Abdul Gafoor
நான் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்திட உங்களோடு கைகுலுக்கி அமருகிறேன் ....
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....
இறைவன் பொருத்திய சிறகுகளை நிரந்தரமாய் விரித்து மகிழ்வோடு சிரித்து சோகமாய் அழுது இன்பத்தையும் துன்பத்தையும் சுமந்து சுதந்தரமாய் பறந்து கொண்டிருக்கும் காலமெனும் ராட்சசப் பறவை நான் இதயத்தில் கட்டி வைத்திருக்கும் நினைவு ஊஞ்சலை மெதுவாய் ஆட்டிச் செல்கிறது ....
குவைத் தேசத்தின் இரண்டாவது பெரு நகரமான பஹாஹீல் எனும் வர்த்தக நகரத்தில் ஸெனஹியா என்கிற ஊரில் நானும் நேசத்திற்குரிய எனது தாய் மாமா மர்ஹூம் AVM சின்னப்பா அவர்களும் (குவைத் மின்சாரம் மற்றும் குடிநீர் அரசுத் துறையில் பணிபுரிந்தவர்) மற்றோரும் சுகமாய் வசித்து வருகிறோம் .....
ஒரு தினார் நாணயத்தின் இந்திய மதிப்பு 70 ரூபாய் என்கிற உச்சத்தை அடைந்து அச்சத்தை தவிர்த்து குவைத் முன்னேறும் கால கட்டம் ....
டிக் டிக்கென்று நகர்ந்த கடிகாரத்தின் சின்ன முள்ளும் பெரிய முள்ளும் அதிகாலை 5 மணியை தொட்டதும் அலாரம் ஓசை எழுப்பி உறங்கிய எங்களை ஆசையோடு எழுப்பியது ....
எனது வாழ்க்கையினை மட்டுமல்ல லட்சக் கணக்காக பணியாற்றும் வெளி நாட்டு மக்களின் வாழ்க்கையினை புரட்டிப் போடுவதற்காக எங்களை விரட்டி எழுப்பிய அதிகாலை நேரம் என்பதை கிருபையாளன் அல்லாஹ்வை தவிற நாங்கள் யாரும் உணரவில்லை .....
1990 ஆகஸ்ட் 2 ம் நாள் வியாழனன்று அதிகாலை பணிக்குச் செல்ல நான் தயாராகி அறைகளின் வெளி வராந்தாவில் பல் துலக்கிக் கொண்டிருக்கிறேன் .....
ஏற்கனவே பணிகளுக்குச் சென்று எங்களோடு தங்கும் திருச்சி தஞ்சாவூரை சார்ந்த என்னை விட மூத்த சகோதரர்கள் எங்கள் வளாகத்தின் முன் பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்து ஈராக் படைகள் குவைத் எல்லையில் நுழைந்து விட்டதால் எல்லா கம்பெனிகளும் பூட்டு என்று நடைகள் தளர்ந்து வருகிறார்கள் ....
எனது வாயிக்குள் சுழன்ற பற்பசையை ஓடையில் துப்பி விட்டு என்ன பாய் சொல்கிறீர்கள் என்று நான் கேட்டதும் ஆமாம் உண்மை என்றார்கள் ....
27 வயது நிரம்பிய நானும் எனது பணிக்கு புறப்பட்டு நடந்து சாலையை அடைந்ததும் சற்று நேரத்தில் எங்களது தொழிலக மஞ்சள் நிற பேருந்து காலை வெளிச்சத்தை தனக்குள் போர்த்தியவாறு எங்களை அமர்த்தி 30 கிலோ மீட்டர் தூரமுள்ள மினா அப்துல்லா என்கிற நகருக்கு சென்றதும் Kuwait Lubricant Oil Company Ltd என்கிற எங்கள் தொழிலகமும் திறக்கவில்லை என்று உறுதியானதால் பன்னாட்டு தொழிலாளிகளோடு மீண்டும் நான் வீட்டுக்கு திரும்பியதும் அங்காங்கே குழுமிய தமிழக சகோதரர்கள் நிலைமைகளை ஒருவருக்கொருவர் சூடாக பரிமாறுகிறார்கள் .....
இரவு டின்னர் சாப்பிட்டு ஓய்வெடுத்த மன்னர் ஈராக் படையெடுப்பு செய்திகளை கேட்டதும் அரண்மணையின் பின் பக்க வாசல்கள் வழியாக காலையில் தப்பித்து தமது காரில் சவுதி அரேபியா செல்கிறார் என்றும் ......
அதே வேளையில் ஈராக் படைகள் அரண்மனையின் முன் பக்க வாசலில் நுழைந்து மன்னரை தேடினார்களாம் என்கிற செய்திகளும் எங்களுக்கு எட்டுகிறது ....
அதற்கடுத்து தொடர்ந்த ஈராக் ஆக்கிரமிப்புகளை செவியுற்றதும் எங்களது உள்ளத்து அறைகளின் இடுக்குகளில்
கவலைகள் எனும் சிலந்திகள் சூழ்ந்து வலைகள் பின்னத் துவங்கியது .....
தொடரும் ....
(இது நீண்டதொரு தொடர் ...ஒரே பதிவில் அனைத்தையும் எழுதிட இயலாது அவ்வப்போது தொடர்கிறேன் ...
இன்ஷா அல்லாஹ்)
அன்புடன்
அப்துல் கபூர்
No comments:
Post a Comment