அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி ,வ பரக்காதுஹு
அல்ஹம்துலில்லாஹ்.
கால் நூற்றாண்டினைக் கடந்து இருபத்துஆறாம்ஆண்டில் எம் நிறுவனம்.
-------------------------------------------------------------------------------------
நவம்பர் 1ந் தேதி என் வாழ்நாளின் மறக்க முடியாத ஒரு நாள். அல்லாஹ் நாடினால் ஒரு மனிதரின் வாழ்க்கையை திசை மாற்றி அவனை மேலோங்க செய்ய முடியும் என்பதை எனக்கு உணர்த்திய நாள். ஆம். இன்று தான் புரபஷனல் கூரியர் என்ற நிறுவனத்தின் முகவராக பத்துக்கு பத்து சதுர அடி அறையில் அலுவலகம் திறந்தேன். அன்றைய நாளில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்தேன். பதினைந்து ஆண்டு காலம் அரபி மதரஸாக்களில் ஆசிரியராக பணியாற்றினேன். மதரசாவில் ஆசிரியராக பணியாற்றியதில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் மதரஸா வாழ்க்கையில் இருந்து வெளியேறிய நான் வெளிநாடு செல்லலாம் என்று எண்ணிய பொழுது உங்கள் தகுதிக்கு ஏற்ற பணிகளுக்கான விசா இப்பொழுது இல்லை என்றும் எனவே நீங்கள் ஊரிலேயே தொழில் செய்யுங்கள் நாங்கள் அதற்கு உதவி செய்கின்றோம் என்றும் என் நண்பர்கள் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
அது தொடர்பாக என் மீது பற்று கொண்டு என்னுடைய எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் பாராட்டியும் விமர்சனம் செய்தும் எனக்கு ஊக்க படுத்திய நீடூர் சிந்தனை சித்தர் அல்ஹாஜ்.ஏ.எம்.சயீது அண்ணன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். நீங்கள் தொழில் செய்வதாக இருந்தால் one time investment செய்து service oriental தொழிலை செய்வது தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.நீங்கள் எழுதிய நூலை பதிப்பித்து வெளியிடுவது அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து அடுத்த நூல் வெளியிடுவது போன்ற பதிப்பக தொழிலில் நீங்கள் ஈடுபடலாம் என்று சொன்னார்.
நான் டிராவல்ஸ் ஆரம்பிக்கலாமா? என்று கேட்டேன். அதுவும் நல்ல தொழில்தான் எனினும் மிகவும் கவனமுடன் செய்ய வேண்டிய தொழில் என்று சொன்னார்.
நீடூர் நண்பர்களின் உதவியால் கிரசன்ட் டிராவல்ஸை சிதம்பரத்தில் ஆரம்பித்தேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக அரபி மதரசா என்ற வட்டத்துக்குள் சுழன்று கொண்டிருந்த எனக்கு வியாபார நெளிவு சுழிவுகள் தெரியாத காரணத்தால் மூன்று ஆண்டுகள் ஆகியும் தொழிலில் ஒரு முன்னேற்றத்தை என்னால் காண முடியவில்லை. இந்நிலையில் தான் வெறும் 500 ரூபாய் டெபாசிட் செய்து புரபஷனல் கூரியரின் சிதம்பர தாலுக்காவிற்கான முகவர் ஆனேன். நான் கூரியரை ஆரம்பித்த பொழுது கூரியர் என்றால் என்னவென்று படித்தவர்களுக்கே தெரியவில்லை. ஒரு பேராசிரியர் என்னிடம் கூரியர் என்றால் என்னவென்று கேட்டார்.
அவருக்காகவே, பண்டை கால தகவல் தொடர்பின் மறு வடிவமே கூரியர் என்ற தலைப்பில் ஒரு நோட்டிஸ் அடித்தேன்.
அதில்,
“பண்டை காலங்களில் ஒரு ஊரிலிருந்து ஒருவர் கடிதங்களை எடுத்து கொண்டு அடுத்த ஊரின் எல்லை வரை எடுத்து செல்வார். அங்கே ஒருவர் அதனை எடுத்து கொண்டு அந்த ஊரில் பட்டுவாடா செய்ய வேண்டிய கடிதங்களை அங்கே பட்டுவாடா செய்துக்கொண்டே அடுத்த ஊர் எல்லை வரை செல்வார்.அங்கிருந்து இன்னொருவர், இது போன்று தான் தகவல் தொடர்பு அந்த காலத்தில் நடை பெற்றது. இன்றைய கால கூரியர் சர்வீஸும் ஏறக்குறைய அதே போன்று தான்.” என்று விளக்கினேன்.
அதன் பின், முதல் மூன்று ஆண்டுகள் லாப,நஷ்டம் இல்லாமல் நடைபெற்ற கூரியர் சர்வீஸ் அதற்கு பின்னால் வேகமாக முன்னேறியது. எங்களின் இயக்குனர் மரியாதைக்குரிய எஸ்.அஹ்மது மீரான் அவர்களின் கடும் முயற்சியாலும் திட்டமிட்ட வழிக்காட்டுதலாலும் என் அலுவலக ஊழியர்களின் ஒத்துழைப்பாலும் புரபஷனல் கூரியர் மிக குறுகிய காலத்திலேயே பெரிய வளர்ச்சி அடைந்தது. அதனுடன் இணைந்து நானும் பொருளாதார ரீதியில் வளர்ந்தேன். பத்தாம் ஆண்டு கார் வாங்கினேன். பதினொன்றாம் ஆண்டு ஹஜ்ஜிற்கு சென்றேன். பன்னிரெண்டாம் ஆண்டு வீடு கட்டினேன்
அல்ஹம்துலில்லாஹ். மாஷா அல்லாஹ் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்.
இந்த நேரத்தில் 1974 ஆம் ஆண்டை நினைத்து பார்க்கிறேன். நீடூர் மதரசாவில் ஆசிரியராக இருந்த நான் பெருநாளைக்கு புதிய சட்டை எடுப்பதற்கு கூட பணம் இல்லாமல் தவித்தேன். என் நெருங்கிய நண்பர்களிடமிருந்தே தவிர வேறெந்த செல்வந்தரிடமும் நான் உதவி கேட்கும் வழக்கமில்லை . ஃபாத்திஹா, மவ்லுது போன்றவைகளை பெரும்பாலும் நான் தவிர்த்து விடுவேன். எனவே என்னிடம் எந்த சேமிப்பும் இல்லை வந்த சம்பள பணத்தில் என் மனைவிக்கு ஆடை எடுத்து கொடுத்து விட்டேன் . விடிந்தால் பெருநாள். மஃரிபு நேரத்தில் ஒரு நண்பர் என்னிடம் இருபது ரூபாய் பணம் கொடுத்தார். அதை எடுத்து கொண்டு ரெடிமேடு கடைக்கு சென்ற பொழுது பதினைந்து ரூபாய்க்கு குறைந்து சட்டை இல்லை. தொள தொள வென இருந்த அந்த சட்டையுடனே பெருநாள் கொண்டாடினேன். அல்லாஹ் இன்று எனக்கு ஒரு பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கிறான். குழந்தை செல்வங்களுடன் பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் மிக கண்ணியமாக வாழ்கிறேன்.
மீண்டும் அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.
இந்த நேரத்தில், நான் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உறுதுணையாக இருந்த இப்போதும் இருக்கின்ற என் உடன் பிறவா சகோதரர்கள் நீடூர்எஸ்கொயர் எஸ்.ஏ.சாதிக், எஸ்.ஏ.இக்பால், இ.ஏ.வதூத், ஷரஃப் பிரதர்ஸ் அன்சாரி, ஜர்ஜிஸ் ஆகியோருக்கும் குறிப்பாக என் குடும்பத்தின் அங்கமாகி விட்ட நீடூர் மதரஸாவில் என் மாணவனாக இருந்து தற்பொழுது பேங்காக் நாமி தாய் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸின் உரிமையாளராக இருக்கும் மவ்லவி.ஹாஃபிஜ் பி.ஐதுரூஸ் நாமி மிஸ்பாஹி க்கும் நான் நன்றி கடன் பட்டவனாக இருக்கின்றேன்.
இந்த நேரத்தில் புரபஷனல் கூரியர் முகவராக எனக்கு வழிகாட்டிய
மயிலாடுதுறை புரபஷனல் கூரியரின் உரிமையாளார் நண்பர் சங்கர் அவர்களுக்கும் ,எங்களின் இயக்குனர் அல்ஹாஜ் ,அஹமது மீரான் சார் அவர்களுக்கும் ,எங்களின் முதன்மை மேலாளர் முஹ்யித்தின் கனி சார் அவர்களுக்கும் ,என் அலுவலக முதல் மேலாளர் சாதிக் பாட்ஷாவிற்கும்,என்னுடைய அலுவலக ஊழியர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
அவர்களுக்காக துஆ செய்கிறேன்.
இங்கே இதனை பதிவு செய்ததின் நோக்கம் அல்லாஹ் நாடினால் யாரை வேண்டுமானாலும் உயர்த்துவான் என்பதனையும் இறைவன் உனக்கு அளித்த அருட்கொடைகளை நீ பகிரங்கப்படுத்து என்ற திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையிலும் என் நண்பர்கள் செய்த உதவியை மற்றவர்களுக்கு எடுத்து காட்டுவதற்காகவும் தான்.
அல்லாஹ் எனக்கு கொடுத்த பொருளாலும் நான் கற்ற கல்வியாலும் இஸ்லாம் மேலோங்க பணியாற்றவும் தீமைகளை எதிர்த்து போராடும் மன வலிமையை பெறவும் நல்அமல்கள் செய்து நலமுடன் வாழவும் துஆ செய்யுமாறும் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
தங்கள் அன்புள்ள,
கணியூர் நாஜி இஸ்மாயில் நாஜி
Moulavi Kaniyur Ismail Najee
1 comment:
அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் இறைவனுக்கு,அவன் புகழ்பாடி, உரியமுறையில் நன்றி செலுத்திவிட்டீர்கள்.மகிழ்ச்சி-ஏம்பல் தஜம்முல் முகம்மது.
Post a Comment