Monday, September 21, 2015

இந்தப் பெருநாளிற்கு { EID AL ADHA ( FESTIVAL OF SACRIFICE ) } “தியாகத் திருநாள்” என்று பெயர் சூட்டி அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

இனி இப்படி வாழ்த்துவோம்!
--------------------------------------------
இந்தப் பதிவிற்கான படத்தினை தயாரித்துக்கொண்டிருந்தேன்.

பார்த்துக் கொண்டிருந்த நண்பர், “என்ன ஸார் ‘பக்ரீத்’க்கு பிரியாணி recipe எழுதுகிறீர்களா?” என்று கேட்டார்.

இல்லை.. இல்லை நீங்கள் சொன்ன ‘பக்ரீத்’க்கு விளக்கம் எழுதுகிறேன் என்றேன்.

”என்னது விளக்கமா?, அதற்கு எதற்கு Tomato, உருளைக்கிழங்கு??, விளங்கவில்லையே!!” என்று விழித்தார்.

என்னவென்று விளங்காததாதல் வந்த பெயர்கள்தானே Tomato மற்றும் உருளைக்கிழங்கு என்றேன்.

”என்ன சொல்றீங்க?”

ஆமாம், Tomato என்று சொல்லப்படும் தக்காளியின் தாயகம் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளாகும். குறிப்பாக மெக்ஸிகோ, பெரு போன்ற நகரங்களில் அதிகம் விளைந்த இப்பழங்களை அதிசயமாய் கண்டனர் அப்பழங்குடியின மக்கள். இதன் தோற்றத்தை வைத்து இதை ‘வீங்கிய பழம்” என்று பொருள்பட அவர்களின் பழங்கால மொழியான ’நஹுஆட்ல்’ (Nahuatl) எனும் மொழியில் Tomatl என்று பெயரிட்டு அழைத்தனர். அதுவே இன்று Tomato என்று அழைக்கப்படுகிறது.

அதே வழியில் தோற்றத்தை வைத்து நாம் உருளைக்கிழங்கிற்கும் பெயர் வைத்திருக்கிறோம்.

சரி, இஸ்லாமியர்கள் பெருநாளாக கொண்டாடுவது இரண்டு தினங்களை மட்டுமே. ஒன்று முப்பது நாள்கள் நோன்பிருந்து, ஈகை, கொடை, பகிர்தல் போன்ற உணர்வுகளை / குணங்களைக் கொண்டிருக்க வேண்டிய பயிற்சியாகவும், பயிற்சியினை நிறைவு செய்த நாளை “ஈகைத் திருநாள்” என்றும் கொண்டாடுகின்றனர்.

அடுத்ததாக, தன் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரிய ஒன்றை, இறைவனுக்காக தியாகம் செய்யத் துணிதல் வேண்டும் எனும் மனநிலையினை நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் கற்பித்தார்கள். பின்னர் அவர்கள் வழிவந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் மாண்பு மற்றும் அதன் வழிபாட்டு மரபுகளை பயிற்றுவித்தார்கள்.

வழிபாட்டின் இறுதியாக முன்சொன்ன, உலகத்தின் மீது கொண்டுள்ள பாசத்தையும் நேசத்தையும் இறைவனுக்காக துறப்போம் அல்லது தியாகம் செய்வோம் என்பதற்கு அடையாளமாக ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் ஆகிய விலங்கினை அறுத்துப் பலியிடப்படுகிறது.

உருவத்தை வைத்தும், தோற்றத்தை வைத்தும், செயல்களை வைத்தும் பெயர் சூட்டி அழைக்கப் பழகிய நமக்கு, ஆடு, மாடுகளை பலியிட்டுக் கொண்டாடும் பெருநாளை ’பக்ரீத்’ என நாமறிந்த மொழிகளில் பெயர் சூட்டி அழைக்க வேறேதும் காரணம் வேண்டுமா என்ன?

உருது, ஹிந்தி மொழி பரவலாக பேசப்படும் இடங்களிலிருந்து தோன்றிய ‘பக்ரீத்’ எனும் சொல், இந்தியாவில் மற்ற மொழிகள் பேசும் மக்களிடையேயும் புழக்கத்தில் இருக்கிறது. நம்மைப் போலவே உலக மக்கள் அனைவரும் இந்நாளை தத்தம் மொழிகளில் கீழே சொல்லியுள்ளபடி அழைக்கின்றனர்.

மலேசியாவில் Hari Raya Haji என்றும், Lebaran Haji என்று இந்தோனேஷியாவிலும், ” Eyde Ghorban” என்று பெர்ஷிய மொழியிலும், Gúerbang Jié என்று சீன மொழியிலும், ”ஹஜ்ஜுப் பெருநாள்” என்று தமிழிலும், ”பலிப் பெருநாள்” என்று மலையாளத்திலும், அரபி மொழி பேசப்படும் சில நாடுகளில் Id ul-Kabir என்று பெரிய பெருநாள் என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் தியாகம் எனும் உணர்வினை நம்மிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தரப்பட்டுள்ள இந்தப் பெருநாளிற்கு, திருநாளிற்கு { EID AL ADHA ( FESTIVAL OF SACRIFICE ) } “தியாகத் திருநாள்” என்று பெயர் சூட்டி அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

இப்ப நண்பர் சொன்னார், “ இனிய தியாகத் திருநாள் வாழ்த்துகள் நண்பரே!”

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துகள்!!!


-Rafeeq Friend

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails