Monday, August 22, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவுற்றது .. எட்டாம் பாகம் ../ அப்துல் கபூர்

ரயில் பயணம் ...

எனது நினைவுத் தொட்டிலில் ஞாபகக் குழந்தையை தாலாட்டுகிறேன் ...

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு
26 ஆண்டுகள் நிறைவுற்றது .. எட்டாம் பாகம் ..

இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

ஏழு நாட்கள் பயணித்த கப்பல் அனுபவம் எனது மனத் திரையினை அலங்கரிக்க கடலின் கரையினை தொட்ட கப்பலிலிருந்து இறங்கியதும் எனது கால்கள் தரையினை தொட்டு நடக்கத் துவங்கியது .....

தாயகத்தோடு தங்க வந்த எங்களை துறைமுக சுங்க அதிகாரிகள் சோதனையிட்டு அகதிகளாய் நோக்கிய பார்வை எங்களின் மீது சகதிகளாய் விழுந்தது ....

நாங்கள் இனி எந்த நாட்டுக்கு சென்றாலும் இந்திய அரசாங்கத்திற்கு 10,000 ₹ செலுத்த வேண்டும் என்கிற Bond பத்திர முத்திரையினை பத்திரமாக எங்களது கடவுச் சீட்டுகளில் பதித்தனர்....

பின்னர் அதிகாரிகள் எங்கள் எல்லோருக்கும் அவரவர் மாநிலங்களுக்கு செல்ல இலவச ரயில் சீட்டுகளை வழங்கி ஆளுக்கு 100 ₹ யும் பயணச் செலவாக தந்தனர் ...

அரசு பள்ளிக்கூடத்தில் அன்றைய இரவு தங்குவதற்காக துறைமுகத்திலிருந்து பேருந்துகள் எங்களை சுமந்து சென்றது ....

எனது முதல் பிரவேசம் என்பதால் தேசிய மொழி கருவாகிய மகாராஷ்ட்ராவின் காட்சிகள் என்னை பரவசம் கொள்ள வைத்தது ..
பம்பாய் நகரும் அங்குள்ள சாலைகளில் நகரும் போக்குவரத்துகளும் எனது கண்களுக்கு களிப்பூட்டியது ....

தங்கும் பள்ளிக்கூடம் சேர்ந்து இலவச உணவருந்தி வகுப்பறைகளில் இரவு தங்கி அடுத்த நாள் வெயிலேறிய மதிய வேளையில் ஸ்டேஷன் வந்தடைந்து உடமைகளோடு ரயிலேறிய நாங்கள் புறப்பட காத்திருந்தோம் .....

ரயிலின் உள்ளேயும் வெளியேயும் பல மொழிகளில் உரையாடிய பிரயாணிகளின் கூட்ட நெரிசலிலும் சில்லரை வியாபாரிகளின் சப்தத்திலும் ரயில்வே ஸ்டேஷன் பரபரப்பில் மூழ்கியது ....

குழாய்களில் சிக்கிய புகையினை கக்கிய ரயில் மெல்ல நகர்ந்து வேகத்தை மிகைப்படுத்தி கர்நாடக ஆந்திர மாநிலங்களை கடந்து சென்னை வந்தடைந்து மீண்டும் பயணத்தை துவங்கி விரைந்ததும் ....

மாவட்ட ஸ்டேஷன்களின் நிறுத்தங்களில் எங்களோடு பயணித்த நண்பர்கள் ஒவ்வொருவராக இறங்கி கையசைத்து இனி எங்கே எப்போது காண்போம் என கனத்த இதயங்களோடு பரிந்து பேசி பிரிந்து செல்கிறார்கள் ....

எனது நாசிகளை துளைத்த சிறந்த மண்ணின் வாசனை நான் பிறந்த மண்ணான நாகர்கோயில் சந்திப்பில் வேகம் குறைந்து ரயில் நுழைவதை எனக்கு உணர்த்தியது .....

அடுத்த பதிவில் முடியும்
இன்ஷா அல்லாஹ் ...

அன்புடன்
அப்துல் கபூர்
 Abdul Gafoor

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails