Wednesday, October 29, 2014

என் பழைய நினைவுகளை கிளறிவிட்டது.

இன்றைக்கு நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த பக்கீர்மார்கள் பாடல் காணொளி என் பழைய நினைவுகளை கிளறிவிட்டது.

பள்ளிக்கூட நாட்களில் எங்கள் ஊரில் பொழுதுபோக்கு என்பதே நண்பர்களோடுக் கூடிப் பேசுவது, விளையாடுவது, எப்போதாவது சேர்ந்துப் படிப்பது அவ்வளவுதான். விவசாயம் சார்ந்த ஒரு கிராமத்தில் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்.
இதைத் தாண்டி இன்னொரு விஷயம் எங்களை ஒன்றிணைத்தது என்றால் அது முஹப்பத்துல் முஸ்லிம் சங்கம்.
அந்தக் காலக்கட்டத்தில் இளைஞர்கள் வெளி நாடு சென்றவர்களும் குறைவு.

இந்த சங்கத்தின் சார்பில் ஒரு தப்ஸ் குழு இயங்கி வந்தது.

ஊரில் திருமணம் ஏதும் வருகினதென்றால்
ஒரு மாதத்துக்கு முன்பே தப்ஸ் குழு பயிற்சியை ஆரம்பித்துவிடுவார்கள்.

பகற்பொழுதில் தங்கள் பணியெல்லாம் முடித்துக்கொண்டு மாலை தொடங்கி இரவு வரை பயிற்சி நடக்கும்.
என் வயதுடைய நண்பர்களெல்லாம் சங்கத்துக்கு வெளியே ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்ப்போம்.
வேடிக்கைப் பார்க்கும்போது சத்தமிட்டால் அடியும் கிடைக்கும்.

அந்தக் காலக்கட்டத்தில் அப்துல் சலாம் அப்பா அவர்கள்தான் கலீபா, அவர்கள் குரல் வளமும், தப்ஸைக் கையாளும் லாவகமும் எங்களையும் அவர்களைப் போன்று தப்ஸ் அடிக்க ஆர்வத்தைத் தூண்டியது.

மாப்பிள்ளைக்கு மாலைச்சூடும் நிகழ்வில் தொடங்கி மாப்பிள்ளை நிக்காஹ் மஜ்லிஸ் வரும்வரை இந்த தப்ஸ் குழுவினரின் நிகழ்ச்சிகள் தொடரும்.

ஒவ்வொரு சூழலுக்கும் ஒரு பைத்து (பாடல்) இருக்கும்.

மாலை சூடும்போது பாடும் பைத்து,

மங்களம் பொங்கும் மாமணவாளா,
மல்லிகை முல்லை மலர்மாலைச் சூடி,
வல்லவன் அருளாலே வையகமேப் போற்ற வாழ்வீரே...வாழ்வீரே என வாழ்த்துப் பா.

வழியில் ஊர்வலம் வரும்போது பெருமானாரைப் புகழ்ந்து பாடும் பைத்துக்களைப் பாடுவார்கள்.

மதீனாவின் ஜோதி மஹ்மூதரே,
மறக்குமா நெஞ்சம் என்றும்
எங்கள் நபி நாதரை!!

கார்முகில் வந்து குடைப் பிடித்ததையும்
மறக்குமா.. நெஞ்சம் மறக்குமா!!

இன்னும் ஏராளமான பைத்துக்கள் எல்லாமே ஏகத்துவத்தைச் சொல்லும் பைத்துகளாகவோ அல்லது பெருமானாரைப் புகழும் பாடல்களாகவோ இருக்கும்.

சில பைத்துக்கள் நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா அவர்கள் இந்த சமூகத்தில் ஏற்படுத்தியத் தாக்கத்தைச் சொல்லும் பைத்தும் உண்டு.

குடியும் கூத்தும் கும்மாளமும்
போட்டு வாழ்ந்த மக்களை,
நாளைக்கொரு தெய்வமென்று
வணங்கி வந்தப் பேர்களை
ஏக இறைவன் ஒருவன் என்ற
உண்மைப் பொருளை சொன்ன நாதரே..

இப்படியாக நிறைய பைத்துக்களை நாங்கள் வெளியில் நின்றே மனனம் செய்துவிட்டோம்.

கொஞ்ச நாளில் அந்த சங்கத்தில் எங்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
சேர்ந்து கலந்து மகிழ்ந்த நாட்கள் மட்டும் மனதில் இருக்கிறது.
இந்தக் காலக்கட்டத்தில் அரபுலகக் கதவுகள் திறந்து எங்களூர்க்காரர்களும் பிழைப்புக்காகப் புலம் பெயர்ந்ததும், என் வயதொத்த இளைஞர்கள் அன்றைக்கு படிப்புக்காக கிராமங்களை விட்டு நகர்ந்ததும் பின்னாளில் அந்த சங்கம் இல்லாமலேப் போய்விட்டது.

எங்கள் தலைமுறையே அச்சங்கத்தின் இறுதி தலைமுறையானது.

தமிழ் முஸ்லிம்களின் ஒரு கலாச்சாரத்தை இழந்துவிட்டோமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இன்றைக்கு எங்கள் கிராமத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு அப்படி ஒரு சங்கம் இருந்ததேத் தெரியுமா என்று தெரியவில்லை.
 
Mohamed Salahudeen முகம்மது சலாஹுதீன் ,பாக்கம் கோட்டூர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails