Saturday, January 11, 2014

நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) மறுவிலாதெழுந்த முழுமதி (இரண்டாம் பிறை)


***** முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) *****
இரண்டாம் பிறை ...... வளர்ந்தார்

*********

மக்கா - மாநிலத்தின் மாண்புமிக்க நகரம்! பூமியில் இறக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் இந்த மண்ணில்தான் அல்லாஹ்வை வணங்க முதல் ஆலயத்தை அமைத்தார். அது காபா!

கணக்கிட முடியாத காலங்கள் கடந்த பின்னும் பயணிகளும் பக்தர்களும் புனித ஆலயத்தை தரிசிக்க மக்காவுக்கு வந்து கொண்டே இருந்தனர்.

குழுக்களாகவும் கூட்டங்களாகவும் வந்தவர்கள் எல்லாம் தங்கள் குல தெய்வங்களின் உருவச் சிலைகளை காபாவைச் சுற்றி நிறுத்தி வைத்தனர். காலப்போக்கில் 360 கற்சிலைகள் காபாவின் கண்ணியத்தை கறை படுத்திக் கொண்டிருந்தன.

ஆண்டு முழுவதும் மக்காவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது.தினந்தோறும் ஒவ்வொரு சிலையும் ஆராட்டிலும் சீராட்டிலும் திளைத்தது. கலைகளும் வணிகமும் தளைத்தோங்கிய மக்காவில் ஆண்களிடம் வீரம் விளையாடியது.பெண்களிடம் சோகம் குடியேறியது.

அன்றைய அரபு நாட்டில் பெண்ணாய் பிறப்பது பாவம். தவறிப் பிறந்த பச்சை பெண் சிசுக்களை பாலை மணலில் உயிருடன் புதைத்தார்கள்.அங்கே இரக்கம் இறந்து போயிருந்தது. மிருகம் மனிதனாய் நடமாடியது. படைக்கப்பட்ட கற்சிலைகளுக்கு மனிதர்கள் ஆடு மாடு ஓட்டகையோடு தங்கள் பகுத்தறிவையும் சேர்த்தே பலி கொடுத்தார்கள். உடல் வலிமையையும் செல்வச் செருக்கும் பெற்றிருந்தவர்கள் தலைவர்களாகி தடியாட்சி நடத்திக் கொண்டிருந்தனர்.

நல்ல குணம் உள்ளவர்கள் யாரும் வாழ மனம் விரும்பாத மண்ணாகிப்போன அந்த நாளில் குழந்தை முஹம்மது ஹவாஸின் குலத்து செவிலித்தாய் ஹலீமாவிடம் பால் குடித்து வளர்ந்தது.பெருமானார்... ஆறு வயது வரை ஹலீமாவின் குழந்தைகளோடு கூடி வாழ்ந்தார்.அவர்களோடு ஆடு மேய்த்தார். எளிமையிலும் இன்பம் கண்டார்.பொருள் இல்லாதவர்கள் வழங்கிய குறைவேயில்லாத அன்பில் திளைத்தார். ஆறு வயது நிறைந்தபோது தாயார் ஆமினாவிடம் திரும்பி வந்தார். தந்தையின் மண்ணறையை தரிசிக்க தாயாரின் கரம் கோர்த்து யத்ரிப் வந்த திருமகனார் அங்கே தாயையும் இழந்து அனாதையானார்.

எட்டு வயது வரை அரவணைத்து வளர்த்த அருமைப் பாட்டனார் அப்துல் முத்தலிப் மறைந்த பிறகு பெரிய தந்தை அபுதாலிப் ஆதரவில் பெருமான் முஹம்மது வளர் பிறையாய் வளர்ந்து வந்தார்...

********** இன்ஷா அல்லாஹ் மூன்றாம் பிறை  வரும் **********
**********
  
Abu Haashima Vaver
அபு ஹாஷிமா





*****

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails