Wednesday, November 12, 2014

எண்ணங்களும், நிய்யத்துக்களும் வெறுமை எண்ணங்களாக, மனதில் பதியாத நிய்யத்துக்களாகவேதான் நம்மில் பெரும்பான்மையினருக்கு !

பாவம், சோற்றுக்கு முழிக்கும் ஒரு பூனையும், வயிற்றுக்கு பிழைக்கும் ஒரு விறகு வெட்டியும் !
இன்று காலை, ஆஃபீஸுக்கு புறப்படும் நேரம், கடைசி ஏணிப்படிகளில் நடந்து கீழ் தளத்தை அடைந்து, அங்கிருந்து வெளியே புறப்படும் நேரம், எதிர்த்தாற்போல், இடது பக்கத்தில் பெரிய குப்பை பக்கட்டை காலி செய்து விட்டு அதை தோளில் சுமந்து கொண்டு வரும் குப்பைக்காரன், வலது பக்கத்தில், அப்படியே அடுப்புக்கரி கொண்டு தேய்த்து விட்டது போல், அத்தனை கருப்பாக ஒரு கரும்பூனை, சொல்லி வைத்தது போல், கொஞ்சம் சைடு எடுத்து கரெக்ட்டா நேர் குறுக்காக பாய்ந்து போகிறது, எப்படி இருந்திருக்கும் என் மனநிலை, எப்படியும் இருந்திருக்கவில்லை என்பதுதான் எந்த வியாதியும் பிடிக்காத என் புத்தி !
இவர்களின் சகுனமே என் புறப்பாட்டின் கோலம் என்று சொல்ல வருவது, சகுனம் குறித்து நான் கவலை கொண்டு சொல்ல வருவதான பொருள் அல்ல, மாறாக; இதை படிப்பவர்கள் சகுனம் என்ற ஒன்று குறித்துதான் நான் சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டி மட்டுமே!

ஒரு முஸ்லிமானவனின் எல்லா சிறிய, பெரிய செயல்களிலும், அத்தனை நடவடிக்கைகளிலும்; அவன் கொண்டிருக்கும் இறை சார்ந்த வாழ்நாள் நம்பிக்கையின் உறுதியும், இறைவன் மீது அவன் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும் எல்லா சந்தர்ப்பங்களிலும் மிகத் துல்லியமாக வெளிப்பட்டு விடும் நிலையில்தான், ஈமானும் இஸ்லாமும் அழகிய முறையில் எங்கும் எதிலும் ஆட்சி புரிய முடியும் !

இவ்வளவு சிறிய ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக எடுத்துச் சொல்ல வருகிறேன் என்றால், ஒரு வக்து தொழுகையை விடாத பயபக்தியான நிலையும், அதற்கேற்றார்போல் எல்லா அம்சங்களையும் ஒருங்கே பெற்றிருக்கும், பார்த்தவுடன்தானே, இவர் ஒரு உண்மை? முஸ்லிம்தான் என்று பறைசாற்றும் விதத்தில் நிறைய நண்பர்கள் இருக்கும் நிலையில், இதுபோன்ற சில்லறை விஷயங்களில், அவர்களில் பெரும்பான்மையினர் தயக்கம் காட்டுவதும், அதை தொடர்ந்த சில வேண்டாத பின்கால் எட்டுக்களும், இரண்டு பக்கமும் காறித் துப்புவதும், திரும்பவும் வீட்டின் தலைவாசலைத் தாண்டி உள்ளேயே போய் விட்டு மீண்டும் புறப்பட்டு போவதும் அன்றாட காட்சிகளாக இருந்து கொண்டிருக்கின்றனவே, இதை எல்லாமும் மீறி அந்த நாள் முழுக்க மன சஞ்சலம் வேறு !

ஒரு கரும்பூனையும், தோளில் கோடாலி சுமந்த ஒரு விறகு வெட்டியும், பிழைப்பைப் பார்க்கும் ஒரு எண்ணெய்காரனும், பேரனை பள்ளிக்கு கூட்டிச் செல்லும் ஒரு விதவை தாயும், இறைவனின் நாட்டப்படி புறப்பட்டு போகும் உங்களை, எதிர்பட்ட இவைகளினாலெல்லாம்; அதிலிருந்து அப்புறப்படுத்தி, புறப்பட்ட காரியத்தை நிர்மூலமாக்கி விடக்கூடுமோ என்று நினைக்கும் துளி அளவு சந்தேக எண்ணம் கூட, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துவு என்று நீட்டி முழக்குகிற அந்த அழகிய முதல் தகுதியைக் கூட, மானசீகமாய் நம்மிடமிருந்து தட்டிப் பறித்துக் கொள்கிறது என்று இங்கு நான் சொல்ல வருவதை, சரிதான் அது, என்று என்னோடு உடன்பட இங்கே எத்தனை பேர் தயாராக இருக்க முடியும்? எண்ணங்களும், நிய்யத்துக்களும் வெறுமை எண்ணங்களாக, மனதில் பதியாத நிய்யத்துக்களாகவேதான் நம்மில் பெரும்பான்மையினருக்கு !

பேசாமே நாமெல்லாம் போயி பொழக்கிற வேறு ஏதாவது வேலையைப் பார்க்கலாம், அப்பதான் இன்றைக்கு வயிறு நிறையும், சோறு கிடைக்கிற பொழப்புதான் நமக்கு முக்கியம், மற்றதெல்லாம் கிடக்கட்டும், “முதலில் சா..ப்..பா..டு, அப்புறமா பே..ச..லா..மா” என்று, உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தாய்லாந்து சொம்சாய் திக்கி திணறி எம்.ஜி.ஆரிடம் சொல்வாரே, அது நமக்காக சொல்லி வைக்கப்பட்ட வார்த்தை என்று இப்போதுதான் புரிகிறது !!

Raheemullah Mohamed Vavar

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails