Sunday, September 27, 2015

புஜேராவில் 210 மில்லியன் செலவில் கட்டப்பட்ட ஷேக் ஜாயித் பள்ளிவாசல் பக்ரீத் பெருநாளன்று திறக்கப்பட்டது




புஜேராவில் 210 மில்லியன் செலவில் கட்டப்பட்ட ஷேக் ஜாயித் பள்ளிவாசல் பக்ரீத் பெருநாளன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் அமீரகத்தின் இரண்டாவது பெரிய பள்ளிவாசல் என்ற பெருமையினை இந்த பள்ளிவாசல் பெற்றுள்ளது.

பக்ரீத் பெருநாளன்று நடந்த சிறப்புத் தொழுகைக்கு புஜேரா ஆட்சியாளர் மேதகு ஷேக் ஹமத் பின் முகம்மது அல் சர்கி தலைமை வகித்தார்.

39,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பள்ளிவாசலில் 28,000 பேர் தொழுகை செய்யலாம்.  புஜேராவின் மத்தார் பின் முகம்மது சாலையில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசலில் 63 டோம்கள் (domes) எனப்படும் கூம்பு வடிவ அமைப்பு கொண்டுள்ளது. மேலும் 6 உயரமான மினாராக்கள் உள்ளன. இந்த மினாராக்கள் ஒவ்வொன்றும் 80 முதல் 100 மீட்டர் உயரம் கொண்டது.

புஜேராவின் அருகில் உள்ள கித்பா பகுதியில் இருந்து புதிதாக திறக்கப்பட்டுள்ள ஷேக் ஜாயித் பள்ளிவாசலுக்கு பக்ரீத் பெருநாள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்க வந்த சயீத் அல் பாதி இந்த புதிய பள்ளிவாசல் புஜேரா நகருக்கு மேலும் பெருமை சேர்க்க கூடியது என்றார்.

இந்த பள்ளிவாசலுக்கு வளைகுடா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து பார்வையிடுவர் என்றார்.

இந்தப் பகுதியில் அமீரகத்தின் மிகவும் பழமையான அல் பிதியா பள்ளிவாசல் இருக்கிறது. அமீரகத்தின் இரண்டாவது பெரிய பள்ளிவாசலான ஷேக் ஜாயித் பள்ளிவாசலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாமிய கலாச்சார வரலாற்றில் புஜேரா முக்கிய இடத்தைப் பிடிக்கும் என அவர் மேலும் கூறினார்.

இந்த பள்ளிவாசல் எப்பொழுது திறக்கப்படும் என எதிர்பார்த்து வந்தோம். எனினும் பக்ரீத் பெருநாள் முதல் தொழுகைக்காக திறக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருப்பதாக புஜேராவைச் சேர்ந்த அகமது அல் தன்கானி தெரிவித்தார்.

இந்த பள்ளிவாசல் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லின் சுலேமானியா பள்ளிவாசலின் தோற்றத்தை ஒத்திருப்பதாக கூறினார். இதன் மூலம் முக்கிய தொழுகையின் போது பல்வேறு பள்ளிவாசல்களிலும் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கலாம்.

ஒவ்வொரு பகுதியும் மிகவும் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

புஜேராவின் புதிய தோற்றமாக அமைந்துள்ள இந்த பள்ளிவாசல் கட்டும் பணி கடந்த 2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது என புஜேரா மாநகராட்சியின் இயக்குநர் ஜெனரல் முகம்மது அல் அப்கம் தெரிவித்தார். இந்த பள்ளிவாசல் கட்டுவதற்கு அமீரக அதிபர்மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்கள் நிதி உதவி அளித்துள்ளார்.

புஜேரா மாநகராட்சியின் மேற்பார்வையில் பொதுப்பணித்துறை இந்த பள்ளிவாசல் கட்டும் பணியினை மேற்கொண்டது.

இந்த பள்ளிவாசலுக்கு அமீரகத்தின் தந்தையும், மறைந்த அமீரக அதிபருமான ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் பெயர் வைக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பெருநாள் முதல் தொழுகைக்காக திறந்து வைக்கப்பட்டாலும் முறையான திறப்பு விழா பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

from:    Muduvai Hidayath
<muduvaihidayath@gmail.com>


Photos of Sheikh Zayed Mosque, Abu Dhabi -- National ...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails