Saturday, November 15, 2014

பாங்கோசை / - கவிஞர் அப்துல் கையூம்

 பாங்கோசை

நான் முதன் முறையாக மதினா சென்றபோது நள்ளிரவு மணி ஒன்றாகி விட்டது. “பைத்துன் நபவி” பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள இருப்பிடம் இதுவென்று சொல்லி எங்களை ஒரு ஹோட்டலில் இறக்கி விட்டார்கள். விடியற்காலை தொழுகைக்கு கிளம்பினோம். பள்ளிவாசலுக்கு எப்படி போவது? வழி தெரியாதே என்ற கவலை எனக்கு. ரிசப்ஷனில் வீற்றிருந்த எகிப்து நாட்டு பேர்வழியிடம் அப்பாவித்தனமாக “பள்ளிவாசலுக்கு எப்படி போக வேண்டும்?” என்று விசாரித்தேன். என்னை  அவர் ஒருமாதிரியாக ஏற இறங்க பார்த்தார். “விளங்காதவானாக இருப்பான் போலும்” என்று மனதிற்குள் அவர் என்னைப் பற்றி. நினைத்திருக்கலாம். “எல்லோரும் எப்படி போகிறார்களோ அப்படி போனால் போதும் பள்ளிவாசல் வந்து விடும்” என்றார். ஹோட்டலை விட்டு வெளியே வந்து பார்த்தபின்தான்  நான் இந்த கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை உணர்ந்தேன். காரணம், சாரை சாரையாக செல்லும் ஊர்வனங்கள் போல  ஆயிரக் கணக்கில் அன்பர்கள் பள்ளிவாசலை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நானும் என் குடும்பத்தாரும் நேராக பள்ளிவாசல் சென்றடைந்தோம். அந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டபோது என் மனதில் உதித்த கவிதை இது:
இம்சைகள் இல்லை

இழுபறி இல்லை

அச்சுறுத்தல் இல்லை

அடாவடித்தனமில்லை


கண்டிப்பும் இல்லை

கடிவாளமும் இல்லை

கைப்பிடித்து இழுப்பாரில்லை

கழுத்தைப் பிடித்து தள்ளுவாரில்லை


இளங்காலைப் பொழுதில்

இனிமையான ராகத்தில்

இதயத்தை வருடும்

இங்கித அழைப்பு

இது ஒன்றேதான்!


என் கண்முன்

என்னமாய் ஓரு ஜனத்திரள்?

இதற்கே  இப்படியோர் 

இதமான ஈர்ப்பென்றால்

அந்த பிலாலின் குரல்?


நினைத்தாலே இனிக்கும்

வரலாற்றுச் சகாப்தம்!

நெஞ்சைக் குளிரவைக்கும்

பனிமழை மூட்டம்!!


அதற்கு அளிக்கப்பட்டதோ

சுவன நுழைவுக்கான

அத்தாட்சி பத்திரம்!!


எண்ணங்கள் பின்னோக்க

எனக்குள் பரவசம்!!


அதோ…

காற்றின் சுகந்தத்தில்

கமகமக்க கலந்துவரும்

கஸ்தூரி வாசம்


எழுகின்ற ஒலிகளில்

என்னே இறக்கம்,  ஏற்றம்?

செவிமடுத்தோர் உள்ளங்களில்

செய்திடும் ரசாயன மாற்றம்


இழைந்தொழுகும் இராகம்

இதயத்தை பிழியும்!

மயிலிறகால் தடவியதுபோல்

மனதை வருடும்!!


அதிர்வேட்டுக்கு

ஆர்ப்பரித்தெழும்

அழகான புறாக்களைப்போல

எதிர்திசையில் செல்கிறது

எல்லோர் பாதங்களும்


புற்றீசல்களாய்

புனிதம் காண

புறப்படும்

மனித தலைகள்!


தலைகளா அல்லது

அலைகளா  என நம்மை

சிலையாக்கும் நிலைகள் !


ஒரு குடையின் கீழ்

ஒரே தலைமையின் கீழ்

ஒருசேர, அணிசேர

ஒரு லட்சம் பேர்கள்!


படைத்தவனுக்கு

பணிவான சமர்ப்பணம் செய்ய

படையெடுக்கும் படைப்பினம்


அவர்களின் இந்த

பதட்டமில்லா அவசரம் - நம்மை

அசரவைக்கிறது ஒருகணம்.


ராணுவக் கட்டுப்பாடாய்

ஆணைகளில்லா அணிவகுப்பு!

கட்டுக்கோப்பான மார்க்கத்தின்

கண்ணியம்சேர் சிறப்பு!!


அமைதி மேவும் மதினாவில்

அனுதினமும் இந்த

அமைதிப் புரட்சி!


அப்துல் கையூம்
- கவிஞர் அப்துல் கையூம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails