Wednesday, May 30, 2012

தொட்டால் தொடரும் ! - குறுந்தொடர்-1

இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ரங்கூன் போன்ற நாடுகளுக்கு "திரை கடலோடி திரவியம் தேடச் சென்றார்கள். அப்படிப் போன பலபேருடைய குடும்பம் "நல்லா" இருந்தது. அவர்கள் "ஜக்காத்" கொடுத்தார்கள். மற்றவர்கள் வாங்கினார்கள். அவர்கள் "ஹஜ்" செய்தார்கள், மற்றவர்கள் அவர்களை "ஹாஜியாரே" என்று அழைத்தார்கள். அவர்கள் புதிய வீடு கட்டினார்கள்., கார் வாங்கினார்கள், பிள்ளைகளை டாக்டராகவும் இஞ்சினியராகவும் படிக்க வைத்தார்கள். வயல், தோப்பு, மனைகள் வாங்கிப் போட்டார்கள். 




அந்தக்குடும்பங்களில் பல குடும்பங்கள் இன்றும் நல்ல நிலையில் இருக்கின்றன. அவர்களுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து வழங்கப் பட்டது. சென்ற இடமெல்லாம் அவர்களை கவுரவிக்க பலர் காத்திருந்தார்கள். அங்கேஅவர்களின் "பணம்" அவர்களின் தகுதியைப் பேசியது. பலர் அவர்களை அண்டி வாழ்ந்தார்கள், மற்றும் சிலர் அவர்களைப் பார்த்து பொறாமைப் பட்டார்கள். தங்களுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது என்பதே அதற்குக் காரணம். ஏனென்றால் சிங்கப்பூர், மலேசிய நாடுகளின் கதவுகள் அடைபட்டு விட்டன. புதிதாக யாரும் அங்கே போக முடியாது. உள்ளூரில் அந்த "முதலாளிகளின்" கடைகளில் பலர் வேலைப் பார்த்தார்கள். பெரும்பாலான மக்கள் கூலி வேலையும் "சாப்பாடு கழிந்தால் போதும்" என்ற அளவுக்கு வருமானமுள்ள வேலையும் பார்த்தார்கள்.

அந்த வசதிமிக்கக் குடும்பத்திலும் பல பிரச்சினைகள். பணம் தேடச் சென்றவர்கள் அங்கே மற்றொரு பெண்ணை மணமுடித்து அங்கேயும் பல பிள்ளைகளைப் பெற்றார்கள். தங்கள் ஊரிலுள்ள மனைவி மக்களை மறந்து போனார்கள். அவர்களின் பணம் அங்கேயும் கவுரவமாகத்தான் பேசப்பட்டது. கணவனால் மறந்துபோன குடும்பப் பெண்கள் பட்ட துன்பத்துக்கு அளவே கிடையாது.கிட்டத்தட்ட "கைம்பெண்கள்" போல் அவர்கள் வாழ்வு அமைந்தது. சிலர் "அங்கேயும் இங்கேயும்" நீதமாக நடந்து கொண்டார்கள். அந்தக் குடும்பகளுக்கு பாதிப்பில்லை.இவ்வளவு பிரச்சினைகள் சமுதாயத்தில் இருந்தபோதும் "வரம்பு மீறுவது" "வேலி தாண்டுவது" போன்ற "கலாச்சாரங்கள்" குறைவாகத்தான் இருந்தது.

சமுதாயம் ஏழைகளால் நிரம்பி இருந்தது. இந்த ஏழைகளுக்கு பல குழந்தைகள். அவர்களை படிக்க வைக்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லை. S .S .L .C . பாசான சிலர் அரசு வேலைக்குப் போனார்கள். அன்றைய நிலையில் "வக்கத்தவனும் வகையத்தவனும்" தான் அரசு வேலைக்குப் போவார்கள் என்ற பேச்சு மக்களிடம் இருந்தது. சம்பளம் மிகவும் குறைவு என்பது அதற்கொருக் காரணம். இப்படி பல ஏற்றத் தாழ்வுகள் அன்றைய மக்களிடம் இருந்தது. பணக்கார பிள்ளைகள் பெரிய படிப்பும் பாவப்பட்ட பிள்ளைகள் சாதாரண பள்ளிப் படிப்பும் படித்தார்கள். தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் தங்கள் வாழ்க்கை வசதிகளை வகுத்துக் கொண்டார்கள். வாழ்க்கை நெருடலில்லாமல் எல்லோருக்கும் இனிமையாகத்தான் அமைந்தது.

மக்களிடம் அன்பு, பணிவு, ஒற்றுமை, ஆடம்பரமின்மை, இபாதத்து, இக்லாசு எல்லாம் செல்வமாக இருந்தது. வரதட்சணை மோகம் இல்லை. பளிங்கு மண்டபத்தில் நாட்டம் இல்லை. டிவி கிடையாது. கூட்டுக் குடும்பம். மொத்தத்தில். "இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்தார்கள்"

வழக்கம்போல் தங்கள் கடமைகளை முடித்து உறங்கப்போன அந்த மக்களை திடீரென்று வீசிய "புயல்" திக்கு முக்காட வைத்துவிட்டது. தங்கள் வாழ்விலும் இப்படி ஒரு "வசந்தச் சூறாவளி" வீசும் என்று தெரியவே தெரியாத அந்த மக்களை இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீசியப் "பாலைவனப் புயல்" எங்கேயோ கொண்டுபோய் உட்கார வைத்து விட்டது.......

(இன்ஷா அல்லாஹ் ---- தொடரும்)
-அபூஹாஷிமா

Source : http://adirainirubar.blogspot.in/2012/04/1.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails