இந்தப் பதிவினைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இந்தப் படத்தை நன்றாகப் பாருங்கள்.
ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவன். எலக்ட்ரானிக்ஸ் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். புதுப்புது 'ப்ராஜெக்ட்' செய்து பார்ப்பதில் ஆர்வம் மிகுந்தவன். ஆமாம் படத்திலிருக்கிறது.
அடுத்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 'ட்வீட்', உன் போன்ற குழந்தைகளினால் தான் அறிவியலில் சாதிக்கும் அமெரிக்காவிற்குப் பெருமை!
அடுத்தது அதே மாணவன் தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சிப் பெருக்கில் பயணிக்கிறான். இருக்காத பின்னே.... அதிபரிடமிருந்தே வாழ்த்துப்பெற்றால் மகிழ்ச்சி இருக்காதா? என்று நீங்கள் கேட்டால், இன்னும் அந்தப் படத்தை நீங்கள் சரிவரப் பார்க்கவில்லை என்று பொருள். !!! மீண்டும் ஒருமுறை பாருங்க...
அந்த மாணவனை போலீஸ் கையில் விலங்கிட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து வருவதை... அட ஆமாம் என்றால், ஒபாமாவின் 'ட்வீட்'ல் ஒரு கடிகாரத்தை எடுத்துக் கொண்டு வெள்ளை மாளிகை வரச் சொல்கிறாரே??
குழப்பமாக இருக்கிறதுல்ல... சிம்பிள் பையனைத் தீவிரவாதி என்று கைது செய்துள்ளது போலீஸ்!
அப்ப ... ஒபாமாவின் வாழ்த்து?
படிங்க ...நடந்தது இதுதான்....
வழக்கம் போல திங்கள்கிழமை (14-09-2015) பள்ளிக்கு வந்த மாணவன், தமது அறிவியல் ஆசிரியரிடம் தான் செய்த 'டிஜிட்டல்' கடிகாரத்தைக் காட்டினான். தன்னைப் பாராட்டுவார் என்று எதிர்பார்த்த மாணவனுக்கு ஆசிரியர் சொன்னது என்ன தெரியுமா? " நல்லா இருக்கு. இதை உன்னுடைய பையில் வைத்துக்கொள். என்னிடம் காட்டியது போல வேறு யாரிடமும் காட்டாதே..." என்று சொல்லிவிட்டார்.
இவனுக்கு ஒன்னும் புரியவில்லை...பையில் வைத்து பூட்டிக்கொண்டான். அடுத்து ஆங்கிலப் பாடம் வகுப்பில் நடந்து கொண்டிருக்கிறது.
"என்ன அங்கே Beep... சத்தம் வருகிறது?" ஆசிரியை தொடர்ந்து கேட்க, வேறு வழியின்றி, "என்னுடைய கடிகாரத்திலிருந்து வருகிறது" என்று சொல்லி, தன் பையைத் திறந்து காட்ட.....
அலறியடித்துக் கொண்டு ஓடிய ஆசிரியை நேராக தலைமையாசிரியரிடம் போய், "இந்த மாணவன் 'டைம் பாம்' வைத்திருக்கிறான். காப்பாற்றுங்கள் " என்று கதற...
உடனே காவல்துறைக்குத் தகவல் தரப்படுகிறது.
விரைந்து வந்து மாணவனிடம் இருந்த கடிகாரத்தைக் கைப்பற்றிய காவல்துறை. "ஆம், வெடிகுண்டாக இருக்கலாம்." என்று உறுதி செய்ய பள்ளிக்கூடம் எச்சரிக்கை மணியுடன் மூடப்படுகிறது.
அந்த மாணவன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல், அடுத்தடுத்த கேள்விகளை கேட்டு, "நாங்கள் சினிமாவிலேயே பார்த்திருக்கிறோம். இது வெடிகுண்டு தான்" என்று சொல்லி நான்கு போலீஸ் அதிகாரிகளால் உடனடியாக கைது செய்யப்படுகிறான்.
பிறகு அவன் வீட்டில் சென்று, சல்லடை போட்டுத் தேடுதல் வேட்டை நடத்தி, அவன் வைத்திருந்த மல்டி மீட்டர், Soldering Iron மற்றும் இதர Circuits, components என்று எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய்விட்டது போலீஸ்.
செய்வதறியாது திகைத்து நின்றனர் குடும்பத்தினர். நம்மூர் ஸ்டைலில் 'சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்று பள்ளி நிர்வாகமும் காவல்துறையும் கையை விரித்துவிட்டது. மனந்தளராத அம்மாணவனின் சகோதரிகள் உடனே டிவிட்டரில் ஒரு கணக்கினைத் தொடங்கி விசயத்தைச் சொல்லி நியாயம் கேட்டுப் போராட, ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவுக் குரல் ஒலிக்க, உடனடியாக ஒரு அமைப்பு வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து வாதாடி, மாணவன் குற்றமற்றவன். அவன் உண்மையிலேயே மின்னணுவியலில் ஆர்வம் கொண்டவன். அவன் இதுவரை வேறு பல கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறான் எனவும், அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தவுடன். காவல்துறை அவனை விடுவித்துள்ளது.
"அந்த மாணவன் ஒரு முஸ்லீம் என்பதால் தானே எந்தக் கேள்வியும் கேட்காமல் உடனே கைது செய்தீர்கள்?" என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு போலீஸ் என்ன பதில் சொன்னது தெரியுமா?
"அப்படித்தான் என்றும் சொல்லலாம்!"
தவறாக நடந்துவிட்டது என்றவுடன், அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் போன்ற அரசின் உயர் பொறுப்புகளில் இருப்போர் முதல், கூகுள், MIT பல்கலைக்கழகம் என்று, இந்த மாணவனை ஆதரித்தும். மன்னிப்புக் கோரியும். தங்கள் பள்ளியில் சேர்ந்து படிக்குமாறு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அழைக்கும் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.
சூடானில் இருந்து குடிபெயர்ந்த முஹம்மத் என்பவரின் மகன் தான் இந்த மாணவன் அஹ்மத். அறிவியல் கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். தனது பெற்றோர், சகோதரிகள் மற்றும் பாட்டியுடன் அமெரிக்காவில் வாழ்த்து வருகிறான்.
"என்னுடைய ஆராய்சி இந்த மனித குலத்திற்கு நன்மை பயப்பதாக இருக்குமே ஒழிய எந்நாளும் அழிவைத் தராது." என்று ஓங்கி ஒலிக்கும் அஹமதை ஆதரித்து உலகம் முழுவதும் IStandWithAhmed சமூக வலைத்தளங்களில் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்கும் போது (02:14 AM - IST ) ஒபாமாவின் ட்வீட் 1,80,000 ரீட்வீட் ஆகியிருந்தது. இதை ஒரு மணி நேரத்தில் முடிக்கும் போது 2,68,732 ரீட்வீட் ஆகியிருந்தது, இன்னும் இந்த எண்ணிக்கை உயரும்.
உயரும் எண்ணிக்கையெல்லாம் காரியுமிழ்வது அன்றி வேறென்ன?
- Rafeeq
No comments:
Post a Comment