வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அதிகாரங்களுக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே !
தன்னிடம் எல்லா அதிகாரமும் இருக்கிறது என்பதற்காக ஆர்ப்பாட்டங்கள் எதுவும் செய்யாதவன் .
அவன்....
மனிதர்களை தனது பிரதிநிதிகளாக படைத்து மண்ணுக்கு அனுப்பி வைத்து அவர்களில் சிலருக்கு ஆட்சி அதிகாரங்களையும் வழங்கி இருக்கிறான்.
அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு தெளிவான வேதவிளக்கங்களையும் தந்திருக்கிறான்!
ஆனால்...
மனிதர்கள் பெரும்பாலும் இறைக்கட்டளைகளை மதிப்பதேயில்லை.
சாதாரண நிலையில் இருப்பவர்கள்கூட பதவி கிடைத்தவுடன் பணம் புகழ் என்ற போதைகளுக்கு அடிமைகளாகி குடிசை வாழ்வை மறந்து கோட்டை வாழ்வே நிரந்தரம் என்று மாறி விடுகிறார்கள்.
ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தவுடன் தாங்கள்தான் மன்னாதி மன்னர்கள் தாங்கள் வைத்ததே சட்டம் என ஆட்டம் போடுகின்றனர்.
இதற்கு மாற்றமாக வாழ்ந்துகாட்டி வரலாற்றில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்
முஹம்மது ரசூலுல்லாஹ் ( ஸல் )அவர்களே!
அவர்கள் ...
அல்லாஹ்வின் திருத்தூதர் !
அகிலத்தின் அருட்கொடை !
மனித குலத்திற்கே அழகிய முன்மாதிரி !
அரபு நாடு ஏக இறைக் கொள்கையில் இணைந்து இஸ்லாமியக் கொடியை பட்டொளி வீசி பறக்கவிட்டபோது அந்த
இஸ்லாமியப் பேரரசின் பேரரசராக இருந்தவர் நபிகள் ( ஸல் ) அவர்கள்.
ஆனாலும் ....
அவர்கள் வாழ்ந்தது மண்குடிசையில் !
ஆட்சி நடத்தியது தங்கள் வீட்டுத் திண்ணையில் !
பல பேரரசுகளும் ஏராளமான சிற்றரசுகளும் அவர்களோடு அமைதி ஒப்பந்தம் செய்து ...
அவர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ....
கப்பம் கட்டி வந்த நிலையிலும்
மனித குலத்தின் அந்த மாபெரும் தலைவர் முஹம்மது ( ஸல் ) அவர்கள்
தடம் புரளவில்லை !
ஆணவம் அவர்களின் அருகிலேயே வரவில்லை !
பெருமை அவர்களைப் பார்த்து பெருமை கொண்டதேத் தவிர பெருமானாரை தொற்றிக் கொள்ளவில்லை !
நபிகளாரின் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தங்களும் ஆலோசனைகளும் மரங்களின் மடிகளிலேயே நடைபெற்றன !
உலகத்துச் செல்வங்களை எல்லாம் அவர்களின் காலடியிலே கொண்டு வந்து கொட்டுவதற்கு எத்தனையோ மாமன்னர்கள் வரிசையில் நின்றபோதும்
எதையும் ஏற்காதவர் மஹ்மூது நபிகள்பிரான்!
வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களை
பட்டினியோடு கழித்தவர் நபிகள் !
பசியின் கொடுமை முதுகை வளைத்துவிடக் கூடாது என்பதற்காக அடிவயிற்றில் நாலைந்து கற்களை கட்டிக் கொண்டு பொறுமை காத்த பேரரசர் !
புண்பட்டுக் கிடந்த மண்ணுலகை தங்களுடைய
எளிமை
பொறுமை
வாய்மையினால் பண்பட்டு மலரச் செய்தவர் !
மண்ணுலக வாழ்வு நிறைவுபெற்று விண்ணுலகப் பயணம் மேற்கொண்டபோது ....
அந்த மாபெரும் மாண்பாளரின் இல்லத்தில் அன்றிரவு விளக்கு ஏற்றிவைக்க எண்ணெய் வாங்குவதற்குக்கூட காசில்லை !
நபிகள் பெருமானார் என்ன சாதாரண மனிதரா?
அவர்கள் ...
இறைவனின் தூதர் !
அரபுலகின் அரசர் !
அவர்கள் விரும்பியிருந்தால்
அரண்மனை வாழ்க்கை ...
ஆபரணங்கள் ...
அறிவை மயக்கும் அமுத பானங்கள் ...
அறுசுவை உணவு ...
ஆடம்பர சுகங்கள் ...
அத்தனையும் அவர்களின் மடியிலே
கொஞ்சி குலாவியிருக்கும் !
ஆனால்...
ஒரு ஆட்சியாளர் எப்படி வாழவேண்டும் என்பதை
ஒரு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருந்து
வாழ்ந்து காட்டியவர் வள்ளல் நபிகள் !
அதனால்தான் ....
அவர்களின் வாழ்வு
புகழ் எனும் அரியாசனத்தில் நிரந்தரமாய் வாழ்கிறது !
அதைப்போன்றதொரு சரியாசனம்
உலகில் யாருக்கும் இதுவரை வாய்த்ததில்லை !
அவர்களின்
அருள்வாழ்விலிருந்து இன்றைய அரசியல் வாதிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் !
அப்படி கற்றுக் கொண்டால் ...
வழக்குகள் வராது !
தண்டனைகள் தொடாது !
சிறைக்கொட்டடிகளே இருக்காது !
கட்டரை ஆக்கம்
அபு ஹசீமா வாவர் Abu Haashima
*****************************************************************8
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்-குர்ஆன் 21: 107)
No comments:
Post a Comment