முதல் பிறை ...... பிறந்தார்
மாநிலத்தின் மார்பிடமாய்த் திகழ்ந்த மக்காவும் மூடத்தனங்களால் மூடித்தான் கிடந்தது.அங்கே ...
மனிதர்கள் வாழ்ந்தார்கள்...மனிதத்தன்மை இறந்திருந்தது.
பெண்கள் அழகாக இருந்தார்கள்...பெண்மை தொலைந்து போயிருந்தது.
படைத்த இறைவனைத் தவிர படைக்கப்பட்டவை அனைத்தும் கடவுள்களாய் வணங்கப்பட்டன.
வாழ்க்கை நெறிகள் வாழ்வை இழந்து விதவைகளாகிக் கொண்டிருந்தன.
மொத்தத்தில் ...உலகமே பூலோக நரகமாக மாறிக் கொண்டிருந்தது.
ஓரிரு நல்லவர்கள் பூமியில் இல்லாமலில்லை.ஆனாலும் தீமைகளை தடுத்து நிறுத்தும் வல்லவர்களாய் அவர்களில் யாருமே இல்லை.
சொல்லால்..கண்ணீர்த் துளியால் காபாவின் இறைவனை அவர்கள் துதித்தார்கள்.அவனின் அருள் வழி காட்டுதலை அடையத் துடித்தார்கள்.
இறைவன் இரங்கினான் ! தன் திருத்தூதராய் இறைத்தூதரை பூமியில் இறக்கினான்!
அப்துல்லாஹ் - ஆமினா ..மக்கா நகரத்தின் இனிய தம்பதிகள். ஆமினா கருவுற்றார்.வணிகம் செய்யச் சென்ற கணவர் அப்துல்லாஹ் வணிகம் முடித்து தாயகம்
திரும்பி வரும் வழியில் *யத்ரிபில் இறந்து போனார்.
கணவரை இழந்து கண்ணீரில் மிதந்த கருணைத்தாய் ஆமினா தன் வயிற்றுக் குழந்தையை ஈன்றெடுக்கும் நாளை வரமாக எண்ணிக் காத்திருந்தார்.
கி.பி.571ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் நாள் திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் (* ரபியுல் அவ்வல் பிறை 9 ) வானுறை வேந்தன் வளமுடன் வாழ்த்த...வானவர் கூட்டம் வாழ்த்திசை முழங்க ...சுற்றமும் நட்பும் சந்தோசம் பாட ...
புண்ணியம் ஒன்றே பொற்பெனக் கொண்ட பெருமான் நபிகள் பூமியில் பிறந்தார்.
ரஹ்மத்துன்லில் ஆலமீன் ( அகிலத்தின் அருட்கொடை ) என இறைவனால் அழைக்கப்பட்ட தன் தங்க மகனின் முகம் கண்ட ஆமினாத் தாயார் , "முஹம்மது" (புகழப்பட்டவர் ) என பெயரிட்டு முத்தமிட்டார். அன்புப் பாட்டனார் அப்துல் முத்தலிப் " அஹமது" என அழைத்து அகம் மகிழ்ந்தார்.
அஞ்ஞானத்தின் அசுத்தக் காற்றில் திணறிக் கொண்டிருந்த அரபு மண்ணில் சுகந்தம் வீசியது..
மாநிலமெங்கும் மாநபியின் வாசம்!
மண்ணுக்கோ புத்தம் புது சுவாசம்!
********* ( 2ம் பிறை வரும்...)
* யத்ரிப்... இன்றைய மதீனா
* பிறை 9 என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் முடிவு .
* பிறை 12ல் பிறந்ததாகவும் சில அறிவிப்புகள் இருக்கின்றன.
No comments:
Post a Comment