Tuesday, October 21, 2014

துக்ளக் சோவும் சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமதின் ஞானமும்

சோவின் துக்ளக்
இதழ் தொடங்கிய காலக்கட்டத்தில்
தமிழகத்தின்
பிரபலமான அரசியல் புள்ளிகள் பலரிடம்
அவரே நேர்காணல் நடத்தினார்.

பிராமணர்களுக்கும்
பிராமணர் அல்லாதோருக்குமான
மறைமுக யுத்தம்
நடந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது!.

சோ, வக்கீலுக்குப் படித்தவர்.
தொழில் முறையில் அவர் படித்த
திறமை / தர்க்கம் மொத்ததையும்
பத்திரிகை வழியே
பிராமண அல்லாதோரின்
சமூக சிந்தனைகளையும்
அவர்களது அரசியலையும்
மிகத் துணிவாகவே கிண்டலடித்து
பந்தாடப் பயன்படுத்தினார்!

குறிப்பாய்...
அவரது அந்த நேர்காணல்
அதற்கு ஓர் சான்று.
அவரது புகழை அது கூட்டிய சங்கதியும் கூட.

கம்யூனிஸ்ட்...
இடது / வலது தலைவர்கள் முதலாக
திராவிடக் கட்சியின் செயலாளராக இருந்த
ஆசிரியர் வீரமணி வரை
அந்த நேர்காணலில்
சோவின் தர்க்கத்தில் மீண்டுவர முடியவில்லை.

அந்த வரிசையில்...
முஸ்லிம் லீக தலைவரான
சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமத் அவர்களையும்
சோ நேர்காணல் நடத்தினார்.
அந்த நேர்காணல் துக்ளக் இதழிலும் வந்தது.

பிற தலைவர்களை மிகச் சுலபமாக
தன் வாதத் திறமையால் / தர்க்கத்தால்
உருட்டிவிட்ட மாதிரி
அப்துல் சமதிடம் நடக்கவில்லை!

பேட்டி நடந்தக் காலக் கட்டத்தில்
பசுவதையை எதிர்த்து
ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.
(இப்போது அதனை
அவர்கள் மறந்து போனார்கள் என்பது வேறுகதை)

பசுவதையொட்டிய ஒரு கேள்வியாக
துக்ளக் சோ, அப்துல் சமதிடம் கேட்டார்:

"முஸ்லிம்கள் ஏன் பசு மாமிசத்தை சாப்பிடுகிறார்கள்?"

"பசு மாமிசத்தை...
முஸ்லிம் அல்லாதோர்களும்தான் சாப்பிடுகிறார்கள்.
சொல்லப் போனால் பொதுவில்
முஸ்லிம்கள் விரும்பி சாப்பிடுவது குறைவு.
வட இந்தியாவில் சில இடங்களில்
ஏழைகள் சாப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்"

"அப்போ விலை குறைவு என்பதற்காக
முஸ்லிம்கள் எது வேன்டுமானாலும் சாப்பிடுவார்களா?"

"மிஸ்டர் சோ, விலை மலிவு என்பதற்காக
உங்கள் மதத்தில்
உங்கள் மக்கள் எதுவேன்டுமாலும்
சாப்பிடுவார்களோ... என்று எனக்கு தெரியாது.
ஆனால்,
எங்கள் மதத்தில்
நாங்கள் எதையெல்லாம் சாப்பிடலாம்..
எதனையெல்லாம் சாப்பிடக் கூடாது என்று
மதக் கட்டளையே இருக்கிறது!
அதனை நீங்கள் அறியவர மாட்டீர்கள்.
அதனால்தான் இப்படி கேட்டுவிட்டீர்கள்!"

- அந்த நேர்காணலில் சோவின்
வாதத்திறமையையும் / லாஜிக் திறமையையும்
சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமத் அவர்கள்
இப்படி உடைத்தெறிந்ததை
என்னால் இன்னும் மறக்க முடியவில்லை!

// நான் அறிந்து சோவை இப்படி மடக்கிய
இன்னொருவரை
இன்றுவரை இன்னும் நான் கண்டதில்லை.
 

 கட்டுரை ஆக்கம்   Taj Deen - தாஜ்

2 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தகுந்த பதிலடி!

இ.ஹ said...

ஒரு உரையாடலாகக் கொண்டு செல்லத்தக்க விதயத்தையும் விவாதமாகவும் வீண்வாதத் தர்க்கமாகவும் விரித்துக் கொள்கிற இன்றைய காலச் சூழலில் ஆ.கா.அ அப்துல்சமது அவர்களின் உரையாடற்பாங்கு மிகவும் போற்றத்தக்கது.

எம் ஜி ஆர் முதல்வராக இருந்த சமயம், சட்டமன்றத்தில் மக்கள்தொகைபெருக்கம் குறித்த பேச்சு நடைபெற்ற போது எம் ஜி ஆர் சொன்னாராம்: "மக்கள் தொகை பெருக்கத்திற்கு பலதார மணங்களும் ஒரு காரணம். முஸ்லிம் சமுதாயத்தவர்கள் பலதார மணம் செய்யும் மத உரிமை பெற்றவர்கள்"

முதல்வராக இருந்த எம் ஜி ஆருக்கு அதே அவையின் உறுப்பினரான அப்துல்சமத் சாஹிப் அழகாக பதிலிறுத்துள்ளார். "இங்கே முஸ்லிம் உறுப்பினர்களாக இருக்கும் நானும் அப்துல் லத்தீஃபும் மற்றவர்களும் எத்தனை மனைவியரோடு வாழ்கிறோம் என்று பார்த்தால் ஒரு மனைவியுடன் தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால் இங்கேயுள்ள அமைச்சர் காளிமுத்துவோ, எதிர்கட்சித் தலைவர் கருணாநிதி, ஏன் நம் முதல்வரே கூட பலதாரமணம் புரிந்துள்ளவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. எங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) பலதார மணத்திற்கு அனுமதி உள்ளது. ஆனால் நாங்கள் செய்வதில்லை. முஸ்லிமல்லாத மற்றவர்களுக்கு பலதாரமணம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் அவர்கள் தாம் அதிகம் பலதாரமணம் புரிகிறார்கள்" என்று சொல்லி வாயடைக்கச் செய்தாராம்

LinkWithin

Related Posts with Thumbnails