Friday, October 17, 2014

மனித நேயத்திற்கு இன்னொரு பெயர் தபஸ்ஸும்!

ஹெச்.ஐ.வி என்ற பெயரைக் கேட்டாலே, காத தூரம் தள்ளி நிற்போர் பெருகி விட்ட இந்த கால கட்டத்தில் எயிட்ஸ் நோயாளிகளை அருகிலிருந்து பரிவுடன் கவனிப்பது ஒரு சவாலான விஷயம் தான்.

சவாலுக்குச் சொந்தமான பெண்ணின் பெயர், தபஸ்ஸும்!

அந்த சம்பவம் நடந்து ஏறத்தாழ பத்து வருடங்கள் ஆகி விட்டன. தபஸ்ஸுமுடைய நெருங்கிய தோழி ஒருத்தி திடீரென எயிட்ஸ் நோய் பாதிப்பினால் இறந்து போனார். அதுவும் டாக்டர்கள் ஹெ.ஐ.வி  பாஸிட்டிவ் என அறிவித்த இரு நாட்களுக்குள்ளேயே...
இந்த திடீர் மரணத்தில் தபஸ்ஸும்-க்கு அதிர்ச்சியளித்தது, தோழியின் குடும்பத்தினர் இறுதி மூச்சு நிற்கும் வரை அவள் அருகில் செல்லாதது தான். தன்னந்தனி ஆளாகவே, மரணித்த தோழிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

சடங்குகளைச் செய்து முடித்த கணத்தில், தபஸ்ஸுமின் மனதில் பெரும் மாடி கட்டிடம் ஒன்று சட சடவென்று சரிந்து விழுந்தது போன்று, மனநிலையில் ஒரு பெருத்த மாறுதல்கள் ஏற்பட்டன. அதிகம் யோசிக்காமல் ஒரு முடிவுக்கு வந்தார்.

இறந்த தோழி போன்றே அநாதரவாய் விடப்பட்டோர் ஏராளம் என்பதை அறிந்த தபஸ்ஸும், ஹெ.ஐ.வி பாஸிட்டிவ் என்று அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்ட சிறுமிகளுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்தார்.

    அரசியல் காரணங்களுக்காக மதவெறிப் பித்து ஏற்றப்பட்டும் இன்றைய சூழலில், இந்து-முஸ்லிம் என்ற பாகுபாடுகள் இன்றி, எவ்வித சத்தமும் இன்றி, இந்து பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து பராமரித்து வரும் தபஸ்ஸுமின் மனித நேயம் வாழட்டும்!

சமீபத்தில் "பெங்களூர் மிரர்" இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

"கடந்த பதினான்கு வருடங்களாகவே கர்ப்பிணிப் பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் சேவை செய்து வருகிறேன். என் தோழியின் மறைவும் அப்போது கண்ட மனிதர்களின் சுபாவமுமே என் வாழ்க்கையை மாற்றிப் போட்டது!

நான் மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றாலும், SSLC யில் முதன்மை மதிப்பெண்களைப் பெற்றேன். தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால், என் குடும்பம் இருந்த நிலையில் அதற்கு சாத்தியமில்லாமல் இருந்தது.

ஆனாலும், மிகவும் சிரமப்பட்டு PUC வரை படித்துவிட்டேன். அச்சமயத்தில் எனக்கு திருமணமும் செய்து வைத்தனர். திருமணத்திற்குப் பிறகும் கல்வியின் மீதிருந்த தாகம் எனக்குத் தீரவில்லை. இளநிலை பட்டம் பெற்று அரசு சாரா நிறுவனத்தில் பணி புரிந்தேன்.

கட்டுப்பாடுகள் கொண்ட என்னுடைய குடும்ப சூழலில், ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு NGO க்களில் பல்வேறு தரப்பட்ட மக்களுடன் வேலை செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. என்னுடைய குடும்பமும் இதனை எதிர்த்தது. நானும் போராடியே முன்னேறினேன்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக வேலை செய்வது எனக்கு மிகவும் பிடித்து விட்டதால், இன்று வரை இப்பணியிலேயே தொடர்கிறேன்.

இப்பணியை ஒரு சவாலாக எடுத்து மேற்கொண்டு முன்னேறியுள்ளேன். ஸ்நேகதீப் என்ற பெயரில் இரு வருடங்களாக, பாதுகாப்பு மையம் ஒன்றினை உருவாக்கியுள்ளேன்.

இச்சேவைக்கு பெருக வேண்டிய ஆதரவுக்கு மாற்றாக, ஆச்சரியப்படத்தக்க வகையில் பெரும் எதிர்ப்புகளையே இன்றுவரை சம்பாதித்து வருகிறேன். ஆனாலும், இதில் எனக்கு வருத்தமில்லை.

ஸ்நேகதீப் பாதுகாப்பு மையத்தில், ஏழு வயது முதல் பனிரெண்டு வயதுடைய 14 இந்து பெண் குழந்தைகளை நான் பராமரித்து வருகிறேன் என்று சொல்வதில் சந்தோஷப்படுகிறேன்.

ஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் தீண்டிவிடும் சூழலில் அவர்களை உதாசீனம் செய்வது போன்ற கொடுமையான செயல் வேறு இருக்க முடியாது. இக் குழந்தைகளின் குடும்பத்தினர் கூட இவர்களை விட்டு மரணிக்கும் வரை தூரமாக விலகி இருப்பதையே விரும்புகின்றனர். இதையெல்லாம் உணரும் இக்குழந்தைகள், உடல்நலம் குன்றி பாதிக்கப்படுவதைக் காட்டிலும் மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டு அவஸ்தைக்குள்ளாகின்றனர்.

விரைவில் தாங்கள் மரணித்து விடுவோம் என்பதை நன்கு உணர்ந்த நிலையில் இவர்கள், புதிய மருத்துவம் ஏதும் வந்து உயிர் பிழைத்து விட மாட்டோமா என்று ஏங்குவதைப் பார்த்தால் எவருக்கும் மனம் ரணமாகி விடும். இந்த சூழலில் இவர்கள் மனதை கல்வி, வாசிப்பு என்று ஒருநிலைப்படுத்துவது மிகவும் சிரமமான செயல்.

இவர்களின் இறுதி மூச்சு நிற்கும் வரையிலும் இவர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்து இறுதிச் சடங்குகளைச் செய்வேன். ஒவ்வொரு குழந்தையும் என் கரங்களில் மரணிக்கும் போதும் எஞ்சியிருக்கும் குழந்தைகளில் இக்குழந்தையின் மரணமே இறுதியாக இருக்க வை இறைவா என்று பிரார்த்திப்பேன்.

ஞாயிற்றுக் கிழமைகளில், நானிருக்கும் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று உதவி கேட்பேன். ஒரு பாக்கெட் பிஸ்கெட்டைப் பெற்றாலும் அது மிகப் பெரிய உதவியாக இருக்கும். குழந்தைகளின் உணவுக்காக நிதி திரட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது.

உலகில் வேறெங்கும் கிடைக்காத மன அமைதி மனிதர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு உதவுகையில் எனக்கு கிடைக்கிறது. என்னுடைய சமீபத்திய மகிழ்ச்சி என்ன தெரியுமா? மரணிக்கவிருக்கும் ஒரு குழந்தை தனது PUC இல் 92% வாங்கியிருக்கிறாள்" என்று முடித்தார் தபஸ்ஸும்.

மனிதநேயம் கொண்ட நல்லுள்ளங்கள் தபஸ்ஸும் நடத்திவரும் பாதுகாப்பு மையத்திற்கு உதவ விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0091 - 99640 24655

அரசியல் காரணங்களுக்காக மதவெறிப் பித்து ஏற்றப்பட்டும் இன்றைய சூழலில், இந்து-முஸ்லிம் என்ற பாகுபாடுகள் இன்றி, எவ்வித சத்தமும் இன்றி, இந்து பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து பராமரித்து வரும் தபஸ்ஸுமின் மனித நேயம் வாழட்டும்!

முஸ்லிம்கள் கடைகளில் இந்துக்கள், பொருட்கள் வாங்க வேண்டாம். முஸ்லிம்களுடன் வர்த்தக உறவுகள் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அப்பாவி இந்துக்களுக்கு மதவெறியூட்டி வரும் ஹிந்துத்துவ சக்திகள், தபஸ்ஸும் இந்து குழந்தைகளிடம் காட்டி வரும் பரிவைக் கண்டு வெட்கித் தலை குனியட்டும்!

- அபூ ஸாலிஹா
நன்றி : http://www.satyamargam.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails