Sunday, January 12, 2014
நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) ** மறுவிலாதெழுந்த முழுமதி ***மூன்றாம் பிறை
* முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) *
மூன்றாம் பிறை ......மணந்தார்
*************************
பாலை மணல் பாவங்களோடு பல பரிசுத்தங்களையும் சுமக்கவே செய்தது. கதீஜா - இந்தப் பெயரைச் சொன்னால் அரபுலகத்தில் அறியாதவர் எவரும் இலர். காரணம்,கதீஜா பெருமாட்டி அரபுலகத்தில் பிறந்த உத்தமப் பெண்மணி. அளவில்லாத செல்வத்துக்கு அதிபதி. தந்தையார் செய்த வணிகத்தை அவருக்குப்பின் திறமையுடன் நடத்திய ஆற்றலும் அறிவும் மிக்க நிர்வாகி. இட்ட பணியை முடிக்க அன்னையார் மாளிகையில் ஏவலாளர்கள் ஏராளம்.கண்ணியமும் கருணையும் மிக்க கதீஜாவின் மாளிகைக் கதவுகள் ஏழைகளுக்கு எப்போதும் திறந்தே இருந்தன. வற்றாத வசதிகள் வளமாகப் பெற்றிருந்த கதீஜா அம்மையார் ஒரு விதவை. என்றாலும்.... அவரை மணந்து கொள்ள ஆன்றோர் முதல் அரசர்கள் வரை ஆவலாய் இருந்தார்கள். நாயகியார் மனம் மட்டும் யாரையும் விரும்பவில்லை.
அண்ணல் முகம்மதுவுக்கு வயது 25. வீரமும் விவேகமும் விஞ்சி நின்ற அண்ணலின் நெஞ்சில் வஞ்சகம் என்பது கொஞ்சமும் இல்லை. பெரிய தந்தை அபூ தாலிப் ஆதரவில் வளர்ந்த பிள்ளையை வியாபாரத் துறையில் வெல்லக்கூடியவர் வையகத்தில் எவரும் இல்லை. வறுமைச் சூழலில் வாழ்ந்த வள்ளலுக்கு தனித்தே வர்த்தகம் செய்யும் வசதி வாய்ப்புகள் மட்டும் அமைந்திருக்கவில்லை. என்றாலும் யாருமே பெற முடியாத " அல் அமீன் " (நம்பிக்கையாளர்) என்னும் அடைமொழியால் அண்ணல் அடையாளப்பட்டார்.நீதி..நேர்மை...நாணயம் போன்ற நற்குணங்களால் நானிலம் எங்கும் நாயகம் நல்ல பெயர் பெற்றார்.
கதீஜாவின் காதுகளிலும் அண்ணலின் அருமைகள் ஆனந்த ராகம் பாடின. பிராட்டியாரின் விருப்பத்தையேற்ற பெருமானார் கதீஜாவின் வணிகக் குழுவிற்குத் தலைவரானார்.
வணிகத்தில் அவர்கள் நடந்து கொண்ட நேர்மையும் உயர் பண்புகளும் பெருமாட்டி இதயத்தில் பெருமானாருக்கு சிம்மாசனத்தை போட்டு வைத்தது. தாதிப்பெண் நபீசா தூதுப் பெண்ணாகி அபூதாலிபிடம் பெருமானாரை மணம் புரிந்து கொள்ளும் பெருமாட்டியின் ஆவலை எடுத்துரைத்தார்.
இரு மனங்கள் இணைந்தன. திருமணம் நிகழ்ந்தது.அவர்கள் நடத்திய இல்லறம் நல்லறம் என்பதற்கு சாட்சியாக ஆறு குழந்தைகளை ஈன்றெடுத்தார்கள். ஆண் குழந்தைகள் இருவரும் சிறு வயதிலேயே இறந்து போனார்கள். ஜைனப், ருகையா, உம்மு குல்தூம் என்ற பெண் மக்களோடு புவனத்தின் பெண்ணரசி..சுவனத்தின் மாதரசி பாத்திமா நாயகியையும் பரிசாகப் பெற்றனர்.
இரு உடல்களின் ஒற்றை சுவாசமாய் ஒரு கோடி பூக்களின் இனிய வாசமாய் அண்ணல் பெருமானார் - கதீஜா பிராட்டியார் இல்லற வாழ்வு இனிமையாய் அமைந்தது!
*** இன்ஷா அல்லாஹ் *** வரும் **************
அபு ஹாஷிமா
Abu Haashima Vaver
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment