Thursday, October 9, 2014

'குள' ப்பெருமைப் போற்றுவோம்...

ஆறில்லா ஊரின் அழகு பாழ்' என்றார் அவ்வை..ஈரம் இழந்த ஆறுகளின் நிலை கண்களை ஈரம் ஆக்குகின்றன.
காவிரியின் பிள்ளைகளில் ஒன்றான திருவாரூர் ஓடம்போக்கியாறு பற்றி 'ஒரு நதியின் சடலம்' என்ற எனது கவிதையை வாய்ப்புள்ளோர் வாசியுங்கள்.

ஆற்றை விடவும் ஊருக்கு அழகு சேர்ப்பவைக் குளங்கள்.
சிலநாள்கள் விடுமுறையில் சொந்த ஊர் வந்த நான் என் பாசத்திற்குரிய பழையகுளங்களைத் தேடிச்சென்றேன்.
அல்லிக்குளம், பிடாரிகுளம்,பள்ளிவாசல்குளம்,ஐநூற்றுபிள்ளையார்குளம்.. என திருவாரூரின் எல்லாக் குளங்களும் படுகொலைச் செய்யப்பட்டுவிட்டன.
பிள்ளைகளை இழந்தத் தாய் போல கமலாலயம் என்ற தெப்பக்குளம் மட்டும் நிற்கிறது...

கொடிக்கால்பாளையம் எந்தை வழி முன்னோரின் ஊர்.
கொடிக்கால்பாளையத்தின் அழகே அதன் குளங்கள்தான்.

பள்ளிக்கேணி, வெள்ளக்காரன்கேணி,புதுக்கேணி, சின்னமரக்கேணி,குட்டைக்கேணி, சாவுசாபள்ளிக்குளம், காட்டுப்பள்ளிகுளம் என அழகிய குளங்கள்தாம் அந்த ஊரை அழகு செய்தன. நிலத்தடிநீர் குறையாமலும்,கெடாமலும் உதவிசெய்தன.

இப்போதோ பள்ளிக்கேணியைத் தவிர எல்லாக் குளங்களும் இறந்துவிட்டன. அருமைதெரியாத மக்களால் அழகிய குளங்கள் அழிக்கப்பட்டுள்ளன .

அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை அழித்துக்கொள்வதைப் போன்ற அறிவீனம் உண்டா?

பால்யநாள்களில் நானுமொரு மீனாகி , நீந்தி மகிழ்ந்த பள்ளிக்கேணியில்
நேற்று தம்பி ஃபாரிசுடன் குளித்தேன்.
கட்டண நீச்சல்குளங்களில் கண்ணெரிய குளிப்பதற்கும்
இங்கு கண்குளிரக் குளிப்பதற்கும் எத்தனை வேறுபாடு..
நடுத்தெரு சகோ.அபூபக்கர் ஏராள தகவல்களைப் பகிர்ந்தார்.
ஊருக்கே அது குடிநீராக இருந்தது அக்காலம்.
சின்னமரக்கேணி எந்நேரமும் பெண்களுக்கானது.
பள்ளிக்கேணியில் வைகறைக்கு முன் பெண்கள் குளிக்கலாம்.

அந்நாட்களில் அதிகாலையில் திறக்கப்படும் தேநீர் கடைகளில் பெண்கள்
நடமாட்டத்தைக் கருத்தில்கொண்டு பர்தா தொங்கவிடும் பழக்கம் இருந்ததாம்.

மீன்கடி இல்லாத குளியலும் குளியலோ.
fish spa என நட்சத்திர விடுதிகளில் பல்லாயிரம் சம்பாதிக்கிறார்கள்.
இந்த மீன்கடிக்கு அது ஈடாகுமா?
செத்த தோல்செல்களைத் தின்று நக அழுக்குகளை நீக்கி மீன்கள் செய்யும் சேவை மிகவும் சுகமானது.

திருவாரூர் ,RA மகளிர் கல்லூரி நிர்வாகியும் எனது உறவினருமான சகோ ஃபெரோஸ் ஷா வை இன்று பள்ளிக்கேணிக்கு குளிக்க அழைத்து வந்தேன்.
அங்கேயே வாழ்ந்துவரும் அவருக்கு இன்றுதான் முதன்முதலில் பள்ளிக்கேணியில் குளிக்கும் பாக்கியம்..
இப்போது பெரும்பான்மையினர் குளியலறைக்குள் குறுகிவிட்டனர். படித்துதுறையில் கிடந்த காலி மதுபுட்டிகளும், குளத்தின் நீர்ப்பரப்பில் மிதந்து பிளாஸ்டிக் குப்பைகள் கவலையளித்தன. பள்ளிக்கேணியைப் பாராட்டத்தக்கவகையில் பாதுகாத்தல் பள்ளிவாசல் நிர்வாகம் மாசுபாட்டைத்தடுக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

படித்துறை காலியாக இருப்பதும், காலிகளின் கூடாரமாய் மாறுவதும் ஆபத்தானது. ஒவ்வொரு ஊரிலும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் மக்கள் படை ஒன்றை உடனடியாக உருவாக்கவேண்டும். உங்கள் கருத்துகளையும் யோசனைகளையும் பதியுங்களேன்.
Haja Gani

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails