Abdul Gafoor
அஸ்ஸலாமு அலைக்கும் ....
குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கின் அக்கிரமத்தை பன்னாடுகள் கண்டனம் தெரிவித்தும் படைகளை விலக்க இயலாது என ஆக்ரோஷமாய் கர்ஜித்த சதாம் உசைனின் பிடிவாதம் எஞ்சிய எங்களை அஞ்சிய சூழலுக்கு தள்ளி மிஞ்சிய நம்பிக்கையை மங்கச் செய்தது ....
குவைத் பொது மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணையும் சாலைகளில் சதாமின் சுவரொட்டிகளை கிழித்த குவைத்திகளையும் ராணுவத் துப்பாக்கிகள் துளைத்த செய்திகள் எமது காதுகளை துளைத்தது ....
மூன்று தடவைகள் சதாம் உசைனைப் போல் வேடமிட்ட மூவர் குவைத் ராணுவ முகாம்களை வட்டமிட்ட செய்திகளும் அதில் ஒருவர் அசல் சதாம் என்கிற தகவலும் அவ்வப்போது வானொலிகள் வாயிலாக எங்களுக்கு கிட்டியது ...
நமது நாட்டவர்கள் அவரவர் மாநிலங்களுக்குச் செல்ல தயாராகுங்கள் என்று இந்திய தூதரகம் சிந்திய அறிவிப்பு எங்களது எண்ணமெனும் பாத்திரங்களில் ஊருக்கு செல்கிற உற்சாகமெனும் உணவுகளை சமைக்கத் துவங்கியது ....
கடவுச் சீட்டுகளை தூதரகத்தில் பதிவு செய்யும் பணிகள் துவங்கி விரைவாக முடிந்தது ....
ஈராக்கின் சதி வலையில் சிக்கி விதி விளையாடிய கதி நிலைக்கு தள்ளப்பட்டு குத்தப்பட்ட அகதி என்கிற முத்திரை எங்களது முகத்திரை மீது வேதனைக் கோடுகளை வரைந்தது ....
23.10.1990 அன்று கிடைத்த உடமைகளை கட்டிக் கொண்டு மாலை 4 மணிக்கு தரை மார்க்கமாய் ஈராக் செல்ல தூதரகம் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளில் ஒவ்வொருவராக ஏறி அமர்ந்தோம் ...
புகையினை காற்றுக்கு விளம்பிய பேருந்துகள் யாவும் கிளம்பிய தருணங்களில் எதிர் காலம் எப்படி அமையுமோ என்று புதிர் போடும் கேள்விகள் எனக்குள் விரிய குவைத்தை பிரிய மனமில்லாத எனது விழிகளிலிருந்து கண்ணீர் சரிய அந்த துளிகள் என் முகத்தை நனைத்து இறைவன் இருக்கிறான் கவலை வேண்டாம் என புரிய வைத்தது ....
இருட்டு சூழந்த வேளையில் ராணுவப் பல்லை நீட்டிய ஈராக் எல்லை எங்களை பயமுறுத்தி வரவேற்றது ....
ஈரானோடு மல்லுக் கட்டி சண்டையிட்ட பாதிப்பால் ஈராக்கின் உயர்ந்த மாளிகைகளில் குண்டுகள் துளைத்திருந்த வடுக்கள் சுவர்களில் வண்டுகள் போல் சுழன்று கிடந்தது ....
ராணுவ அதிபர் சதாமின் பெரிய உருவப் படங்கள் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தது ...
ராணுவ வீரர்கள் அனைவரும் குவைத்தில் முகாமிட்டதால் அதிகமாக ஈராக்கில் அவர்கள் தென்படவில்லை ....
வீதிகளில் வெளிச்சத்தை சிந்த இயலாது மெளனமாய் தொங்கிய விளக்குகள் இருட்டை வேகமாய் பரப்பியது .....
பேருந்துகள் தமது விசைகளை கூட்டி நாங்கள் செல்லும் திசைகளை நோக்கி பயணத்தை தொடந்தது ....
தொடரும் ....
அன்புடன்
அப்துல் கபூர்
No comments:
Post a Comment