Monday, January 27, 2014
இட ஒதுக்கீடா? தேவை சுயபரிசோதனை!
இடஒதுக்கீடு என்பது வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் 95 சதவிகித இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலனளிக்கக் கூடியது! அப்படியானால் பெரும்பான்மையான மற்றவர்களின் நிலை?
'பிறப்புரிமை' ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் உழைப்பாளர்கள் சிலரின் குரல்கள்:
தாம்பரம் நடைபாதை வியாபாரி:
"நம்மள மாதிரி ஆளுங்கதான் நிறைய பேரு பிளாட்பாரத்துல இருக்குறோம். காரணம் என்னன்னா வேற வாய்ப்புகள் இல்லாததுதான்"
மதுரை கொல்லன் பட்டறை தொழிலாளர்கள்:
"45 வருஷமா இதே தொழில்லதான் இருக்கோம். ரெண்டு நாளைக்கி வேலை பார்க்கலேன்னா எங்களுக்கு கஞ்சி இருக்காது. எங்க புள்ளைங்களை படிக்க வைக்க முடியல"
"எட்டாவது வரைக்கும் படிச்சுட்டு மேற்கொண்டு படிப்பை தொடர முடியாததால இந்த தொழிலுக்கு வந்துட்டேன். எங்க பொருளாதார சூழ்நிலை சரியில்லாததால எங்க குழந்தைகளையும் படிக்க வைக்க முடியல"
"50 வருஷமா இந்த தொழில் பார்க்குறேன். இத்தனை வருஷமா உழைச்சும் எங்க வவுறுதான் நெரஞ்சிருக்கே தவிர வேற முன்னேற்றம் எதுவும் கிடையாது"
"நான் அஞ்சாவது வரைக்கும் படிச்சிருக்கேன். அதுக்கு மேல படிக்க வசதி இல்லாததால இந்த வேலைக்கு வந்துட்டேன். என் அண்ணனும் அஞ்சாவதுதான் படிச்சிருககான். தம்பியும் அஞ்சாவதுதான் படிச்சிருக்கான்"
பீடி சுற்றும் பெண்மணிகள்:
"ராத்திரி பன்னிரண்டு மணி வரைக்கும் பீடி சுத்துவோம். மறுநாளும் பீடி சுத்துவோம். பிறகு நாலு மணிக்கு கொண்டு போய் கொடுப்போம். அதுல பத்து கட்டு பீடி ஒடஞ்சுடுச்சுன்னா எங்களுக்கு எதுவும் கிடைக்காது, கேட்டியளா? அன்னிக்கு உள்ள கூலி எங்களுக்கு கிடைக்காம போயிடும். வட்டிக்கு கடன் வாங்கித்தான் சமாளிக்கிறோம்"
"பீடி சுத்துறதால எங்களுக்கு நோய் ஏற்படுது. ரொம்ப கஷ்டமா இருக்கு. புள்ளைங்களும் வேலை செஞ்சு துட்டு வந்தாத்தான் எங்களுக்கு சமாளிக்க முடியும். புள்ளைங்க பள்ளிக்கூடத்துக்கு போயிட்டா எங்களுக்கு வர்ற துட்டு காணாது"
தாமும் படிக்காமல் போய் தம் பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இவர்களின் வார்த்தைகளில் ஒளிந்திருக்கிறது. தம் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே போராடிக் கொண்டிருக்கும் இம்மக்கள், உயர்கல்விக் கூடங்களிலும் அரசாங்கப் பணிகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் எந்தப் பலனையும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை முடித்தால்தானே இடஒதுக்கீட்டை பயன்படுத்தி உயர்கல்வி பயில முடியும்? பட்டினி கிடப்பவருக்கு பல் குத்த குச்சி கொடுத்தால் எப்படி?
கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் தலித்துகளை விடவும் மிகவும் பின்தங்கியிருக்கும் இந்திய முஸ்லிம் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்த இடஒதுக்கீடு மட்டுமே போதுமானதல்ல! இக்கட்டுரையின் பகுதி-2ல் குறிப்பிட்டதுபோல, இடஒதுக்கீட்டினால் சமுதாயத்திற்கு சிற்சில பலன்கள் கிடைக்கும் என்றாலும் அந்தப் பலன்கள் பெரும்பாலானோரை சென்றடைய வேண்டுமெனில் சில அடிப்படையான காரியங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
முதலாவதாக, பெரும்பான்மையான முஸ்லிம்களின் அத்தியாவசியத் தேவைகள் என்னென்ன என்பதை கண்டறியவும், அவற்றிற்கு இஸ்லாம் காட்டும் வழியில் தீர்வு காணவும் சமுதாயம் தன்னை ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த முயற்சியில் கமிஷன் அறிக்கைகள் தரும் தகவல்களை ஆதாரங்களாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அவற்றின் பரிந்துரைகளை செயல்படுத்துவதால் மட்டுமே சமுதாயம் முன்னேறி விடும் என்று எதிர்பார்ப்பது தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பானது.
அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் 2 அல்லது 3 சதவிகிதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கும் சச்சார் கமிஷன் அறிக்கை, நாட்டின் நிர்வாக அமைப்பில் பங்குபெறுவதில் முஸ்லிம்கள் இவ்வாறு பின்தங்கியிருப்பதன் முக்கிய காரணம் கல்வித்துறையில் அவர்கள் வெகுவாக பின்தங்கியிருப்பதுதான் என்றும் சுட்டிக் காட்டுகிறது.
கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாம் வலியுறுத்தியதைப்போல வேறெந்த மதமோ கொள்கைகளோ வலியுறுத்தியதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயக் கடமையாகும்." (இப்னு மாஜா). அன்றாட வயிற்றுப்பாட்டிற்கே சிரமப்படும் பெற்றோராக இருந்தாலும் அவர்களும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதாலேயே 'எங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை' என்று வருந்துவதை காண முடிகிறது.
வசதியின்மையால் படிக்க முடியாமல் போன தந்தை குறைந்த வருமானம் கிடைக்கும் கஷ்டமான வேலை அல்லது தொழிலில் ஈடுபட நேரிடுகிறது. அதில் கிடைக்கும் வருமானம் அன்றாட குடும்பத் தேவைகளுக்கே போதாத நிலையில் பிள்ளைகளும் பள்ளிக்கூடத்தை மறந்து வேலை செய்து பொருளீட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அந்தப் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்களும் அவர்களின் பிள்ளைகளும் மீண்டும் அதே சுழலில் மாட்டிக் கொண்டு விடுகின்றனர். இந்த மாயச்சுழலை விட்டும் அவர்களை வெளியே வரச் செய்ய வேண்டும் என்றால் பிள்ளைகளை தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கத் தோதுவான சூழலை பெற்றோர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
பெற்றோரின் வருமானம் உயரவும், வேலை பார்க்கும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதால் அவர்களின் குடும்ப வருமானத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கும், பிள்ளைகளின் படிப்புச் செலவுகளை சமாளிக்கும் வகையிலும் நிதியுதவிகள் செய்யப்பட வேண்டும்.
இதற்கு இஸ்லாம் வழங்கும் தீர்வு ஜகாத்!
தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்..
கட்டுரை: சகோதரர் சலாஹுத்தீன்
< பகுதி-2
Source : http://www.satyamargam.com/
----------------------------------------------------------------
இதனை கிளிக் செய்து படியுங்கள் இட ஒதுக்கீடு தீர்வாகுமா?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//இட ஒதுக்கீடா? தேவை சுயபரிசோதனை//
மட்டமான கட்டுரை.
//95 சதவிகித இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலனளிக்கக் கூடியது//
அப்பட்டமான பொய்த்தகவல்.
இதுபோன்ற அரைவேக்காட்டு கட்டுரைகளை பொதுத்தளத்தில் வைப்பதால் ஏற்படும் நஷ்டங்களை அறியாமல் இது வெளியிடப்பட்டுள்ளது.
தயவு செய்து இப்பதிவை நீக்குவதன் மூலம் சமுதாயத்துக்கு உதவுங்கள்.
Post a Comment