறிப்பு :* கோழிக் கறிக்குப் பதிலாக மட்டன் கறி, பீப் அல்லது இறாலிலும் சக்கோலி செய்யலாம்.
* இது கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லைப் பகுதிகளில் பிரபலமானது.
- இன்றைய ரெசிப்பி ஆலோசனை வழங்கியவர் : வெண்ணிலா
1 comment:
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
ரெசிபி,விளக்கம் அருமையோ அருமை.
நீங்களும் சமையல் பதிவா ?
Post a Comment