Saturday, January 11, 2014
நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) ** மறுவிலாதெழுந்த முழுமதி முஹம்மது ரஸூலுல்லாஹ் ...(நபிகளாரின் வாழ்க்கைத் தொடர்...சுருக்கமாக ) **நான்காம் பிறை
***** நான்காம் பிறை *** பெற்றார் *****
**********
இறைவனால் பூமியில் இறக்கப்பட்ட இறைத்தூதர்கள் லட்சத்து இருபத்தி நாலாயிரம் பேர். முதல் மனிதர் ஆதம் கூட இறைத் தூதர்தான். அவர் மனைவி மக்களுக்கும் அவரது சந்ததியருக்கும் இறைவனை எடுத்துக் கூறியவர் அவர்.அவரைத் தொடர்ந்து வந்த இறைத் தூதர்கள் பன்னெடுங்காலம் உலகில் வாழ்ந்திருந்தாலும் அவர்களை பின்பற்றி வாழ்ந்தவர்கள் மிகக் குறைவு.அவர்களின் மறைவுக்குப் பின்னால் அவர்கள் எடுத்துச் சொன்ன கொள்கைகளும் மறைந்தே விட்டன.
புதுப் புது கொள்கைகளும் உருவ வழிபாட்டு முறைகளும் உலகில் பிறப்பெடுத்தன.அரபு நாடும் அப்படித்தான் இருந்தது.மூடத்தனங்களுக்கு மக்கள் முதல் மரியாதை செய்தார்கள்.புண்ணியங்களுக்கு மூடு விழா நடத்தினார்கள்.இளமையிலேயே ஏக இறையின் மீது ஈடுபாடு கொண்ட அண்ணலார் மதி இழந்தோரின் கதி மோட்சத்திற்காக ஆதங்கப் பட்டார். அலை பாயும் மனதுக்கு அமைதி தேடி ஹிரா எனும் மலைப் பொதும்பில் அடைக்கலம் புகுந்தார். விழி நீரால் உருவமற்ற இறையைத் துதித்தார். நல்வழி காட்டச் சொல்லி இரவும் பகலும் பல நாட்கள் அழுதார்.
ஒரு நள்ளிரவில் இருட்டுப் போர்வைக்குள் பூமி சுருண்டு கிடந்தது. வழக்கம்போல் வள்ளலின் சிரம் மட்டும் இறையருள் வேண்டி ஹிராக் குகையில் பணிந்து கிடந்தது. அப்போதுதான் சூரியனை எரிக்கும் வெளிச்சத்தோடு ஒளி ஒன்று வானிலிருந்து இறங்கி வந்தது. வள்ளலின் முன்னால் மனித உருக்கொண்டு நின்று அவர்களை வாரி அணைத்தது. அச்சத்திலும் ஆச்சரியத்திலும் விழி விரிந்து நின்ற அண்ணலை மீண்டும் மீண்டும் வாரி அணைத்தது. " ஓதுவீராக! உம்முடைய இறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவனே அனைத்தும் படைத்தான் ...." எனும் வேத வரிகளை ஓதிக் காட்டி வள்ளலிடமும் ஓதக் கூறியது.
இறைவன், ஜிப்ரீல் எனும் அமரர் தலைவரை வானத்திலிருந்து அனுப்பி வைத்து , தான் இறுதித் தூதராய் இறக்கி வைத்த முகம்மதுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தான்.எழுதப் படிக்கத் தெரியாத உம்மியான அண்ணல் ...ஜிப்ரீல் ஓதிய திரு வசனத்தை தன் திருவாயால் திறந்து வைத்தார். குகைக்கு வெளியே வந்த ஜிப்ரீல் விண்ணுக்கும் மண்ணுக்கும் வளர்ந்தார். தன்னை ஜிப்ரீல் என்று அறிவித்தார். முஹம்மதை இறைவனின் நபி என்று பிரகடனம் செய்தார். தான் ஓதியது ஏக இறைவனின் வேத வரிகள் என்பதை எடுத்துரைத்து விண்ணில் மறைந்து விட்டார்.
அந்த இரவுதான் புனிதமிக்க ரமளானின் "லைலத்துல் கத்ர் " என்னும் புண்ணிய இரவு. அந்த இரவில்தான் இறைவனின் திரு வேதம் குர் ஆனையும் இறைத் தூதர் எனும் நபிப் பட்டத்தையும் தங்களது நாற்பதாவது வயதில் பெற்று " முஹம்மது ரஸூலுல்லாஹ்" வானார் பெருமானார்.
அஞ்ஞானம் எனும் இருட்டு போதையில் குப்புறக் கிடந்த உலகத்தின் முதுகின் மீது ஏகத்துவம் எனும் மெஞ்ஞானத்தின் வெளிச்சம் பளீர் என அறைய ஆரம்பித்தது....
***** ஐந்தாம் பிறை ... இன்ஷா அல்லாஹ் ... நாளை வரும் ***** அபு ஹாஷிமா
அபு ஹாஷிமா
Abu Haashima Vaver
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment