Thursday, October 23, 2014

“இன்று என்பதைப் இறுக்கிப் பிடித்துக் கொள்..."

  பாகிஸ்தான் பாரதி
- அப்துல் கையூம் 
“இன்று என்பதைப் இறுக்கிப் பிடித்துக் கொள். ஏனெனில் நாளை என்பது விதியின் கைப்பிடிக்குள்” - அல்லாமா இக்பால்

இவ்வாரம் இக்பாலைப் பற்றி எழுதப் போகிறேன் என்று என் நண்பரிடம் தெரிவித்தேன். மின்னல் வேகத்தில் அவர் முகத்தில் ஒரு அதிருப்தி ரேகை. அவர் வீசியதோ ஒருவிதமான ‘குறுகுறு’ பார்வை. தேசத்துரோகம் ஏதாவது புரிகின்றோமோ என்ற ஐயம் எனக்குள்.

இக்பால் எனும் இலக்கியவாதியை நான் காதலிக்கத் தொடங்கி ஆண்டுகள் பலவாகி விட்டன. அப்போது எனக்கு 12 வயது. இக்பாலை எனக்கு அறிய வைத்தது எங்கள் பிறைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் அவுரங்கசேப் கான். முன்பு பட்டாளத்தில் பணி புரிந்தவர். பள்ளி ஆண்டு விழாவின்போது நானும் என் இரண்டு நண்பர்களும் அந்தப் பாடலை பாடவேண்டும்.

“சாரே ஜஹான் சே அச்சாஹ், ஹிந்துஸிதான் ஹமாரா

ஹம் புல்புல்ஹேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா”
உரக்கப் பாடினோம். உச்ச ஸ்தாயியில் பாடினோம். அனுபவித்துப் பாடினோம். அர்த்தமே புரியாமல் பாடினோம். பாடலைக் கேட்டவர்கள் பரவசமானார்கள். பலத்த கைத்தட்டல் வழங்கினார்கள்.

அம்மொழியும், வார்த்தையும், இசையும், ராகமும், இதமான ஏற்ற இறக்கமும் என்னை என்னவோ செய்தது. உள்ளே யாரோ சம்மணங் கொட்டி அமர்ந்து சம்மட்டியால் அடித்ததைப் போல் ஓர் உணர்வு. தேனீக்களை விரட்டிய பின் தேன்கூட்டை கசக்கிப் பிழிவார்களே அதுபோல என் உள்ளத்தை யாரோ கசக்கிப் பிழிந்தார்கள்.

இந்தியாவின் பெருமையை எடுத்துரைத்து, இந்தியன் என்ற உணர்வை ஏற்படுத்தியது அவனது “தரானே-ஹிந்த்” பாடல். 1904-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று ‘இத்திஹாத்’ (பொருள் = ஒற்றுமை) என்ற வார இதழில் அப்பாடல் முதன் முதலில் வெளிவந்தது.

1947, ஆகஸ்ட் 15 – ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்ததை பிரகடனம் செய்ய திருமதி. சுஸேதா கிருபாளினி மற்றும் டாக்டர். சுசீலா நய்யார் குரலெடுத்துப் பாடிய சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கீதமும் இதுதான்

அந்த அமர கீதத்தின் சாராம்சம் :

“பரந்து விரிந்த பாருக்குள்ளே

பன்மடங்கு சிறந்தது இந்துஸ்தானம்!

இந்திய நந்தவனத்து புல்புல்கள்

நாங்கள் இசைக்கும் இனியகானம் !

ஏனோ என்னை அறியாமலேயே இக்பாலின் மேல் ஒரு மோகம். ஏற்பட்டது ஓர் இலக்கியத் தாகம். அதற்கு காரணம் அவன் வார்த்தை பிரயோகம். அதை அவன் கையாளும் லாவகம். அதன் பக்குவம். தெள்ளிய ஓடையிலிருந்து நீரை அள்ளி பருகுவது போல் இன்பம் பயக்கும்.

இக்பால் - அவன் பால் காதல் கொண்டது நான் மட்டுமா? ஒரு தேசமே அவனுக்காக காதலர் தினம் கொண்டாடுகிறது. அதற்கு ‘இக்பால் தினம்’ என்று பெயர். நவம்பர் 9 - அங்கே அது அரசாங்க விடுமுறையும் கூட.

அவர்களுக்கு எல்லாமே ‘அல்லாமா’தான். அவன் நினைப்பால். அவன் கவிதையின் ஈர்ப்பால், அதன் பொருட்பால் தந்த திளைப்பால் மூழ்கியவர்கள் ஏராளம் ஏராளம். மூச்சுக்கு மூச்சு இக்பால். பேச்சுக்கு பேச்சு இக்பால். அங்கே - காந்தியும் அவனே; காளிதாசனும் அவனே.

அவன் அவனுக்காக பேசியதை விட மற்றவர்களுக்காக பேசியதே அதிகம். மனங்களுக்கு மருத்துவம் பார்த்தே மருத்துவனானவன்.

வழக்குரைஞன் அவன். வழக்கில் வாதித்ததை விட வளமிக்க கவிதைகளால் வாதம் புரிந்ததுதான் அதிகம்.

வாதிட்டதெல்லாமே மனித இனத்தின் வளம்வேண்டிதான். வாதிக்கும், பிரதிவாதிக்கும் சேர்த்தே வழக்குகள் தொடுத்தான். தீர்ப்பும் அவனே வழங்கினான்.

“பாட்டும் நானே! பாவமும் நானே!” என்ற பாடல் வரிகளைப்போல “கேள்வியும் நானே! பதிலும் நானே!” என்ற ரீதியில் பாடல்ளைத் தந்தவன். . “ஷிக்வா” அவனது கேள்விக் கணை. “ஜவாபே ஷிக்வா” அவனது பதில் மழை.

முறையீடுகள் பெரும்பாலும் இறைவனை நோக்கித்தான் இருந்தன. எப்படித்தான் அவனுக்கு அந்த தைரியம் பிறந்ததோ? இறைவனிடமே கேள்விகள் கேட்டான். கேள்விகள் கேட்பது கடினமல்லவே? யார் வேண்டுமானாலும் கேட்கலாம். எச்.ஜி. ரசூல் கேட்கவில்லையா? அதற்கு தீர்வு காண்பதென்பது எளிதான ஒன்றா? இக்பால் அங்கேதான் உயர்ந்து நிற்கின்றான்.

‘புல்புல்’ பறவையை அவன்தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவனது உள்ளமும் அவன் வளர்ந்து திரிந்த இமாலயப் பிரதேச பனிபோன்று வெள்ளையாகவே இருந்தது.

ஆச்சரியமாக இருந்தது எனக்கு. பரிவு, பச்சாதாபம், இரக்கம், கருணை, மனித நேயம் இவை அத்தனையும் ஒருபிடி இதயத்திற்குள் அடங்க முடியுமா என்ன? கூட்டுக் குடும்பமாய் இவனுக்குள் குடியிருந்ததே?

இக்பால் ஒரு புரட்சியாளனா?, தத்துவவாதியா?, சூஃபியா?, என்னால் கணிக்க முடியவில்லை. எழுத்தாளனுக்கே உரிய போராட்டக் குணம் அவனுள் பொதிந்திருந்தது; ஞானிக்கே உரிய சூஃபித்துவம் அவனுள் உறைந்திருந்தது; அறிவாளிக்கே உரிய தத்துவார்த்த சிந்தனைகள் அவனிடம் நிறைந்திருந்தது.

ஒருவன் தன் ஆளுமையின் மனோபலத்தினால் இவ்வுலகையே அடிபணிய வைக்க முடியும் என்பது இக்பாலின் சித்தாந்தம். சுய அறிவும் சுய சிந்தனையும்தான் ஒருவனை முழுமனிதானக மாற்றுகின்றது என்பது அவனது கோட்பாடு. அவனது முற்போக்கு சிந்தனை நம் சிந்தனைக்குணவு தரவல்லது.

“இறைவனுக்கும் மனிதனுக்குமிடையே ஒரு விவாதம்” இது இக்பாலின் படைப்புகளில் ஒன்று.

அவனே அவன் கவிதையில் குறிப்பிடுவதைப் போல் ‘எந்த முடிவுக்கு முடிவே இல்லையோ அந்த முடிவின் முந்தானையை பிடித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்’ என்கிறான். (ஒரு தேவதையும் ஒரு கவிஞனும்). அவன் சூசகமாக கூறும் ‘முடிவே இல்லாத முடிவு’ இறைவன்தான் என்பதை நம்மால் எளிதில் புரிந்துக் கொள்ள முடிகிறது.

அவனது “மனிதன்” “தனிமை” “பனித்துளியும் தாரகையும்” போன்ற கவிதைகள் வாழிவியலின் முரண்பாடுகளை காரசாரமாக வாதிக்கின்றன.

மற்ற இஸ்லாமியக் கவிஞர்களிடமிருந்து மாறுபட்டவன் இவன். இறைவனுடன் நேர்முக விவாதத்தில் ஈடுபடுவதாக தன்னைத் தானே கற்பனைச் செய்துக் கொள்கிறான்.

இக்பால் கையாண்டிருக்கும் சில கருத்துக்கள் மார்க்க சர்ச்சைகளை கிளப்புவது போலிருக்கும். சில நேரங்களில் அவன் தான் சார்ந்திருக்கும் மதக் கோட்பாடுகளிலிருந்து தடம் மாறிச் செல்கின்றானோ என்ற சந்தேகத்தை உண்டாக்கும்.

சுவனத்திலிருந்து ஆதம் வெளியேற்றப்பட்டது யாருக்கு நஷ்டம் என வினா எழுப்புகிறான். நஷ்டம் இறைவனுக்கா அல்லது ஆதமுக்கேவா? என்ற விவாதத்தை முன் வைக்கிறான். ஆதத்தை வைத்து அவன் பரிட்சித்து பார்த்ததை எப்படி எடுத்துக் கொள்வதென்பது அவனுடைய கேள்வி.

தூதர்கள் மூலம் பேசுவதைத் தவிர்த்து தன்னுடன் நேருக்கு நேர் பேச இறைவனுக்கே சவால் விடுக்கின்றான்.

மனிதனின் எல்லையிலா ஆசைகளையும், அவனுக்கு அருளப்பட்டிருக்கும் வெகு குறைவான வளங்களையும் ஐஸ்வர்யங்களையும் ஒப்பிட்டு, இது போதுமா? என்ற ரீதியில் கேள்விகள் தொடுக்கின்றான்.

உரிமையுள்ளவர்களிடம்தான் பிடிவாதம் செய்ய முடியும்; முறண்டு பிடிக்க முடியும்; வேண்டியதை கேட்டு பெற முடியும். இக்பால் இறைவனிடம் கேள்வி கேட்பதை இப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இக்பாலை இஸ்லாமிய கோட்பாடுகளிலிருந்து விலகிச் செல்பவன் அல்ல என்பது திறானாய்வார்களின் கருத்து. இக்பாலின் கவிதைகளை புரிந்துக் கொள்ள வேண்டுமெனில் முதலில் இக்பாலை புரிந்துக் கொள்ளுதல் அவசியம்.

இக்பாலின் ஒரு சில கவிதை படைப்புகளில் கவிதைக்கரு நாடக வடிவில் அமைந்திருக்கும். அதன் நடையும், போக்கும், இடையிடையே வாசகர்களின் எதிர்பார்ப்பை தூண்டுவதாக இருக்கும். ஒரு சுவையான பூவணிக் கோலத்தின் இழை ஓடிக் கொண்டிருக்கும். நடுநடுவே இறுதி முடிச்சை அவிழ்க்கக்கூடிய சில சமிக்ஞைகள் கோடிட்டுக் காட்டப்படும். அதில் விவாதங்கள் எழும். கற்பனைக் காட்சியில் அவனே ஒரு வியூகத்தை அமைப்பான். விடுவிக்க முடியாத புதிர் போன்று தென்படும். இறுதியில் அவனே அந்த முடிச்சை இலகுவாய் அவிழ்த்து வைப்பான். தீர்வும், நற்செய்தியும் பொதிந்திருக்கும். முடிவில் அவனது தனிப்பட்ட முத்திரை முத்தாய்ப்பாக பதிந்திருக்கும்.

இதற்கு இரண்டு மிகச் சிறந்த உதாரணங்களாக “கவிஞனும் ராத்திரியும்” “கவிஞனும் சுவனக் கன்னிகையும்” இவையிரண்டையும் சொல்லலாம்.

இக்பாலுக்கு பிடித்தமான சில பிரத்யேக படிமங்களும் கலைக் கருத்தும் நம்மை ஈர்க்கின்றன. அவனுக்கு பிடித்தமான மலர் “துலிப்”. பிடித்தமான பறவை எது தெரியுமா? பருந்து. ஆம்! பார்ப்பதற்கே பயமாக இருக்குமே அந்தப் பறவைதான். அவனுக்கு அன்னியோன்யமாக இருப்பது நமக்கு அந்நியமாக இருக்கிறது.

அன்னப்பறவையோடும், குயிலோடும், மயிலோடும், கவிதையில் உறவாடி பழக்கப்பட்ட நமக்கு பருந்தின் நட்பு விநோதமாகப் படுவது இயற்கைதானே?

விளக்குகளை சுற்றிவரும் விட்டில் பூச்சிகளை விட சிறந்தது மின்மினிப்பூச்சிகளே என்கிறான் இவன். அதற்கு இவன் கூறும் காரணம் வித்தியாசமாக இருக்கிறது. மின்மினிப்பூச்சிகள் படபடத்துப் பறக்கையில் விளக்குகள் எரிவது போலிருக்கும். அந்த சிறு வெளிச்சம் இவனை கவர்ந்திழுக்கிறது. அந்த ஆளுமை (Possessiveness) கவிஞனை உற்சாகப் படுத்துகிறது. தனக்குத்தானே மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் -– அந்த தன்னாற்றல்; தன்னிறைவு; தன்னம்பிக்கை, தன்முயற்சி – இவற்றை வியந்து போற்றுகிறான் இக்பால்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மனிதன் ஒளிந்திருக்கிறான் என்பது இக்பால் கண்டறிந்த உண்மை. அதனை அவரவர் வசதிக்கேற்ப அழைப்பதுண்டு. “தான்” என்றோ “ஆளுமை” என்றோ “மனத்திடன்” என்றோ எப்படி வேண்டுமானாலும் அதனை அழைத்துக் கொள்ளாலாம். அந்த மகாபலம் பொருந்திய ஆளுமையின் சக்தியை ஒன்று கூட்டி, ஒருங்கே சமைத்து; இந்த உலகத்தையே அடிபணிய வைக்க முடியுமென்பது இக்பாலின் தத்துவம். அவன் சூஃபியாகத் தோற்றமளிப்பது இது போன்ற சிந்தனைகளால்தான்.

உளத்திண்மைக்கு முன்பாக உலகத்திலே எந்த வித சக்தியும் தாக்கு பிடிக்க முடியாது என்று உறுதிபட கூறுகிறான் அவன். அந்த மனப் பக்குவத்தை எட்டுவதற்கு மனிதன் பல கட்டங்களை தாண்ட வேண்டியிருக்கும்; பல தடைகளை சந்திக்க நேரிடும்; பல சோதனைகளை சமாளிக்க வேண்டும்.

பாரதியை இந்தியாவின் இக்பால் என்றும், இக்பாலை பாகிஸ்தானின் பாரதி என்றும் கூட மாற்றி மொழியலாமோ?

ஓ.. தாராளமாக.. .. அவனும் இவனும் வேறல்ல.

பாரதி - “மஹாகவி” என்று பண்புடன் அழைக்கப்படுவதைப் போலவே. இக்பால் - “அல்லாமா” என்று அன்புடன் அழைக்கப்படுகிறான். “அல்லாமா” என்றால் அறிவு நிரம்பியவன் என்று பொருள்.

“பாட்டுக்கோர் புலவன்”, “கவிராஜன்” என்ற அடைமொழியைப் போன்றே இக்பாலுக்கும் (Shair-e-Mashriq) கிழக்கு தேசத்துக் கவிஞன் , (Hakeem-ul-Ummat) சமுதாயச் சாது என்ற சிறப்புப் பெயர்கள் இருக்கின்றன.

இவன் பராசக்தியை தேடி அலைந்தான். அவன் மகாசக்தியை தேடி அலைந்தான்.

ஒருவன் வெள்ளிப்பனிமலையின் மீதுலாவித் தேடினான். மற்றவன் திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி அலைந்தான்.

பாரதி, சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சூளுரைத்தான். இக்பாலோ பாராசீக மொழியில் பாட்டெழுதி அண்டை தேசத்துக்கு மானசீக பாலம் அமைத்தான்.

“சாரே ஜஹான்ஸே அச்சாஹ்

இந்துஸிதான் ஹமாரா” - இது இக்பாலின் கண்ணம்மா பாட்டு.

“பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்

பாரத நாடு” - இது பாரதியின் ‘ஷிக்வா’.

இரண்டுக்குமே அர்த்தம் ஒன்றுதான்.

இருவருமே விடுதலை வேட்கையில் கருத்தரித்த அக்னி குஞ்சுகள். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கெதிராக ‘எழுத்துத் துப்பாக்கியை’ ஏந்தியவர்கள். குண்டுகளை விட வீரியம் மிக்க இவர்களின் எழுத்துக்கள், வெள்ளையர்களை கதி கலங்கச் செய்தது. தெற்கில் இவனும் வடக்கில் அவனுமாய் வெள்ளையர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்கள்.

இருவருமே முறுக்கு மீசைக் காரர்கள். கோபத்தை இறைவன் இவர்களின் மூக்கின் நுனியில் வைத்துவிட்டான் போலும். ‘நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டாலே நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று பொறுமியவர்கள் இவர்கள்.

அவனது பார்வையில் இந்தியா ஒரு ஏடன் தோட்டம். இவனது பார்வையில் பாரதம் ஒரு பிருந்தாவனம்.

அவன் புல்புல்களை வைத்து பாடல்கள் புனைந்தான். இவன் பாடியது குயில் பாட்டு.

இருவரும் பறவைகளை நேசித்தார்கள். அதனால் தான் அவர்களுக்கும் சிறகு முளைத்தது. வானம்பாடிகள் ஆனார்கள். வனாந்திரங்களிலும், பனிச்சாரல்களிலும், மனிதர்களின் மனதிலும் பாடிப்பாடி திரிந்தார்கள்.

மனித இனத்தில் பிறந்தவனையே நம் ஜாதி என்று ஏற்றுக் கொள்ளத் தயங்குகிற மனிதர்கள் மத்தியில் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்றவர்கள் இவர்கள்.

இக்பாலின் மூதாதையர்கள் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள். சாஹஜ் ராம் சப்ரு என்ற அவரது மூதாதையர் ஒருவர் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர் ஆவார். இக்பாலின் தகப்பனார் ஷேக் நூர் முகம்மது புகழ்பெற்ற தையல் நிபுணர். இஸ்லாமிய மார்க்கப் பற்று நிரம்பியவர். தன் பிள்ளைகளுக்கும் மார்க்க அறிவை போதித்து வளர்த்தார்.

பாரதியும் பிராமணனே. அவனது சமுதாயச் சிந்தனை, சமநிலை பண்பாடு, புரட்சிக் கருத்துக்கள் அவன் வகுப்பினரிடையே அவனுக்கு பலத்த எதிர்ப்பைத் தேடித் தந்ததென்னவோ உண்மை.

காதலின் சின்னமாக 22 ஆண்டுகளாக கட்டப்பட்ட தாஜ்மகாலை கண் குளிரக் கண்ட பின்னரே உயிர் நீத்தான் ஷாஜகான். ஒரு விதத்தில் அவன் பாக்கியசாலி.

இக்கவிஞர்கள் இருவருக்குமே அதுபோன்ற ஒரு பாக்கியம் கிடைக்கவில்லை. “கனவு மெய்ப்பட வேண்டும்” என்று பாடிய பாரதியும் இக்பாலும் அந்த பொன்னான தருணத்தை கண்ணாரக் காணும் முன்னரே உயிர் நீத்தவர்கள். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் முன்னரே இவர்களின் மூச்சு நின்று விட்டது.

