Friday, August 19, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவுற்றது ...ஏழாம் பாகம் ...

 Abdul Gafoor
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....

கப்பல் பயணம் ....

அனுபவ ஆற்றில் நினைவுத் தூண்டில்களை இடுகிறேன் ....

இஸ்லாமிய சரித்திரங்களில் இடம் பெற்ற ஈராக்கின் பாக்தாத் நகருக்கு முந்தைய கடல் நகரத்தை எங்களது பேருந்துகள் நெருங்குகிறது ....

அசரா வண்ணம் அலை எழுப்பும் பசரா துறைமுக நுழைவு வாயிலில் சோகத்தின் உறைமுக பயணிகளாகிய நாங்கள் மெதுவாய் இறங்குகிறோம் ....

முகலாய சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளில் ஒருவரின் பெயரை தாங்கும் அக்பர் கப்பல் எங்களை தாங்கும் ஏற்பாடுகளில் பரபரப்பாய் நிற்கிறது ...

ராணுவ தேசத்தின் கடலில் நங்கூரமிட்டு கம்பீரமாக அக்பர் கப்பல் மிதக்க ...
எனது மனக் கடலில் ஏழு ஆண்டு கால (10.10.1983 - 23.10.1990) அனுபவக் கப்பல் ஞாபக நங்கூரமிட்டு மிதக்க துவங்குகிறது ....


அதிக எடைகளை தூக்கும் ராட்சசக் கிரேன் எங்களது பொருட்களை பெரிய பைகளில் கட்டி தமது எந்திரக் கைகளில் சுருட்டி கப்பலுக்குள் உருட்டி விடுகிறது ....

நில்லென்று சொன்னாலும் நில்லாத இரவு நேர குளிர் எனது தளிர் முகத்தை சில்லென்று கீச்சிய சூழல் என்னை கப்பலுக்குள் செல்லென்று அறிவுறுத்தியது ....

வட மாநில மக்களும் வாடா மாநில தமிழ் மக்களும் கப்பலுக்குள் நுழைய ஆயத்தமாகி உள்ளே செல்கிறோம் ....

பழங்கால பொருட்களை குழைய வைத்து உருவாக்கிய பழைய கப்பல் எனது உள்ளத்து மடிகளில் உறங்கிய உற்சாகத்தை தட்டி எழுப்பியது ....

தனது உடற் பகுதிக்குள் பெறப்பட்ட 745 பயணிகளோடு புறப்பட்ட கப்பல் கடற் பகுதிக்குள் வரையறுக்கப்பட்ட மைல்களை கடக்கத் துவங்குகிறது ....

மூன்றடுக்கு கப்பலில் படுக்கையறைகள் குளியலறைகள் மற்றும் அனைத்தும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது ....

கப்பலில் வித்தியாசமான ருசியில் சமைத்த உணவு பதார்த்தங்கள் வேளைகள் தவறாமல் எங்கள் வயிற்றுக்குள் யதார்த்தமாய் புகுந்து குடலுக்குள் ஐக்கியமாகிறது ....

கப்பலின் வெளி வராந்தாவில் ஓய்வெடுத்து கடல் அழகை ரசித்தும்....
அவரவர் நண்பர்களோடு அளவளாவி பொழுதுகளை கழித்தும்....
எதிர்கால கனவுகளை சுமந்தும் பயணிக்கிறோம் ....

தன்னாடு செல்லும் அக்பர் கப்பலை பன்னாடு படைகளை உள்ளடக்கிய மற்றொரு கப்பல் சைகை காட்டி நிறுத்தியதும் ....
நிலத்திலும் சோதனை நீரிலும் சோதனையா என்று எங்கள் வேதனையான மனசில் சிந்தனைகள் உறுத்தியது ....

நமது கப்பல் மாலுமிகளிடம் விவரங்களை கேட்டறிந்து கடல் வழி பரிசோதனைகள் முடிந்த பின்னர் 7 நாட்கள் கழித்து இறையருளால் 30.10.1990 அன்று அக்பர் கப்பல் நுரை பொங்கும் இந்தியப் பெருங்கடலின் கரை தொட்டது ...

பம்பாய் துறைமுகம் இரு கரங்கள் நீட்டி எங்களை தெம்பாய் வரவேற்கிறது ....

தொடரும்
இன்ஷா அல்லாஹ் ...

அன்புடன்

அப்துல் கபூர் Abdul Gafoor

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails