Abdul Gafoor
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் ...
ஈராக்கின் மற்றுமொரு நட்பு நாடான ஜோர்டானிலிருந்து கனரக வாகனங்களில் பதப்படுத்தி குளிரூட்டப்பட்ட இறைச்சிகளும் கோழிகளும் காய்காற்களும் தரை மார்க்கமாக ஈராக் வழியாக குவைத்தின் பாலைவனப் பகுதியின் கரை இறங்கி விற்பனைக்கு விரிக்கப்பட்டிருக்கும் ....
எனது மாமா AVM சின்னப்பா அவர்களின் நட்பு வட்டத்தில் இருக்கைகளிட்டு அமர்ந்திருக்கும் நண்பர்களோடு நமதூர் பவானி வீட்டு யூசுப் அண்ணனும் இடம் பிடித்திருந்தவர் ....
இவர் வைத்திருந்த சிறிய காரில் இவரோடு நாங்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் சால்மியா என்னும் ஊருக்கு உணவுப் பொருட்கள் வாங்க பயணிப்போம் ...
மனதில் வேதனைகள் சுமந்து செல்லும் எங்களை ஆங்காங்கே நிறுத்தங்களில் ஈராக் ராணுவத்தினர் சோதனைகள் செய்து அனுப்புவார்கள் ...
ராணுவ வீரர்கள் பாலையில் குண்டுகள் தோண்டி மணல் சாக்குகளை அடுக்கி துப்பாக்கிகளை நீட்டியவாறு அங்கங்கு அமர்ந்திருப்பார்கள் .....
உணவுப் பொருட்களை சமைத்து நான்கு நபர்கள் சாப்பிடும் உணவுகளை பதினாறு நபர்கள் சாப்பிட்டு பசியாறாது மனசை ஆறுதல் படுத்தி தேற்றிக் கொள்வோம் ....
இந்திய பிரதமர் விபி சிங் அவர்கள் வெளியுறவு அமைச்சர் ஐ கே குஜ்ராலை தமது தூதுவராக அனுப்பி ஈராக் அதிபரை சந்தித்து இந்தியர்களை திருப்பி அனுப்ப அனுமதி வழங்குமாறு பேச்சு வார்த்தைகள் நிகழத் துவங்கி தொடர்கிறது ....
சுற்றுப்புற குவைத்தியர் வீடுகளில் யாருமிலலாததால் யாவும் பூட்டப்பட்டிருக்கிறது ....
ஒரு நாள் ...
காலை மணி 10 ஐ நெருங்குகிறது என்னோடு வேறு யாருமல்ல எனது மாமா ஈராக்கியர் கட்டுப்பாட்டிலிருக்கும் அரசுத் துறை பணிக்கு சென்றுள்ளார் ...
நான் மட்டும் எங்களது அறையில் ராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவு என்ன நமக்கு விடிவு எப்போது வரும் என்கிற சிந்தனையில் மூழ்கி அமர்ந்திருக்கிறேன் ....
எங்கள் வராந்தாவின் முன் பக்க இரும்புக் கதவுகள் பலமாக இடிக்கும் சப்தம் கேட்கிறது
எனது சிந்தனைகளை கலைத்து வெளியேறி நான் கண்டு என்னை மலைத்து நிற்க வைத்த காட்சி இன்னும் என் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது ....
இரண்டு ஈராக் ராணுவ வீரர்கள் மதிலின் மீதேறி கீழே நிசாரமாக வராந்தாவினுள் குதிக்கிறார்கள் ...
வாலிப தோற்றம் முறுக்கேறிய உடம்பு ராணுவ உடையில் நிமிர்ந்த நடையில்...
டக் டக் டக்கென்று பூட்ஸ் எழுப்பும் ஓசையோடு துப்பாக்கிகளை ஏந்தியவாறு என்னை நெருங்குகிறார்கள் ...
அவர்களுக்கும் எனக்கும் இடையே இருக்கும் இடைவெளி கை நீட்டும் தூரமாய் சுருங்குகிறது ....
திக் திக் திக்கென்று எனது இதயம் வழக்கத்துக்கு மாறாக படபடக்கிறது ....
தொடரும்
இனஷா அல்லாஹ் ....
நினைவுகளுடன்
அன்புடன் Abdul Gafoor அப்துல் கபூர்
No comments:
Post a Comment