Abdul Gafoor
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...
என்னை தீண்டும் நினைவுகளோடு மீண்டும்
உங்களோடு கைகுலுக்கி அமருகிறேன் ....
வைராக்கிய குணமுள்ள ஈராக்கிய அதிபர் சதாம் உசைன் அவர்களின் உருளும் கரு விழிகள் பாய்ச்சும் கம்பீரப் பார்வையால் நாவினில் தவழ்ந்து உதடுகளில் சுருளும் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு ஈராக் ராணுவம் ஆக்ரோஷமாக செயல்படத் துவங்கியது ....
குவைத் மன்னரின் அரண்மனை ... பாராளுமன்றம் .... தபால் துறை .... தகவல் தொடர்பு இலாகா ....தேசிய வங்கிகள் .... தொலைக் காட்சி நிலையம் .... அரசு மருத்துவமனைகள் .... அரசு பள்ளிக்கூடங்கள் .... மத்திய சிறைச்சாலை போன்ற அரசு நிர்வாகங்கள் ஒவ்வொன்றாக முற்றுகையிட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் இயங்க வைத்தது ....
பத்தாண்டுகளுக்கு மேலாக ஈரான் ஈராக் போரில் தொழில் வளங்களையும் பொருளாதரத்தையும் இழந்து தவிக்கும் ஈராக்கில் வறுமையும் பஞ்சமும் ஜமுக்காளங்களை விரிந்து அசையாமல் அமர்ந்து கொண்டது ....
உலகத்தர வரிசையில் முதல் இடத்த்தில் இருந்த ஈராக்கின் கச்சா எண்ணெயை (Crude Oil) விற்று கிடைத்த வருமானத்தின் பெரும் பகுதியை சதாம் உசைன் தமது ராணுவத்திற்கு தீனியாக கொடுத்து ரஷ்யாவிடமிருந்து போர் தளவாடங்களை வாங்கிக் குவித்து ராணுவக் கரங்களால் சுற்றுப்புற நாடுகளுக்கு பகிரங்கமாக சவால் விட்டார் ....
தரைப் படையில் தேர்ச்சி பெற்ற யானை பலம் பொருந்திய ஈராக் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க இயலாமல் பூனை பலம் கொண்ட குவைத் ராணுவம் செயலிழந்து அடிபணிந்தது ....
வசதிகள் படைத்த குவைத்தியர்கள் தங்கள் கைகளில் கிடைத்த உடைமைகளை அவசரமாக தமது வாகனங்களில் அள்ளிப் போட்டு சவுதி அரேபியாவை நோக்கி குடும்பத்தோடு பயணித்தனர் ....
தகவல் தொடர்புகளுக்கு பிரிட்டிஷ் வானொலி 24 மணி நேரமும் கைகொடுத்ததை எங்களால் மறக்க இயலாது ....
பசிக்கு உணவு கேட்ட குடல்களை பொருட்படுத்தாமல் பிபிசி ஆங்கில செய்திகளுக்காக எங்களது செவி மடல்களை விரித்து வைத்திருந்தோம் .....
தமது சொந்த மருமகனை குவைத் தேசத்தின் கவர்னராக சதாம் உசைன் அறிவித்து சதம் அடித்த மகிழ்ச்சியில் திளைத்தார் ....
வங்கிகளில் தங்கியிருக்கும் 70 ₹ மதிப்புள்ள குவைத் தினார்கள் அனைத்தும் 10 ₹ க்கும் குறைவான மதிப்புள்ள ஈராக் தினார்களாக மாறுகிறது என்கிற அறிவிப்பு வெளியானதும் நாங்கள் வசிக்கும் அறைகள் முழுவதும் முடங்கிக் கிடந்த எங்களது கன்னங்களில் அறைகள் விழுந்த உணர்வு ஏற்பட்டது ....
வெயிலில் வாடி குளிரில் நடுங்கி இரவும் பகலும் பணியாற்றிய தொழிலாளர்களாகிய எங்களால் சகிக்க இயலவில்லை .....
04.08.1990 சனிக்கிழமை காலை ஈராக் ராணுவம் நாங்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து விட்டதாக திகிலடையும் தகவல்கள் கிடைத்ததும் என்னைப் போன்ற இளம் இரத்தங்கள் ராணுவ வண்டிகள் நகர்ந்து செல்லும் களம் காண துடித்தது ....
தொடரும் ....
அன்புடன்
அப்துல் கபூர்
Abdul Gafoor
No comments:
Post a Comment