பாரதியின் தன்னம்பிக்கை நம்மை பிரமிக்க வைக்கிறது. சுதந்திரம் கிடைப்பதற்கு 25 ஆண்டுகட்கு முன்னரே ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத்தை உருவகப்படுத்திக் கொள்கிறான்

“ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று கூக்குரலிடுகிறான். பிறிதோரிடத்தில்

“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு ! - நாம்

எல்லோரும் சமம் என்பது உறுதி யாச்சு” என்று உவகையுறுகிறான். பின்னர்

“ஆடுவோமே ஆடுவோமே ! பள்ளுப் பாடுவோமே !

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று !

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே ! - இதைத்

தரணிக் கெல்லாம் எடுத்து ஓதுவோமே !”

என்று சுதந்திரமே கிடைத்து விட்டதாய் நினைத்து ஆனந்தக் கூத்தாடுகிறான்.

தூங்கிக் கிடந்த இந்தியனை எழுப்பிவிடும் சக்தி இருவருடைய எழுத்துக்களுக்கும் இருந்தன. இருவரும் புதுக் கவிதைகளுக்கு வித்திட்டவர்கள். தங்களுடைய புரட்சிக் கருத்துக்கள் ஒருசில சாராரால் தவறாகப் புரிந்துக் கொள்ளக்கூடும் என்பதை அறிந்து வைத்திருந்தவர்கள்.

மதங்களின் பெயரால் நடக்கும் அட்டூழியங்களை கண்கூடாகக் காண்கிறோம். உலகிலுள்ள அத்தனை மதங்களும் சாந்தியையும் சமாதானத்தையும், அன்பையும் அறவழியையும்தான் போதிக்கின்றன. அதனை புரிந்துக் கொள்ளும் சக்திதான் மனிதனுக்கு இல்லாமல் போய்விட்டது.

இக்பால் கூறுகிறான் :

'மத்ஹப் நஹீன் சிகாதா ஆபஸ் மே பேர் ரக்னா'

மதங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் மதவாதிகள் தங்களுக்குள் சண்டை போடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதை இக்பால் சொல்லாமல் சொல்கிறான்.

இக்பாலை சூஃபி என்று வரையறுப்போர் உண்டு. சூஃப் என்றால் அரபு மொழியில் கம்பளி என்று அர்த்தம். ‘சூஃபி’ என்றால் கம்பளி போர்த்தியவன் என்று பொருள். நாளடைவில் மெய்ப்பொருளியலும் ஆதனிய மறையியலும் இணைந்தவொரு முறையைப் பின்பற்றுகின்ற ஞானியைக் குறிக்கும் சொல்லானது.

‘ஹக்’ (உண்மை) என்றும், ‘நூர்’ (ஒளி) என்றும் இறைவனை இக்பால் ஒரு சூஃபியின் தோரணையில் விளிப்பதை நாம் காண முடிகிறது. ‘பரம்பொருள்’, ‘சோதி’, ‘மகாசக்தி’ – இறைவனின் தன்மையைக் குறிக்கும் பதங்களை பாரதியும் கையாள்கிறான்.

கர்வம், கவிஞனுடன் கூடப்பிறந்த குணம் போலும். மகாகவிகள் அத்தனைப் பேருக்கும் தற்பெருமை தலைவிரித்தாடுவதை காண முடிகிறது. அகம்பாவம் என்று சொல்லுவதை விட கவி இறுமாப்பு என்று கூறலாமோ? இவர்களின் அகந்தை நாம் இரசிக்கும்படி இருக்கிறது.

“காவியத்தாயின் இளையமகன், காதல் பெண்களின் பெருந்தலைவன், பாமர ஜாதியில் தனிமனிதன், படைப்பதினால் என்பெயர் இறைவன்” என்று கண்ணாதாசன் தம்பட்டம் அடிக்கையில் நமக்கு அவன் மேல் கோபம் வருவதில்லை. மாறாக அவன் மீதிருந்த ஈடுபாடு அதிகரிக்கிறது.

“எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்” என்று பாரதி பெருமை கொள்ளுகையில், “அவன் சொல்லுவது உண்மைதானே?” என்று நாம் அவனுக்கு சப்பைக்கட்டு கட்டத் தோன்றுகிறது.

“இரவைப் படைத்தவன் இறைவன்தான் என்றாலும்

இருள்போக்கும் அகல்விளக்கு என்னுடைய கைவண்ணம்

மண்ணைப் படைத்தவன் அவனே! அதிலென்ன ஐயம்?

மண்பாண்டம் அத்தனையும் மனிதனின் உபயம்

காடுமலை, பாலைவனம் அவன் படைப்பு என்றாலும்

கனித்தோட்டம், நந்தவனம், - என்

கடும் உழைப்பின் பயனாகும்

கண்ணாடியை கல்லிருந்து பிரித்தெடுத்தவன் நான்.

கொடும்நஞ்சை நச்சுமுறியாய் ஆக்கியவனும் நான்தானே?” என்று

ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் சேர்த்து வக்காலத்து வாங்கி இக்பால் பாடும் போது நாமும் அவனுடன் சேர்ந்து பூரித்துப் போகிறோம்.

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்ற செந்தமிழ்த்தேனீ பாரதியின் கொள்கைதான் இக்பாலுடைய கொள்கையாகவும் இருந்தது.

பெரெட்ரிச் நியெட்செ, ஹென்றி பெர்க்ஸன். கோயத். தாந்தே, மவ்லானா ரூமி போன்ற மேலைநாட்டு மெய்யறிவாளர்களுடைய தத்துவார்த்த சிந்தனைகள் இக்பாலை ஆட்கொண்டது.

பிறநாட்டுக் கவிஞர்களான ஷெல்லி, கீட்ஸ், பைரன், விட்மன் இவர்களின் சிந்தனைகளை பாரதியின் கவிதைகளில் நாம் காண முடிகிறது.

பாரதி ஒரு பன்மொழியாளன். எனவேதான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று அர்த்தம் தொனிக்க பாடினான். “சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து” என்று தைரியமாகப் பாடினான். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு. தெலுங்கில் பாட்டிசைத்தால் இனிமையாக இருக்கலாம் என்று அவன் நினைத்திருக்கக் கூடும். இதில் தமிழ் ஆர்வலர்கள் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?

மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக எடுத்துச் சொல்வதில் இக்பாலுக்கும் இதேபோன்ற துணிச்சல் இருந்தது.

“என்னதான் உருது இனிமையான மொழி என்றாலும் பாராசீக மொழி அதைவிட இனிமையானது” என்றவன் கூறுகிறான். இருந்த போதிலும் உருது மொழியை தேசிய மொழியாக கொண்ட நாட்டில் அவன் தேசியக் கவிஞனாக போற்றப் படுகிறான். மகாகவிகளின் ஆளுமைக்கு இதுவும் நல்ல எடுத்துக்காட்டு. அவன் எழுதிய 12,000 கவிதைகளில் 7,000 க்கும் மேற்பட்ட கவிதைகள் பாரசீக மொழியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

“கடந்த காலத்தை நினை, நிகழ்காலத்தை நடத்து, எதிர்காலத்துக்கு உன்னை தயார்படுத்திகொள்” இதுதான் இக்பால் நமக்கு “அடிமைத்தளம்” (Bandagi Nama) என்ற நூலில் இளைஞர்களுக்கு போதிக்கும் தாரக மந்திரம்.

இக்பாலின் அறிவுரைகளை அமைதியாகச் சொல்வான். பாரதி கூறும் புத்திமதியில் ஆக்ரோஷத்தைக் காண முடியும்.

“பாதகம் செய்பவரைக் கண்டால் – நீ

பயங்கொள்ள லாகாது பாப்பா!

மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!” – இது பாரதி பாணி.

‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனைச் சொல்வாரையும்’, ‘மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும் ஈனர் குலத்தவரையும்’ பாரதி என்றுமே மன்னிக்கத் தயாராயில்லை.

வங்காளச் சிங்கம் எனப் போற்றப்படும் நவாப் சிராஜுத் தவ்லா மற்றும் திப்பு சுல்தானை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்த இனத்துரோகிகளை இக்பால் இதுபோன்றே பயங்கரமாகச் சாடுகிறான் 1932-ல் வெளியான “ஜாவீது நாமா” என்ற நூலில்.

இக்பாலின் இரண்டாவது ஆங்கில நூல் “Reconstruction of Religious Thought in Islam “ என்பது. இந்நூல் 1930-ஆம் ஆண்டு லாகூரில் வெளியாகியது. சென்னை, ஹைதராபாத், அலிகார் ஆகிய நகரங்களில் இல்பால் ஆற்றிய சொற்பொழிவுகள் உள்ளடங்கியது. சென்னைக்கு வந்த போது சேத்துப்பட்டில் உள்ள ஹாரிங்டன் சாலையில் இருந்த நமாஸி குடும்பத்தினருக்குச் சொந்தமான பங்களாவில் தங்கியிருந்ததை இங்கே பதிவு செய்ய வேண்டும்.

பாரதி, ஆங்கிலத்தில் அளப்பரிய புலமை பெற்றிருந்தது பல பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. “நம்மாழ்வாரின் திருவாய் மொழி” “நாச்சியார்ப் பதிகம்” “திருப்புகழ்” ஆகிய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த்தோடு அல்லாமல் ஓர் ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து அதனை நடத்தியும் வந்துள்ளான்.

பாரதியின் பாடல்களும் முறையே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தால் அவனுக்கும் தாகூருக்குக் கிடைத்ததுபோன்று நோபல் பரிசு கிடைத்திருக்கக்கூடும்.

இருவர் வாழ்விலும் நடந்த இளம்பிராயத்து நிகழ்வுகள் சுவராஸ்யமானது. இக்பால் மாணவனாக இருக்கையில் வகுப்பிற்கு ஒருநாள் தாமதமாகச் செல்ல "ஏன் தாமதம்?" என ஆசிரியர் அவனை வினவியதற்கு "இக்பால் சீக்கிரம் வராது" என்றானாம். (இக்பால் என்றால் மேனிலை என்று பொருள்). உண்மைதானே?

பாரதி சிறுவனாக இருக்கையில் காந்திமதி நாதன் என்பவர் ‘பாரதி சின்னப்பயல்’ என்ற ஈற்றடியை கொடுத்து பாடல் எழுதச் சொல்ல சிறுவன் பாரதி ‘காந்திமதி நாதனைப் பாரதி (பார் + அதி) சின்னப்பயல்’ என்று ‘கலாய்த்தது’ நாமெல்லோரும் அறிந்ததே. விளையும் பயிர் முளையில் என்பது இதுதானோ?

இருவரும் இயற்கையை ரசித்தவர்கள். இக்பாலின் கவிதையை சுவைக்கையில் இமாலயச் சாரலுக்கே சென்று வந்த அனுபவம் கிட்டும். ‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்றும் ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்’ என்று பாரதி கூறும்போதும் இவனும் இயற்கைப் பித்தனே என்று முடிவுகட்டி விடுவோம்.

சாவின் பிடியிலும் காலனை அழைத்து அவனைக் காலால் உதைத்த இந்த தென்னகத்து இக்பாலும் சரி, ‘சாகாத வரம் பெற்ற பாடல்’ (Song of Eternity – 1932) எழுதி புகழ்பெற்ற அந்த பாகிஸ்தான் பாரதியும் சரி, இலக்கியம் உள்ளவரை இவர்களும் எந்நாளும் உயிர் வாழ்வார்கள் என்பது திண்ணம்.

பாகிஸ்தான் பாரதி
ஆறு வருடங்களுக்கு முன் திண்ணை பத்திரிக்கையில் நானெழுதிய கட்டுரை

- அப்துல் கையூம்  
அப்துல் கையூம்
vapuchi@hotmail.com
Copyrightthinnai.com
நன்றி http://www.thinnai.com/
நன்றி அப்துல் கையூம் அவர்களுக்கு 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails